Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

Sneh Rana : தந்தைக்காக, தாய்நாட்டுக்காக ஒரு எமோஷனல் இன்னிங்ஸ்... யார் இந்த ஸ்நே ராணா?

சத்தமே இல்லாமல் அடுத்தடுத்த சம்பவங்களை செய்து வருகிறது இந்திய பெண்கள் அணி. அறிமுகப் போட்டியிலேயே அதிரடியாக ஆடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையும் ஷெஃபாலி வர்மா ஈர்க்க, இன்னொரு பக்கம் பொறுப்போடு ஆடி போட்டியையே டிரா செய்து ஸ்நே ராணா கவனம் ஈர்த்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து ஸ்நே ராணா, சிட்னியில் அஷ்வினும் ஹனுமா விஹாரியும் ஆடியதை போன்ற ஒரு ஆட்டத்தை ஆடியுள்ளார். யார் இந்த ஸ்நே ராணா?

பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல நாடுகள் ஆர்வம் காட்டுவதில்லை. இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மட்டுமே ஆஷஸ் உள்பட ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இந்தியாவும் கடந்த 2014-க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமில்லாமலேயே இருந்தது.

2020 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கவனம் பெற்றதால், பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையில் டெஸ்ட் போட்டிகளின் பக்கமும் பிசிசிஐ கவனம் செலுத்தியது. இதன் விளைவாக, 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி திட்டமிடப்பட்டது. பிரிஸ்டலில் நடந்து முடிந்திருக்கும் இந்த போட்டியைத்தான் ஸ்நே ராணாவின் அசாத்தியமான ஆட்டத்தால் இந்திய அணி டிரா செய்திருக்கிறது.

Sneh rana

இங்கிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 396 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்த முதல் இன்னிங்ஸிலும் ஆஃப் ஸ்பின்னரான ஸ்நே ராணா சிறப்பாகப் பந்துவீசி மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். விக்கெட்டுகளை விட ஸ்நே ராணாவின் உறுதித்தன்மை எல்லோரையும் அதிகம் கவர்ந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 122 ஓவர்களை ஆடியிருந்தது. இதில், ஸ்நே ராணா மட்டும் 40 ஓவர்களை வீசியிருந்தார். ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஓவர்களை ஸ்நே ராணா மட்டுமே வீசியிருக்கிறார்.

ஆஃப் ஸ்பின்னராகவே இருந்தாலும் இதற்கு ஒரு அசாத்தியமான உடல் வலிமை தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த போட்டி நடைபெறும் பிரிஸ்டல் மைதானத்தில் கடந்த வாரம் வரை கவுன்ட்டி போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச்தான் இந்த போட்டிக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த பழைய பிட்ச்சின் தன்மை ஸ்நே ராணாவின் சுழலுக்கு பக்கபலமாக இருந்தது.

396 ரன்களை தாண்டி லீட் வைக்க வேண்டும் என்கிற இமாலய இலக்குடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், ஸ்மிருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற எல்லாரும் சொதப்பியதால் இந்திய அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 165 ரன்கள் பின்னடைவு. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்து இன்னிங்ஸ் வெற்றிக்கு டார்கெட் செய்தது.

முதல் இன்னிங்ஸை போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அதிரடியாக அரைசதம் அடித்து அவுட் ஆனார். தீப்தி ஷர்மா பொறுமையாக ஒரு அரைசதம் அடித்தும் பூனம் ராவர் கொஞ்ச நேரம் நின்றும் அவுட் ஆகினர். போட்டியை காப்பாற்ற இந்த இன்னிங்ஸெல்லாம் போதுமானதாக இல்லை. வெறும் 24 ரன்கள் முன்னிலையோடு 189-6 என்ற நிலையில் முக்கிய பேட்ஸ்மேன்களை எல்லாம் இழந்து இந்திய அணி தவித்துக் கொண்டிருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் இந்தியாவை ஆல் அவுட் ஆக்கி, போட்டியை வென்றுவிட வேண்டும் என்பதே இங்கிலாந்தின் கேம் பிளான்.

Sneh rana

இந்நிலையில்தான் நம்பர் 8 பேட்டராக ஸ்நே ராணா வந்தார். நெருக்கடிகளும் அழுத்தங்களும் ஏற்படுத்தும் அட்ரினல் ரஷ்கள் எப்போதும் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கும். உதாரணம், இந்தியாவின் ஆஸ்திரேலிய சீரிஸ். இங்கேயும் நெருக்கடிகள் கொடுத்த அட்ரினல் ரஷ்ஷில் ஒரு சூப்பர் உமன் உருவாக தொடங்கினார்.

இங்கிலாந்து ஆல் அவுட்டுக்கு திட்டமிட்ட அரைமணி நேரம் ஒரு மணி நேரமானது, ஒரு மணி நேரம், ஒரு செஷன் ஆனது. எல்லாவற்றுக்கும் காரணம், ஸ்நே ராணா என்னும் சூப்பர் உமன்! ஒரு அஷ்வினும், விஹாரியும், பன்ட்டும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு என்ன மேஜிக்கை செய்தார்களோ அதே மேஜிக்கை ஸ்நே ராணா இங்கே செய்தார். 71-வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்த ராணா கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து 154 பந்துகளில் 80 ரன்களை சேர்த்தார்.

மொத்தம் 50 ஓவர்கள் க்ரீஸில் நின்றார் ஸ்நே ராணா.

இதில், ஷிகா பாண்டேவுடன் 18 ஓவர்கள் நின்று 41 ரன்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப்பும், தனியா பாட்டியாவுடன் 30 ஓவர்கள் நின்று ஒரு 104 பார்ட்னர்ஷிப்பும் அடக்கம். ஸ்நே ராணாவின் இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்கள்தான் ஆட்டத்தை டிரா செய்ய காரணமாக அமைந்தது. மேலும், இந்திய அணி 179 ரன்களை முன்னிலை எடுத்தது. ஒருவேளை ஆண்கள் கிரிக்கெட்டைபோல பெண்கள் கிரிக்கெட்டுக்கும் ஐந்தாவது நாள் ஆட்டம் இருந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கக்கூட செய்யும்.

நேற்றைய நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் கொஞ்சம் சீக்கிரமே முடித்து வைக்கப்பட்டது. எஞ்சியிருந்த ஒரு சில ஓவர்கள் வீசப்பட்டிருந்தால் ஸ்நே ராணா சதம் அடித்திருப்பார். ஆனால், இதுவே மிகப்பெரிய சாதனைதான். 4 விக்கெட்டுகளையும் எடுத்து அரைசதமும் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

Sneh rana

2014-ல் இந்திய அணிக்கு அறிமுகமான ஸ்நே ராணா ஒரு சில போட்டிகளுக்கு பிறகு, இந்திய அணியின் தேர்வுக்குழு ரேடாரில் சிக்கவே இல்லை. சமீபத்தில், ஒருநாள் தொடர் ஒன்றில் ரயில்வேஸ் அணிக்காக 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்நே. பேட்டிங்கிலும் சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார். மித்தாலி ராஜுக்கு பதில் சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார். இந்த தொடரில் ரயில்வேஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. இதுதான், ஸ்நே ராணா மீது மீண்டும் வெளிச்சத்தை பாய்ச்சியது. டெஸ்ட் போட்டிகளுக்கு மித்தாலி ராஜ்தான் கேப்டன் என்பதால் ஸ்நே ராணாவே தேர்வு செய்து மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

கிரிக்கெட் உலகில் சமீபத்தில் பாகிஸ்தான் வீரர் ஃபவாத் ஆலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். அவருக்கு பிறகு சமீபத்தில் ஸ்நே ராணாதான் இப்படியொரு பெரிய கம்பேக்கை கொடுத்து சம்பவம் செய்துள்ளார்.

ஸ்நே ராணாவின் தந்தை 2 மாதங்களுக்கு முன்புதான் மறைந்தார். அவருடைய ஆசிர்வாதத்தின் விளைவாக கிடைத்த பலனே இந்த வாய்ப்பு என்று ஸ்நே ராணா கூறியுள்ளார். ஏழு ஆண்டுகள் கழித்து இந்திய அணி ஆடிய ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கௌரவத்தை காக்கும் வகையில் ஆடி தோல்வியைத் தவிர்த்திருக்கிறது. தந்தைக்கு ஒரு சிறப்பான இன்னிங்ஸை அர்பணித்திருக்கிறார் ஸ்நே!



source https://sports.vikatan.com/cricket/sneh-ranas-brillant-all-round-performance-against-england-that-saved-indias-defeat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக