Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

ENGvIND: இன்னிங்ஸ் தோல்வியைத் தடுத்து டிராவாக்கிய இந்தியா... எப்படிச் சாதித்தது பெண்கள் படை?

ஸ்மிரிதி உள்ளிட்ட பல வீராங்கனைகள் வேண்டுகோள் விடுத்ததுக்கு மதிப்பளித்து, பிசிசிஐ, பல ஆண்டுகளுக்குப் பின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான டெஸ்ட் போட்டிகளை, மீண்டும் நடத்த முடிவு செய்திருந்தது. அதன்படி, கிட்டத்தட்ட, 2000 நா:களுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்புவர, இங்கிலாந்தை இங்கிலாந்தில் வைத்தே சந்தித்தது இந்தியா. இந்தியாவுக்கு மட்டுமின்றி இங்கிலாந்துப் பெண்கள் அணியில் பல பெண்களுக்கும், இதுவே முதல் டெஸ்ட் போட்டி.

பிரிஸ்டல் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து டாஸை வென்று, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. வின்ஃபீல்ட், பெமண்ட் ஆகிய இருவரும் ஓப்பனர்களாகக் களமிறங்க, 50 ரன்களைப் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது இக்கூட்டணி. இவர்களை பூஜா, வின்ஃபீல்டின் விக்கெட்டை எடுத்ததன் மூலமாகப் பிரிக்க, அடுத்ததாக வந்த கேப்டன் நைட், பெமண்டோடு இணைந்தார். பெமண்ட் அரைசதம் கடக்க, ராணா அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பின் இணைந்தனர் நைட் மற்றும் ஸீவர். இக்கூட்டணியை முறிக்கத்தான் இந்தியா சற்றே திணறியது. 90 ரன்களை இவர்களது பார்ட்னர்ஷிப்பால் எடுத்தது இங்கிலாந்து. அதுவும், கேப்டன் நைட்டின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

ENGvIND | Women's Cricket

இவர்களது விக்கெட்டை வீழ்த்த, இந்தியக் கேப்டன் மிதாலி, பௌலர்களையும் ஃபீல்டர்களையும் உருட்டி விளையாடியும், வேலைக்காகவில்லை. அந்நிலையில், ஸீவர் மற்றும் ஜோன்ஸின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய இந்திய வீராங்கனைகள், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நைட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில், 230/3 என பயங்காட்டிய இங்கிலாந்து 270ஐ எட்டுவதற்குள், மேலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, பதிலடி கொடுத்தது இந்தியா.

எனினும் ஆண்கள் கிரிக்கெட் கதையேதான் பெண்கள் கிரிக்கெட்டிலும் நடந்தது. டெய்ல் எண்டர்களின் கதையை முடிக்க இந்தியா பௌலர்கள் திணற, முதல் இன்னிங்சில், ரன் குவிப்பில் ஈடுபட்டது இங்கிலாந்து. பெண்கள் கிரிக்கெட், வெறும் நான்கு நாள்கள் மட்டுமே நடைபெறும். எனவே, எட்டு விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்த நிலையில், இரண்டாவது நாளின், உணவு இடைவேளையும் முடிந்திருந்ததால், விரைவாக ஆடி, டிக்ளேர் செய்யும் எண்ணத்திற்கு, இங்கிலாந்து வந்தது.

அந்நாளில், சில ஓவர்களிலேயே, ஸ்ரப்சோலின் விக்கெட் விழுந்துவிட, 396 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. இந்தியா - இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில், இதுதான் இந்தியாவுக்கு எதிராக, இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராகும். ஆறாவது வீராங்கனையாகக் களமிறங்கிய ஷோபியா மற்றும் பத்தாவது வீராங்கனையாகக் களம் கண்ட, ஸ்ரப்சோலின் ஆட்டம்தான், இந்திய பௌலர்களின் பொறுமையை நிரம்பவே சோதித்தது‌. 70 ரன்களை இணைந்து எடுத்திருந்தது, இக்கூட்டணி. ஷோபியாவும், 74 ரன்களோடு அரைசதம் கடந்திருந்தார். இந்தியாவின் சார்பில், ராணா நான்கு விக்கெட்டுகளையும், தீப்தி மூன்று விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

ENGvIND | Women's Cricket

கிட்டத்தட்ட 400 ரன்களைத் தொட்டுவிட்டதால், 20 விக்கெட்டுகள் போதும் வெற்றியை முத்தமிட என்பதால், உற்சாகத்தோடே களமிறங்கியது இங்கிலாந்து. ஏழு செஷன்களுக்கு மேலேயே ஆட்டம் மீதமிருந்ததால், போட்டி முடிவைக் காணும், அதுவும் இங்கிலாந்துக்குச் சாதகமாகவே முடியும். ஏனெனில், இந்தியப் பெண்கள் இந்த ஃபார்மட்டில் இங்கிலாந்தில் ஆடுவது முதல்முறை என்பதால், அவர்களை ஹோம் அட்வான்டேஜை வைத்தே இங்கிலாந்து காலி செய்துவிடும் என்பதே ரசிகர்களின் பார்வையாக இருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டிகளின் அழகே, ஏற்றங்களும் இறக்கங்களும், கூடவே திருப்பங்களும் மாற்றங்களும்தானே. அதுதான் நடந்தது அடுத்தடுத்த செஷன்களில்.

அனுபவம் மிளிரும் ஸ்மிருதியுடன், இளங்கன்றாக பயமறியாது ஷெஃபாலி வெர்மா களமிறங்கினார். இந்தக் கூட்டணி இங்கிலாந்து பௌலிங் படையை அடித்து நொறுக்கி சர்வநாசம் செய்தது. ஸ்ரப்சோலின் ஓவரில் அடித்த பவுண்டரியோடு தொடங்கிய ஷெஃபாலி வர்மா, வரிசையாக எல்லாப் பந்துகளையும் அடித்து வெளுக்க ஆரம்பித்தார். பிரன்ட் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரி எல்லாம் அடித்துக் கதற விட்டார். ஓய்வறிவித்து விட்டுப் போன, கங்குலி முதல் சேவாக்வரை எல்லோரையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். மறுபுறம் ஸ்மிரிதிக்கு அனுபவம் கைகொடுக்க, பக்குவப்பட்ட ஆட்டத்தை ஆடி ரன்களைச் சேர்த்தார் அவர்.

சரியான லைன் அண்ட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளை பாவம் பார்த்து விட்ட இக்கூட்டணி, தவறான பந்துகளை பாரபட்சமே பார்க்காமல் தண்டித்து, ரன்களை வாரிக் குவித்தனர். சதத்தை எட்டுவார்கள் என எதிர்பார்த்த இருவருமே அடுத்தடுத்த ஷாக் கொடுத்து வெளியேறினர். சதமடிப்பார் என ஆவலோடு எதிர்நோக்கப்பட்ட ஷஃபாலி, நான்கே ரன்களில், அதனைக் கோட்டைவிட, 78 ரன்களோடு ஸ்மிரிதி ஆட்டமிழந்தார். இந்தியப் பெண்கள் பதிலடி கொடுத்து தாக்கத் தொடங்கியதுதான், போட்டியை சூடுபிடிக்கத் வைத்தது. சமீபத்தில், ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அலறவிட்ட சம்பவங்கள் எல்லாம் கண்முன் வந்து போனது. மடங்கிப் போகாமல் திருப்பி அடிக்கும் இந்தியப் பெண்களால், அவ்வப்போது ஸ்கோர் பார்க்க மட்டுமே வைக்கப்பட்ட சேனல், முழு போட்டியைப் பார்க்கவே வைக்கப்பட்டது.

ENGvIND | Women's Cricket

ஆனால் இதற்குப்பின் நடந்ததுதான், திருப்புமுனைக் காட்சிகள். 167/0 என இருந்த இந்திய ஸ்கோர், 197/8 என மாறியது. கிட்டத்தட்ட 15 ஓவர்களில், போட்டியையே புரட்டிப் போட்டனர், இங்கிலாந்து பௌலர்கள். கேப்டன் மிதாலி கூட, வெறும் 2 ரன்களோடு வெளியேறி இருந்தார்.

மூன்றாவது நாளில், புதுப்பந்தை எடுத்த மாத்திரத்தில், அதற்கு இரண்டு ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை பலியாகக் கொடுத்து, இந்தியாவை 231 ரன்களுக்குச் சுருட்டியது இங்கிலாந்து. தொடக்க வீராங்கனைகள் ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தைக் கொண்டு, இன்னிங்ஸைக் கட்டமைக்காமல், ஃபாலோ ஆனைத் தவிர்க்க, 16 ரன்களே தேவைப்பட்ட நிலையில், கொஞ்சமும் போராடாமல், ஃபாலோ ஆனை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது இந்தியப் படை. இங்கிலாந்தோ, 80 ஓவர்களை வீசி, அசதியாக இருந்தாலும் பரவாயில்லை, இதே மொமண்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், எஞ்சியிருப்பது ஒருநாள் என்பதால், துணிந்து ஃபாலோ ஆனைத் தேர்ந்தெடுத்தது.

மூன்றாவது நாளின் உணவு இடைவேளையே எடுக்கப்படாத நிலையில், 165 ரன்கள் பின்னிலையிலிருந்த இந்திய அணி, தோல்வியை நோக்கி, தலைதெறிக்க ஓடுவதைப் போலத்தான் இருந்தது.

ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி களமிறங்கினர். ஷஃபாலியின் ஆட்டம், ஏதோவொரு நம்பிக்கை ஒளியை, இரண்டாவது இன்னிங்ஸிலும் காட்டிக் கொண்டிருந்தது. இளம் ஜான்சி ராணியாக மாறிய அவர், வாளெடுத்து சண்டை போடுவதைப் போல், எல்லா திசைகளிலும், பந்துக்கு பேட்டால், 'டாடா' சொல்லி அனுப்பிக் கொண்டே இருந்தார். பண்ட்டின் பாடசாலையில் கூடப்படித்ததைப் போல், கதிகலங்க வைத்தார் இங்கிலாந்து பௌலர்களை. எனினும், ஸ்மிருதியின் விக்கெட், இந்திய ரசிகர்களிடம் பயத்தைக் கொண்டு வந்தது, முதல் இன்னிங்சின் பாகம் இரண்டாக, இரண்டாவது இன்னிங்ஸும் இருக்குமோ என்று. இந்தியா, தீப்தியை முன்கூட்டி இறக்கியது.

ஒருபக்கம் தீப்தி, புஜாராவின் பெண் வடிவம் போல், மிக நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார், 43 பந்துகளில் முதல் ரன்னை எடுத்து. மறுபுறம் ஷஃபாலியோ, அதிவேகமாக அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இறுதியாக 62 பந்துகளில், அதுவும் வந்து சேர்ந்தது. இரண்டு இன்னிங்ஸிலும், அரைசதம் கடந்து, இந்தியாவைக் கரைசேர்த்திருந்தார், ஷஃபாலி. எனினும் மழையின் குறுக்கீடால், மூன்றாவது நாள் ஆட்டம் கைவிடப்பட, 83/1 என முடித்தது இந்தியா.

ENGvIND | Women's Cricket

நான்காவது நாள் ஆட்டத்தை, தொடர்ந்து ஆடியது இந்தியா. பந்துகளை இலகுவாக ரன்களாக மாற்றிக் கொண்டிருந்த ஷஃபாலியை, 63 ரன்களுக்கு அனுப்பி, வெற்றிக்கான தங்கள் பாதையில் முன்னேறத் தொடங்கியது இங்கிலாந்து. எனினும் தீப்தி - பூனம் ராவத் கூட்டணி அதன்பின், முட்டிமோத ஆரம்பித்தது. அரைசதம் கடத்திருந்த தீப்தியை, 54 ரன்களோடு இங்கிலாந்து வீழ்த்த, ஆட்டம் சூடுபிடித்தது.

இதன்பின்தான் கடைசி கட்ட திக்திக் நிமிடங்களுக்கான கவுண்டவுன் தொடங்கியது. ஏனெனில், 171/3 என இருந்த இந்திய ஸ்கோர், 199/7 என வந்து நிற்க, விழும் ஒவ்வொரு விக்கெட்டும், இதயத்துடிப்பை எகிறச் செய்தது. என்னதான் இந்தியா லீட் எடுத்து விட்டாலும், எந்த நேரத்திலும் போட்டி, இந்தியாவுக்கு எதிராகச் சென்று முடியலாமென்ற பயமே நிலவியது, ஏனெனில், அவர்களது கடந்த இன்னிங்ஸ் வரலாறு அப்படி.

Also Read: சிக்ஸர் ஷெஃபாலி: பெண்கள் கிரிக்கெட்டின் வரலாற்றையே மாற்றி எழுதும் டீனேஜ் புயல்!

ஒரு பக்கம், உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், மழை வந்துவிடக் கூடாது என அஞ்சிய ரசிகர்கள், சேனலை மாற்றி, இப்போட்டியில், மழை வந்து விடக்கூடாதா என புலம்பினர். ஆனால், அவர்கள் வேண்டுதல் வேறுவிதமாய் பலித்தது.

எட்டாவது வீராங்கனையாக களமிறங்கிய ராணா, பிரமாதமாக ஆடத் தொடங்கினார். முதல் இன்னிங்சில் இந்தியாவின் டெய்ல் எண்டர்களை, பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்ட இங்கிலாந்தை இவர் கலங்கடித்தார். தோல்வியுற வாய்ப்பில்லை எனினும், வெற்றி வாய்ப்பு, கண்முன் பறிபோவதை எப்படித் தாங்க முடியும் இங்கிலாந்தால்?! எல்லா வழிகளிலும், அவரை வெளியேற்றும் முயற்சி நடக்க, அது நடக்கவில்லை, அவரிடம்.

எட்டு விக்கெட் விழுந்த இக்கட்டான நிலையில், தானியாவுடன் சேர்ந்து அவர் அடித்த, 104 ரன்கள் பார்ட்னர்ஷிப், இங்கிலாந்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, முடியாமல் ஆக்கியது. 80 ரன்களுடன் ராணாவும், 44 ரன்களைச் சேர்த்திருந்த தானியாவும், 'இன்னும் ஒருநாள் கூட நிற்போம்' என்னும் தோரணையில் ஆடிக் கொண்டிருக்க, போட்டி டிராவில் முடிவடைந்தது. நான்கு விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் எடுத்து அசத்திய ராணா, இரண்டாவது இன்னிங்ஸில், பேட்டால் அணிக்காகப் பங்காற்றினார்.

ENGvIND | Women's Cricket

மத்திய வரிசை வீராங்கனைகள் சாதிக்கத் தவறிய பட்சத்திலும், ஓப்பனர்கள் மற்றும் பின்வரிசை வீராங்கனைகளால், மேடேறியது இந்தியா. இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த ஷஃபாலி, ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில், ஃபாலோ ஆனைத் தடுக்கப் போராடிய இந்தியா, பின் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிக்கப் போராடியது. எனினும், ஷஃபாலி மற்றும் ராணா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள், டிராவில் கொண்டு வந்து போட்டியை நிறுத்தினர். பார்ப்பவர்களுக்கு போட்டி டிராதானே என்ற எண்ணம் எழலாம். ஆனால், இந்திய அணி சந்தித்த வீழ்ச்சிக்கு, மறுபடியும் சமாளித்து மேடேறியதே மிகப்பெரிய விஷயம்தான்.

ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டும் கொண்டாடும் உலகிற்கு, தங்கள் இருப்பையும் உரக்க அறிவித்துள்ளார்கள், இந்த இருஅணிப் பெண்களும். நிற்க நேரமின்றி, ஆண்கள் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், தங்களுக்காக ஒரு போட்டி நடத்துவதற்காகவே போராடும் நிலைதான், இன்னமும் இங்கே பெண்கள் அணிக்கு. இந்நிலை மாறி, டெஸ்ட் போட்டித் தொடராக மாற்றப்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது பெண்களுக்காகவும் நடத்தப்படும் நாளில்தான், பெண்களுக்கான உரிமைகள் பூரணத்துவம் பெறும்.



source https://sports.vikatan.com/cricket/england-vs-india-how-indian-womens-team-fought-strongly-for-a-draw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக