Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

மும்பை: 2-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை; நிலச்சரிவு! - 32 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

மும்பையில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை சில மணி நேரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்தது. வெறும் 3 மணி நேரத்தில் 250 மிமீ அளவுக்கு மழை பெய்தது. இது ஞயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு 305 மிமீ என்ற அளவுக்கு அதிகரித்தது. இம்மழையால் இரவில் செம்பூர் மற்றும் விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. செம்பூரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மேலும் சில உடல்களை மீட்டனர். இதனால் செம்பூரில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. இதே போன்று விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது.

சாலையில் வெள்ளப்பெருக்கு

பாண்டூப் பகுதியில் சுவர் இடிந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முதல்வர் உத்தவ் தாக்கரே உயர் அதிகாரிகளுடன் மழை சேதம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

மழையால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். மழை காரணமாக 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் மின் கசிவு ஏற்பட்டது. கிங்சர்க்கிள் காந்தி மார்க்கெட் பகுதி முற்றிலும் தண்ணீரால் சூழ்ந்தது. மழை காரணமாக மும்பையில் புறநகர் ரயில் சேவை முடங்கியது. விமான போக்குவரத்தும் காலை 5.30 மணி வரை நிறுத்தப்பட்டு சில விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டது. காந்திவலி உட்பட சில இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மாநகராட்சி ஊழியர்கள் மழை நீர் தேங்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு மோட்டார் மூலம் தண்ணீரை பம்ப் செய்து வெளியேர்ரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஞயிற்றுக்கிழமை மாலையிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. மும்பையில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பூமிக்கு அடியில் கான்கிரீட் குளங்கள்... மழை வெள்ளத்தில் இருந்து விடுபடுமா மும்பை?

பாண்டூப் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மோட்டார் அறைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மும்பையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மோட்டாரை சரி செய்யும் பணில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கும் படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில் போக்குவரத்து நிறுத்தம்

கன மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது. தற்போது பெய்துள்ள மழை 2005-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி மும்பையை புரட்டிப்போட்ட மழையை நினைவு படுத்துவதாக இருந்தது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஜூலை மாதம் மும்பையில் எப்போதும் அதிக அளவில் மழை பெய்வது வழக்கம். பருவ மழை காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மும்பை மக்களின் வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு கன மழை பெய்வதுண்டு.



source https://www.vikatan.com/news/india/2nd-day-of-rains-in-mumbai-affects-normal-life-death-toll-rises-to-32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக