Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

வீட்டுக்கு ஒரு மரம், சீர்செய்யப்படும் நீர்நிலைகள்; வறண்ட ஊராட்சியை பசுமையாக்கும் ஊராட்சிமன்றத் தலைவி

கடந்த மூன்று வருடங்களாக, தமிழ்நாட்டில் அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியிருக்கிறது, கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி. இதனால், இங்கே மழைப்பொழிவு மிகவும் குறைவு. எங்கு பார்த்தாலும், வறட்சி வறட்சி வறட்சிதான். இதனால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை. அதோடு, இங்குள்ள கிராமங்களில் இருக்கும் நீர்நிலைகளும் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. அதற்குக் காரணம், இங்கு அதிகமாக இருக்கும் கல்குவாரிகளும், அருகிப்போன காடுகளின் அளவும் தான்.

இப்படிப்பட்ட `வறட்சி சூழ்' பகுதியில் உள்ள எலவனூர் ஊராட்சியில் தலைவியாக இருக்கும் 22 வயதேயான இந்துமதி, ஊராட்சியைப் பசுமையாக்க வீட்டுக்கு ஒரு மரம், பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பு, நீர்நிலைகளை செப்பனிடுதல் என்று ஊரைச் சுற்றிப் பசுமையைக் கட்டமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

தூர்வாரப்பட்ட நீர்நிலை

Also Read: `என்னைப் பார்த்து இப்போ பலரும் உதவுறாங்க!' - ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக கொடுத்த ஆசிரியை

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் உள்ள அதிகம் வருமானமில்லாத ஊராட்சிகளில் ஒன்றாக எலவனூர் ஊராட்சி இருக்கிறது. வறட்சி நிறைந்த இந்த ஊராட்சியை பசுமையாக்க மட்டுமன்றி, தனது கிராமத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார், இந்துமதி. மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் வடிகால் வாய்க்காலை சரிசெய்தல் என்று `பிஸி'யாக இருந்த இந்துமதியைச் சந்தித்துப் பேசினோம்.

``நான் பன்னிரண்டாவது வரை படித்திருக்கிறேன். அரசியலில் பெரிய ஆர்வம் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், கணவர் உதவியோடு, கடந்த தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. எந்தக் கட்சி சார்பிலும் நிற்காத என்மீது அதீத நம்பிக்கை வைத்து, மக்கள் என்னை ஊராட்சிமன்றத் தலைவியாக்கினார்கள். அதுவும், 21 வயதில் ஊராட்சிமன்றத் தலைவியானேன்.

கணவர் மற்றும் குழந்தையோடு இந்துமதி

ஆரம்பத்தில், ஊராட்சிமன்ற அலுவலகச் செயல்பாடுகள் பற்றி ஒன்றும் புரியவில்லை. எங்கள் ஊராட்சி வறட்சியாக மட்டுமன்றி, க.பரமத்தி ஒன்றியத்திலேயே மிகவும் குறைவான வருவாயைக் கொண்ட ஊராட்சியாகவும் இருந்தது. எங்கே இருந்து பணியை ஆரம்பிப்பது என்று முதலில் புரியவில்லை. எல்.ஐ.சி ஏஜென்டாக இருக்கும் என் கணவர் பாலசுப்ரமணியன், `உன்னால் புதுமையாகச் சிந்திக்க முடியும்' என்று ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு, பணிகளில் இறங்கினேன்.

ஆனால், பணிகளைத் தொடங்குவதற்குள் கடந்த வருடம் கொரோனா பாதிப்புச் சூழல் ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும், மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது, சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்வது என்று மக்களோடு மக்களாக நின்று கொரோனா முன்னேற்பாடுகளைச் செய்தேன். இதனால், எனக்கு நம்பிக்கை பிறந்தது.

அடுத்து, தூர்ந்துபோய் கருவேலம் மரங்கள் மண்டி இருந்த ஊருக்குப் பொதுவாக இருந்த சிறிய குளத்தை, ஸ்பான்ஸர் பிடித்து பொக்லைன் வைத்து தூர்வாரினோம். மறுநாளே மழை பெய்து, அதில் நீர் தேங்கியது. ஒருகாலத்தில் இங்கே நன்றாக விவசாயம் நடந்திருக்கிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஊர் வறட்சிக்கு மாற, விவசாயத்தை மக்கள் கைவிட வேண்டியதாகிவிட்டது.

மரக்கன்றுகள் பாதுகாப்பு வலையுடன்..

அதனால், திருப்பூர், தாராபுரம், கரூர் என்று மக்கள் பிஸ்கட் பாக்கெட் கம்பெனிகளுக்கும், பஞ்சு மில்கள், டெக்ஸ்டைல்ஸ்களுக்கும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், வறண்ட ஊரை பசுமையாக்கி, நீர்நிலைகளை சரிபண்ணி, விவசாயத்துக்கு வழிபண்ண நினைத்தேன். அதற்காக, ஊர்ப் பொது இடங்களில் வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, புளியம் மரம், மகிழம் என்று 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை 100 நாள் வேலை ஆள்கள் மூலம் நட்டோம்.

அதோடு, கால்நடைகளிடம் இருந்து அந்த மரக்கன்றுகளை பாதுகாக்க, ஸ்பான்ஸர் பிடித்து, அந்த நிதி மூலம் பாதுகாப்பு வலைக் கூண்டுகளை மரக்கன்றுகளைச் சுத்தி அமைத்தோம். மரக்கன்றுகளை காபந்து பண்ண, டிராக்டர்கள், டெம்போக்கள் மூலம் காசுக்குத் தண்ணீர் வாங்கி வந்து ஊற்றி வளர்க்கத் தொடங்கினோம். அப்படி வைக்கப்பட்ட மே பிளவர் மரக்கன்றுகள் மரங்களாகி, இப்போது பூத்துள்ளன.

எங்கள் ஊர் சுடுகாட்டில் புதர் மண்டிக் கிடக்கிறது. அதை சரிசெய்து, அங்கேயும் 20 மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதோடு, இதை ஒரு இயக்கமாக மாற்றி, மக்களிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்த, `வீட்டுக்கு ஒரு மகிழம் மரக்கன்று' என்ற திட்டத்தைத் தொடங்கி, வீட்டுக்கு ஒரு மரமும், பாதுகாப்பு வலைக் கூண்டும் வழங்கினோம். ஊராட்சியில் உள்ள 450 வீடுகளுக்கும் தலா ஒரு மரக்கன்று வழங்கி, அதை நட வைத்தோம்.

கிருமிநாசினி தெளிக்கும் பணி
மழைநீர் வடிய சீரமைப்புப் பணி
மரக்கன்று வைக்கும் பணி
சாலை ஓரமாக பூத்துக் குலுங்கும் மரம்
இளைஞர் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதற்கு, அந்தந்த வீட்டில் வசிப்பவர்களே நீர் பாய்ச்சி, கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். சிலர் ஆர்வமாகி, ``எங்களுக்கு இன்னும் மரக்கன்றுகள் கொடுங்க" என்று கூடுதலாக மரக்கன்றுகளைக் கேட்டு வாங்கி, அதைத் தங்கள் வீடுகளுக்கு அருகில் வைத்து வளர்த்து வருகிறார்கள். இதன்மூலம், எங்கள் ஊர் வறட்சியை விரைவில் போக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஊராட்சி முழுக்க குறைந்தது 2,000 மரங்களை வளர்த்துக் காட்ட வேண்டும் என்கிற லட்சியம் வைத்திருக்கிறோம். சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்துக்காட்டுபவர்களுக்குப் பரிசு கொடுக்கவும் யோசித்து வருகிறோம்.

அதேபோல், ஊராட்சிப் பகுதிகளில் தூர்ந்துபோய் கிடக்கும் மழைநீர் வடிகால்களையும் சரிசெய்து வருகிறோம். இதன் மூலம், மழைநீர் சேகரிப்பையும் ஏற்படுத்த இருக்கிறோம். கொரோனா வந்ததில் இருந்து அடிக்கடி வீட்டுக்கு வீடு கபசுரக் குடிநீர் வழங்கிவருகிறேன். அதோடு, 450 வீடுகளிலும் கிருமிநாசினி தெளித்து வருகிறோம். இதில், 300 வீடுகளுக்கு என் கணவரும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளைச் செய்தார். அதோடு, உறவினர்களே தொட அஞ்சும் கொரோனா பாதித்தவர்களை என் கணவர் ஆம்னியில் தகுந்த பாதுகாப்போடு அழைத்துப் போய், அவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தார்.

கபசுர குடிநீர் கொடுக்கும் இந்துமதி

Also Read: `படிப்பது இன்ஜினீயரிங்; பார்ட் டைமாக விவசாயமும் கத்துக்குறேன்!' - தென்னை மரமேறும் கரூர் இளைஞர்

அதோடு, 100 பேருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் வழங்கியிருக்கிறோம். இளைஞர்களைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கால்நடை மருத்துவ முகாம்களையும் நடத்துகிறோம். எல்லாவற்றையும்விட, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எங்கள் ஊராட்சியை பசுமையாக்கி, சிறந்த ஊராட்சியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான எல்லா முயற்சிகளையும் அடுத்தடுத்து செய்ய இருக்கிறேன்" என்றார்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. எண்ணம் ஈடேற வாழ்த்துகள் சகோதரி!



source https://www.vikatan.com/news/environment/karur-young-panchayat-president-took-initiative-to-create-green-cover-for-her-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக