Ad

வியாழன், 17 ஜூன், 2021

2 அசிஸ்ட், ஒரு பெனால்ட்டி மிஸ்... சொதப்பல் + கலக்கல் கேரத் பேல் #Euro2020

யூரோ கோப்பை 2020 தொடரில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில் சொந்த மண்ணில் ஃபின்லாந்தை எதிர்கொண்டது ரஷ்யா. முதல் போட்டியில் முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ் ஆட்டத்தைக் கையில் எடுத்து டென்மார்க்கை வீழ்த்தியிருந்த ஃபின்லாந்து அணி, இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே சில அட்டாக்குகளை மேற்கொண்டது. டென்மார்க்குக்கு எதிராக உரேனன் கொடுத்த கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கிய பொயன்பயோ, இம்முறை ராய்தாலா கொடுத்த கிராஸை நான்காவது நிமிடத்திலேயே ஹெட்டர் மூலம் கோலாக்கினார். ஆனால், அவர் ஆஃப் சைடில் இருந்ததால் VAR குறுக்கிட, அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு ரஷ்ய வீரர்கள் மிரான்சுக், கோலோவின், கரவேவ் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவற்றை அவர்களால் கோலாக்க முடியவில்லை. அதிலும் கரவேவுக்கு கிடைத்த வாய்ப்பை அட்டகாசமாக கடைசி நொடியில் டேக்கிள் செய்து தடுத்தார் உரோனன். இருந்தாலும், முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் முதல் கோலை ஸ்கோர் செய்தது ரஷ்யா. கேப்டன் ஆர்ம் ஜூபா அற்புதமாக மிரான்சுக்குக்கு வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்க, வலது பக்கம் பெனால்ட்டி ஏரியாவுக்குள் நுழைந்தார் அந்த அட்லான்டா வீரர். பாக்சுக்குள் அற்புதமாக ட்ரிப்பிள் செய்து, இடது காலில் கட் இன் செய்து, போஸ்ட்டின் இடது டாப் கார்னருக்கு பந்தை அனுப்பினார். ரஷ்யா 1, ஃபின்லாந்து 0.

Artem Dzyuba

முதல் பாதியில் உருவாக்கிய அளவுக்கு, இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளாலும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அதனால் போட்டி 1-0 என முடிவுக்கு வந்தது. முதல் போட்டியில் வெறும் 1 ஷாட் மட்டுமே அடித்திருந்த ஃபின்லாந்து, இந்தப் போட்டியில் 11 ஷாட்கள் அடித்தது. ஆனால், முன்பைப் போல ஒன்று மட்டுமே ஆன் டார்கெட் சென்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா.

9.30 மணிக்கு அஜெர்பெய்ஜானின் பகு மைதானத்தில் துருக்கி, வேல்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் இத்தாலிக்கு எதிராகப் படுதோல்வி அடைந்ததால் 2 மாற்றங்களுடன் களமிறங்கியது துருக்கி. வேல்ஸ் அதே ஸ்டார்ட்டிங் லெவனோடு விளையாடியது. ஸ்விட்சர்லாந்துக்கு எதிராகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திடாது சீனியர் வீரர்கள் கேரத் பேல், ஆரோன் ராம்ஸி இருவரும் இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டனர். 24-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு ஒரு அட்டகாச வாய்ப்பு கிடைத்தது. ராம்ஸி பெனால்ட்டி ஏரியாவுக்குள் நுழைந்ததைப் பார்த்த அட்டகாசமான lofted பாஸ் ஒன்றை அனுப்பினார் பேல். ஆனால், அதை ராம்ஸியால் கோலாக மாற்ற முடியவில்லை.

Aaron Ramsey

அந்த வாய்ப்பைத் தவறவிட்டிருந்தாலும் 42-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் ராம்ஸி. கிட்டத்தட்ட அதே மாதிரியான மூவ்மென்ட்தான். ஆனால், இம்முறை மார்பில் சிறப்பாக கன்ட்ரோல் செய்து, வலது காலால் கோலாக்கினார். அதனால், 1-0 என்ற முன்னிலை பெற்றது வேல்ஸ். 60-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு பெனால்ட்டி கிடைத்தது. கேப்டன் பேல், சலிச்சால் ஃபவுல் செய்யப்பட, இரண்டாவது கோலுக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை போஸ்டுக்கு மேலே அடித்து தவறவிட்டார் பேல். துருக்கி சில நல்ல அட்டாக்குகள் செய்தும், அவர்களால் பெரிய அளவில் வேல்ஸ் கோல்கீப்பரை சோதிக்க முடியவில்லை.

கடைசி நிமிடத்தில் வேல்ஸ் அணிக்குக் கிடைத்த கார்னரை அவர்கள் ஷார்ட் கார்னராக எடுக்க, பந்தோடு பாக்சுக்குள் நுழைந்தார் பேல். அங்கு மார்க் செய்யப்படாமல் நின்றுகொண்டிருந்த கானர் ராபர்ட்ஸுக்குப் பாஸ் கொடுக்க, அதை அவர் கோலாக்கினார். அதன்மூலம் 2-0 என வெற்றி பெற்று, அடுத்து சுற்றுக்கான வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டது அந்த அணி.

Manuel Locatelli

ரோமாவில் நள்ளிரவு நடந்த போட்டியில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. முதல் போட்டியில் காயமடைந்த ஃப்ளோரன்ஸி இந்தப் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், 24-வது நிமிடத்தில் கேப்டன் சீலினியும் காயத்தால் வெளியேறினார். அடுத்த இரண்டு நிமிடங்களில் இத்தாலி அணிக்கு முதல் கோல் அடித்தார் மிட்ஃபீல்டர் மானுவேல் லோகடெல்லி. பெரார்டி வலது விங்கில் இருந்து கொடுத்த கிராஸை கோலாக்கினார் அந்த சசூலோ வீரர். இரண்டாவது பாதியில் பரேல்லா கொடுத்த பாஸையும் கோலாக்கி, இத்தாலிக்கு இரண்டு கோல் முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் அவர். 89-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து டிஃபண்டர்கள் செய்த தவறைப் பயன்படுத்தி, மூன்றாவது கோலை அடித்தார் சிரோ இம்மொபிலே. 3-0 என வெற்றி பெற்றது இத்தாலி.

6 புள்ளிகளுடன் குரூப் பிரிவில் முதலிடம் பெற்றிருக்கும் இத்தாலி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. வேல்ஸ், இரண்டாவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.



source https://sports.vikatan.com/football/gareth-bales-assists-helped-wales-register-a-win-over-turkey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக