Ad

திங்கள், 21 ஜூன், 2021

தாய்ப்பாசம் டு தங்கச்சி சென்ட்டிமென்ட்… ‘உங்கள் விஜய்’யின் ஃபார்முலா உருவான கதை! #fanboyseries-2

விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியான போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. ஏழ்மையான தோற்றத்தோடு வயதான பாட்டி தாத்தா இருவர் ஒரு தியேட்டரின் கவுன்ட்டரில் மாஸ்டர் படத்திற்கு டிக்கெட் எடுத்த வீடியோதான் அது. தங்களிடம் இருந்த சில்லறைகளையும் சில நோட்டுகளையும் கொடுத்து 'விஜய் படம் பாக்கணும் தம்பி...' என அவர்கள் கூற, அந்த வயதானவர்களின் ஆர்வத்தை பார்த்து இலவசமாக படம் பார்க்க அனுமதித்திருப்பார் அந்த தியேட்டர்காரர்.

அந்த வயதான பாட்டி தாத்தாவிற்கு எந்த படத்தை பார்த்து விஜய்யை அவ்வளவு பிடித்து போயிருக்கும் என்கிற கேள்வி மனதுக்குள் வலுவாக எழுந்தது. ஒரு ‘சர்கார்’ படத்தையோ ‘பிகில்’ படத்தையோ பார்த்து அவர்கள் நிச்சயமாக விஜய் ரசிகர்களாக மாறியிருக்க மாட்டார்கள். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான அக்மார்க் விஜய் ஃபார்முலா படங்கள் சிலவைதான் அவர்களுக்கு விஜய்யின் மீது பிரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது என்னுடைய அனுமானம்.

ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட தரப்பு ரசிகர்களை தாண்டி ஆறிலிருந்து அறுபது வரை எல்லாரையும் கவரும்போதுதான் ஒரு மாஸ் ஹீரோவாக சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுக்க தொடங்குகிறார். அந்த சமயத்தில்தான் அந்த ஹீரோவை சுற்றி பெரிய பிஸ்னஸ் உருவாகத் தொடங்குகிறது.

விஜய் எந்த இடத்தில் மாஸ் ஹீரோவாக பரிணமிக்க தொடங்குகிறார் என அவருடைய டைம்லைனை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் அது நம்மை ‘திருமலை’ காலத்துக்கு அழைத்து செல்லும். தொடர்ச்சியாக காதல் படங்கள் காதல் சார்ந்து சிறிய ஆக்ஷன் படங்கள் என நடித்து வந்த விஜய் ‘திருமலை’யில்தான் முழுமையாக வேறொரு அவதாரம் எடுத்தார்.

விஜய் - த்ரிஷா

‘திருமலை’க்கு முன்பாகவே ‘பகவதி’ வெளியாகி இருந்தாலும் அது பின்பு விஜய் எடுக்கப்போகும் ஆக்ஷன் அவதாரத்துக்கான ஒரு டெஸ்ட் ஷூட் மாதிரிதான் இருந்தது. ‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ இந்த படங்கள் தான் விஜய்யை முழுவதுமாக ஒரு பெரிய கமர்ஷியல் நாயகனாக மாஸ் ஹீரோவாக மாற்றியவை. ‘ஆறிலிருந்து அறுபது’ வரை அத்தனை பேரையும் விஜய்யை ரசிக்க வைத்த படங்களும் இவைதான்.

தாய்ப்பாசம்… தங்கச்சி சென்ட்டிமென்ட்...ஃபேமிலி டிராமா இதெல்லாம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் சப்ஜெட்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை ஃபேமிலி சென்ட்டிமென்ட்டை தொட்டவர்கள் கெட்டதில்லை. விஜய்யும் இந்த எவர்கிரீன் சப்ஜெக்ட்டை தன்னுடைய மாஸ் மசாலா பாணியில் கலந்துகட்டி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்திருக்கிறார்.

‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ இந்த நான்கு படங்களிலுமே விஜய்க்கு ஃபேமிலி சென்ட்டிமென்ட் ஹெவியாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கும். இதில்’ திருப்பாச்சி’, ‘சிவகாசி’ இரண்டு படங்களையும் குறிப்பிட்டு பேசியாக வேண்டும். இப்போது விஜய்யின் அடுத்த படத்தை பேரரசு இயக்கப்போகிறார் என கிசுகிசு வெளிவந்தாலே விஜய் ரசிகர்களுக்கு வியர்த்து விடுகிறது. ஆனால், பேரரசு இயக்கிய இரண்டு படங்களும் விஜய்யை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு வகித்தவை.

‘திருப்பாச்சி’ முழுக்க முழுக்க தங்கச்சி சென்ட்டிமென்ட் ‘பாசமலர்’ கதை. விஜய்க்காக இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் பேரரசு. அண்ணன் தங்கச்சி கதை என்றவுடன் பளபளவென நம் மண்ணுக்கு ஒட்டாத கலரில் ஏதோ ஒரு நடிகையை விஜய்க்கு தங்கையாக கொண்டு வராமல், மல்லிகாவையே விஜய்யின் தங்கையாக்கியிருப்பார் பேரரசு. படத்தில் மல்லிகாவின் கேரக்டர் பெயரையும் நுணுக்கமாக ரொம்பவே இயல்பாகபடும்படி வைத்திருப்பார். இன்றைக்கும் கிராமங்களில் 'கருப்பாயி' என்கிற பெயரோடு பல பெண்களை பார்க்க முடியும். 'கருப்பு… கருப்பு...' என விஜய் உருகும் இடங்கள் எல்லாம் எங்கோ ஓர் கிராமத்தின் மூலையிலிருக்கும் அண்ணன் தங்கைகளின் நெஞ்சங்களையும் தொட்டிருக்கும். சிவகாசியிலும் இதேமாதிரியே தங்கச்சி சென்ட்டிமென்ட் சேர்த்து தாய் பாசத்தையும் கலந்துகட்டி விஜய்யை அத்தனை குடும்பங்களிலும் ஒருவராக கொண்டு சேர்த்தார் பேரரசு.

விஜய்

ஒரேடியாக ஃபேமிலி சென்ட்டிமென்ட் மட்டுமே இல்லாமல் ரசிகர்களுக்கு தேவையான மாஸ் சமாசாரங்களும் இந்த படங்களில் சரிவிகிதமாக இடம்பெற்றிருக்கும். ‘'நீ எந்த ஊரு… நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல', 'வாடா… வாடா… தோழா' என ரசிகர்களுக்கும் விஜய்க்குமான நேரடி உரையாடல்கள் போன்ற ஓப்பனிங் பாடல்கள் இந்த படங்களில் இருந்துதான் உருவாகத் தொடங்கியது.

‘திருமலை’, ‘கில்லி’ இரண்டுமே இந்த படங்களிலிருந்து கொஞ்சம் வித்யாசமானவை. படத்தின் கரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் சம்பந்தப்பட்டதில்லை என்பதால் இவற்றில் கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் அனைவரையும் கவரும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ‘திருமலை’யில் விஜய்யை ரகுவரன் வீட்டிற்கு சாப்பிட அழைக்கும் காட்சியை உதாரணமாக சொல்லலாம். '’எதாவது நல்ல நாள்னா டிஃபன் பாக்ஸ்ல கேசரி, வடை, பாயாசம் எல்லாம் கொடுத்தனுப்புவாங்களே தவிர வீட்டுக்கு கூப்ட்டு யாரும் சோறு போட்டதில்ல’' என விஜய் பேசும் வசனமும் அந்த சீனில் விஜய்யின் நடிப்பும் அவ்வளவு இயல்பாக இருக்கும். இந்த சீன் மட்டுமில்லை ‘திருமலை’ படம் முழுவதும் ஒரு வடசென்னை இளைஞனாக விஜய் மிக இயல்பாக நடித்திருப்பார்.

விஜய் - ரஜினி

விஜய்யின் கரியரிலே திருமலைக்கு முன்னும் சரி பின்னும் சரி அவர் இவ்வளவு இயல்பாக நடித்ததே இல்லை. விஜய்க்கு ஓவர் ஆக்டிங் பட்டம் வாங்கிக்கொடுத்த ‘ஆதி’ படத்தின் இயக்குநர் ரமணாதான் ‘திருமலை’க்கும் இயக்குநர் என்பது ஒரு நகை முரண். லாரன்ஸுடன் ‘’தாம்தக்க’’, கிரணுடன் ‘’வாடியம்மா ஜக்கம்மா’’ என ஒரே படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோ இன்ட்ரோ பாடல்கள் இடம்பெற்றதும் திருமலையில்தான் என்பது கூடுதல் சிறப்பு.

தாய்ப்பாசம், தங்கச்சி சென்ட்டிமென்ட் ஆகியவை ‘கில்லி’யில் ரகளையாக கையாளப்பட்டிருக்கும். தைப்பூசம், அன்னையர் தினம், பூரி இவையெல்லாம் வைத்து குடும்பத்தினருடன் காமெடி கதகளி ஆடியிருப்பார் விஜய்.

‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ இந்த நான்கு படங்களில் திருமலையில் மட்டுமே விவேக்கிற்கு ஒரு தனி காமெடி ட்ராக் இருக்கும். மற்ற மூன்று படங்களிலும் விஜய்யே காமெடியில் புகுந்து விளையாடியிருப்பார். ‘திருப்பாச்சி’யில் சடை முடியை திருட செல்லும் காட்சி, தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் காட்சி, ‘கில்லி’யில் ஹோமம் வளர்க்கும் காட்சி மற்றும் '’பக்கத்து தெருவுக்கு சச்சின் வந்துருக்காராம்'’ என தங்கையிடம் சீண்டும் காட்சிகள் என விஜய் ஒரு காமெடி தர்பாரே நிகழ்த்தியிருப்பார். விஜய்க்குள் இருக்கும் பிரமாதமான காமெடி டைமிங்கை இப்போதைய படங்களின் இயக்குநர்கள் அவ்வளவாக பயன்படுத்திக் கொள்வதில்லை. விஜய்யை பிரதானமாக வைத்தே காமெடி சீன்களை எழுதலாம். இப்போதைய விஜய் பட இயக்குநர்கள் ஏன் அவற்றை தவிர்க்கிறார்கள் என்பது புரியவில்லை.

விஜய்

ஃபேமிலி சென்ட்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சுற்றி தன்னுடைய மாஸ் மசாலா விஷயங்களை கலந்துகட்டி அடிப்பதைத்தான் விஜய் தன்னுடைய ஃபார்முலாவாக உருவாக்கி வைத்திருந்தார். இந்த ஃபார்முலாதான் விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாக உயர்த்தியது. ஆனால், சில படங்களில் இந்த ஃபேமிலி சென்ட்டிமென்ட் என்பது குறைந்து விஜய்க்கு துதிபாடும் வகையிலான காட்சிகள் அதிகமானதால் தொடர் தோல்விகளையும் விஜய் சந்தித்தார். எது வெற்றி ஃபார்முலாவாக கொண்டாடப்பட்டதோ அதுவே மோசமாக விமர்சிக்கவும் பட்டது. இதனாலயே ‘சுறா’வுக்கு பிறகு தன்னுடைய ஃபார்முலாவை மாற்ற வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். கடந்த பத்தாண்டுகளில் முழுக்க முழுக்க விஜய் ஃபார்முலாவில் வெளியான படம் என்றால் அது 'வேலாயுதம்' மட்டுமே.

விஜய் ஃபார்முலா படங்களுக்கு இப்போது மவுசு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கும் வார இறுதி நாட்களின் ப்ரைம் டைம் ஸ்லாட்களை விஜய்யின் 'கில்லி', 'திருப்பாச்சி', படங்கள் ஆக்கிரமிப்பதை பார்க்க முடிகிறது. இந்த படங்களை ரசிப்பதற்கு ஒரு பெருவாரியான கூட்டம் இருப்பதையே இது காட்டுகிறது. ஓவர்டோஸாகும் மாஸ் விஷயங்களை கொஞ்சம் குறைத்துவிட்டு 'திருப்பாச்சி', 'சிவகாசி' மாதிரியான அழுத்தமான குடும்ப கதைகளை விஜய் மீண்டும் கையிலெடுத்தால் ஒரு முரட்டுத்தனமான பம்பர் ஹிட் உறுதி! விஜய்யை அந்த மாதிரி பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால் விஜய் ரசிகர்களுக்கும் அது விருந்தாகவே இருக்கும். கொஞ்சம் மனசு வைங்க விஜய்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/how-actor-vijay-became-top-actor-in-tamil-cinema

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக