Ad

வியாழன், 17 ஜூன், 2021

WTC இறுதிச்சுற்று - 9: Gabba கோட்டையைச் சரித்த ரஹானேவின் இளம் படை! Border Gavaskar Trophy 2020-21

நான்காவது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸ், தொடரை வெல்ல இந்திய அணிக்கு இன்னும் 133 ரன்கள் தேவை. புஜாராவும் ரிஷப் பண்ட்டும் களத்தில் இருக்கின்றனர். ஒருபக்கம் புஜாரா மிகப்பொறுமையாகவும் கவனமாகவும் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டிற்கு குறிவைக்கின்றனர் ஆஸ்திரேலிய பௌலர்கள். சென்ற ஆட்டத்தில் தோல்வி பயத்தைக் காட்டிவிட்டுச் சென்ற பண்ட்டிற்கு அட்டாகிங் ஃபீல்ட் செட்டை அமைக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். அதில் முக்கியமான பொசிஷனான பண்ட் அடிக்கடி இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் லாங்-ஆனில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி அவர் தவறு செய்யக் காத்திருக்கிறார். ஆனால், இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் பண்ட் அருமையாக தடுப்பாட்டத்தைக் கையில் எடுக்கிறார்.

#AUSvIND

70-வது ஓவரை பண்ட்டிற்கு வீச வருகிறார் நாதன் லயோன். முதல் ஐந்து பந்துகளை ரன் ஏதும் அடிக்காமல் டிபன்ஸ் ஆடுகிறார் பண்ட். இது வேலைக்காவது போல என்று கடைசி ஒரு பந்திற்காக லாங்-ஆன் ஃபீல்டரை உள்ள வந்து நிற்க சொல்லிவிட்டு பந்தை வீசுகிறார் லயோன். லாங்-ஆன் ஃபீல்டர் உள்ளே வந்து நின்ற முதல் பந்தையே டவுன் த கிரீஸ் இறங்கி லாங்-ஆன் தலைக்கு மேலே சிக்ஸர் ஒன்றை பறக்க விடுகிறார் பண்ட். இதுதான் ரிஷப் பண்ட். டெஸ்ட்டோ, டி20 யோ, ஒரு நாள் ஆட்டமோ இதுதான் அவரின் ஆட்டம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளுக்கு பண்ட்டின் ஆட்டமுறை சரிவராது என்று கூறிவந்தவர்கள் தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமானவர்களுள் ஒருவர் பண்ட் எனப் புகழ்ந்து தள்ளும் அளவிற்கு இருந்தது இத்தொடரில் அவரது ஆட்டம்.

மிக இளைய வயதில் தோனியின் இடத்திற்கு ஏற்றப்பட்ட பண்ட் அவ்விடத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறியது என்னவோ உண்மைதான். ஆனால், அவ்வீரனின் தன்னம்பிக்கையை குலைப்பது போல தேர்வாளர்களே அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டனர். இதனால், இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய எக்கச்சக்க ப்ரஷரில் இருந்தார் பண்ட். ஆனால், அவரோ இந்த மொத்த தொடரின் சூப்பர் ஹீரோவாகவும் ஆனார். பண்ட் மட்டும்தான் சூப்பர் ஹீரோவா? நிச்சயமாக இல்லை. இத்தொடரின் ஆட்டத்திற்கு ஆட்டம் இன்னிங்ஸுக்கு இன்னிங்ஸ் ஏன் செஷனிக்கு செஷன் புதிய புதிய சூப்பர் ஹீரோக்கள் இந்திய அணியில் உருவாகி கொண்டே இருந்தனர். இவர்களை அழிக்க ஒரு சூப்பர் பவரை ஆஸ்திரேலியா அணி கடைசி வரை கண்டுபிடிக்க இயலாமலேயே சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது.

#AUSvIND

அடிலெய்ட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பௌலர்களிடம் சொற்ப ரன்களில் மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்ததையடுத்து இத்தனை வருடம் கோலி கட்டமைத்த அணியினை கண்டு உலகமே சிரித்தது. ஸ்மித்தும் வார்னரும் வேறு தற்போது அணியில் இருப்பதால் இம்முறை இந்திய அணிக்கு நிச்சயம் வைட்வாஷ்தான் என்று அப்பொழுதே பலரும் கணிக்கத் தொடங்கினர். இப்படி கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க அணியில் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதால் கோலியும் இல்லை.

அணியின் கேப்டனாக பொறுப்பேற்கும் ரஹானேவிற்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை சவால்கள். இந்த அனைத்து சவால்களையும் நேருக்குநேர் எதிர்கொள்ள ஆயத்தமாகும்போது மறுப்பக்கம் அணியில் தொடர் காயங்கள். ஆனால், எதற்கும் அசரவில்லை ரஹானே. பாக்சிங் தினத்தன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் கேப்டன் என்ற முறையில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திடுவார் அவர். முதல் டெஸ்டில் காயம் காரணமாக ஷமி வெளியேறியதை போல இரண்டாவது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயப்பட்டு வெளியேறினார். ஷமியின் பொறுப்பை சிராஜ் கைகளிலும் உமேஷின் பொறுப்பை நவ்தீப் சைனியிடமும் நம்பிக்கையாக ஒப்படைத்தது மட்டுமல்லாமல் அவர்களை சிறப்பாக வழிநடத்தியும் செல்வார் கேப்டன் ரஹானே.

சிட்னியில் மூன்றாவது டெஸ்ட். ஸ்மித்தின் வலுவான இன்னிங்ஸால் பலமான நிலையில் ஆஸ்திரேலியா. 407 ரன்கள் என்கிற இலக்கை துரத்த தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் நன்றாகவே இருந்தது. இறுதி நாளில் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி நிச்சயம் என்றே ஆஸ்திரேலிய பௌலர்கள் நினைத்திருந்தனர். அதற்கேற்ப விரைவாக ஆட்டமிழப்பார் ரஹானே. இந்திய அணி இப்போட்டியை டிரா செய்தாலே பெரிது என்பது போலத்தான் இருந்தது அப்போதைய நிலை. ஆனால், களத்திற்கு புதிதாக நுழைந்த ரிஷப் பண்ட் திடீரென்று ஆஸ்திரேலிய பௌலர்களை நாலாப்பக்கமும் விளாசத் தொடங்கினார்.

#AUSvIND

இந்திய அணியின் ஸ்கோர் விறுவிறுவென்று உயர, டிரா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெற்றிக்காக ஆடிய பண்ட் 97 ரன்களுக்கு திடீரென்று ஆட்டமிழக்க கூடவே புஜாராவும் பெவிலியன் திரும்பினார். இப்போது களத்தில் ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வின். இவர்களுக்கு அடுத்ததாக களமிறங்க கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஊசிப்போட்டு விட்டு கட்டுடன் காத்திருந்தார் ரவீந்திர ஜடேஜா. அப்போது விஹாரி மற்றும் அஷ்வின் என இருவருக்கும் களத்திலேயே காயம் ஏற்பட தோல்வி நிச்சயம் என்றே முடிவு செய்திருந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால், அக்காயங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் சுமார் 43 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை சமாளித்து யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு மிகச்சிறந்த டிராவை அக்கூட்டணி சாத்தியமாக்கி இருக்கும்.

தொடரை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட், ஆஸ்திரேலிய அணி கடந்த 32 வருடங்களாக தோல்வியே கண்டிராத கப்பா மைதானத்தில். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு பேரடி. பும்ரா, ஜடேஜா மற்றும் அஷ்வின் காயத்தால் அந்த ஆட்டத்திலிருந்து விலக இந்த மிக முக்கியமான போட்டியில் தங்களின் டெஸ்ட் கரியரை தொடங்கினர் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் நடராஜன். ஆஸ்திரேலிய அணியில் இருந்த பௌலர்கள் தங்கள் கரியரில் மொத்தமாக எடுத்த விக்கெட் எண்ணிக்கைக்கும் இந்திய அணியின் கத்துக்குட்டி பௌலர்களின் எண்ணிக்கைக்கும் 1000 விக்கெட்கள் வித்தியாசம் இருந்ததன. அந்தளவு வலிமையாகக் காட்சியளித்தது ஆஸ்திரேலியா.

ஒருவரின் சவாலான நேரங்களில்தான் அவரின் முழு திறனும் வெளிப்படும். இதை மெய்யாக்குவது போல நான்காவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் தவிக்க, உலகத்தின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியை அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களான வாஷியும் தாக்கூரும் மிக எளிதாக சமாளித்து 100 ரன்களுக்கு மேல் இணைந்து குவித்திருப்பார்கள். அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்த இந்த இருவரை வீழ்த்த ஆஸ்திரேலிய பௌலர்கள் படாத பாடுபட்டனர். பேட்டிங்கில் இவர்களிருவர் என்றால் பெளலிங்கில் தனது தந்தையின் இறுதி சடங்குகளில் கூட கலந்துக்கொள்ள நாடு திரும்பாமல் அணியில் இருந்த முகமத் சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

#AUSvIND

இப்படி இளம் வீரர்கள் மொத்தமும் தங்களின் முழு பலத்தை வெளிப்படுத்த கிளைமேக்ஸ் நோக்கி நகர்ந்தது போட்டி. மிகப்பெரிய இலக்குடன் கடைசி நாளில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் தன் பங்கிற்குச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடிவிட்டுச் சென்றார். பின்னர், கேப்டன் ரஹானேவும் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா வெற்றிக்கு ஆடப்போகிறதா இல்லை டிராவை நோக்கி நகர்த்தப்போகிறதா என அனைவரின் மனதிலும் கேள்வி இருக்க களத்திற்குள் வந்தார் பண்ட்.

Also Read: WTC இறுதிச்சுற்று – 8: ஆஸியை அவர்கள் பாணியிலேயே டீல் செய்த இந்தியா! Border Gavaskar Trophy 2018-19

டிராவைப் பற்றி கனவிலும் யோசிக்கமாட்டேன் என்பதுபோல இருந்தது அவரின் ஆட்டம். சென்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தோல்வி பயத்தை மட்டும் காட்டிவிட்டு சென்ற பண்ட், இம்முறை அத்தோல்வியையே அவர்களுக்கு முழுமையாகப் பரிசளித்தார்.

#AUSvIND Rishab pant

ஒரு தேசத்தின் ‘A team’ போன்று காட்சியளித்த அணியிடம் தாங்கள் எப்படித் தோல்வியடைந்தோம் என்று ஆஸ்திரேலியர்களால் நம்பவே முடியவில்லை. ஆம், இத்தனை ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணி வசம் இருந்த Gabba கோட்டையை தன் இளம் வீரர்கள் கொண்டு தரைமட்டமாக்கி இருந்தார் ரஹானே.

எத்தனை போராட்டங்கள், எத்தனை வலிகள், எத்தனை இழப்புகள். இந்த அனைத்து தருணங்களிலும் எதிர்நீச்சல் போட்ட இந்திய அணியின் இந்த இளம் ரத்தங்களின் வெற்றி நிச்சயம் ஒரு உலகக்கோப்பைக்குச் சமம்.

- களம் காண்போம்.



source https://sports.vikatan.com/cricket/remembering-indias-greatest-victory-at-gabba-and-historical-series-win

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக