Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

கேரளா: 'கத்தியை யாரும் பார்த்தது இல்லையா!' அதிரும் பினராயி விஜயன் - கே.சுதாகரன் வார்த்தைப்போர்!

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் கல்லூரியில் படிக்கும்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை ஓட ஓட விரட்டியிருக்கிறேன். நான் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ-வில் இருந்தேன். அப்போது எஸ்.எஃப்.ஐ சார்பில் போராட்டம் நடத்த வந்த பினராயி விஜயன் மற்றும் அவருடன் வந்தவர்களை அடித்து விரட்டினோம்" என்றார். மேலும், "கே.எஸ்.யூ அமைப்பைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் எப்போதும் கத்தி மறைத்து வைத்திருப்பார். ஒரு மேடையில் பேசிய பினராயி விஜயன் 'பேராம்பிறை பகுதியில் இருந்து வரும் ஒரு கே.எஸ்.யூ அமைப்பைச் சேர்ந்த ஒருவன் இடுப்பில் கத்தி மறைத்து வைத்திருக்கிறான்' எனப் பேசினார். இதனால் சீறி எழுந்த பிரான்சிஸ், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஸ்டேஜில் ஏறி மைக்கை எடுத்து பினராயி விஜயனின் தலையை நோக்கி ஓங்கி அடித்தார். பினராயி விஜயன் விலகாமல் இருந்திருந்தால் அன்று அவரது மண்டை பிளந்திருக்கும்" என கூறியிருந்தார் கே.சுதாகரன்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

இந்த பேட்டி குறித்து பதிலளித்த பினராயி விஜயன், "கே.சுதாகரன் எதற்காக பொய் பேசிக்கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. என்னை இதுவரை யாரும் நெருங்கி வந்து தொட்டதில்லை. என் குழந்தைகளை அவர் கடத்த முயன்றதாக எனக்கு ஒருவர் தகவல் சொன்னார். என் குழந்தைகளை கையைப் பிடித்து என் மனைவி ஸ்கூலுக்கு அழைத்துச் சென்ற காலம் அது. கே.சுதாகரனின் நண்பர் ஒருவர் என்னிடம் அந்த தகவலைச் சொன்னார். நான் அதுபற்றி என் மனைவியிடம் கூட சொல்லவில்லை. வரட்டும்பார்க்கலாம் என தைரியமாக இருந்தேன்.

பிரான்சிஸ் என்பவர் கத்தியை வைத்துக்கொண்டு நடந்ததாக கே.சுதாகரன் கூறுகிறார். கத்தியை யாரும் பார்த்தது இல்லையா! கே.சுதாகரன் கனவில் நடந்ததைக் கூறுகிறார் என நினைக்கிறேன்" என்றார். இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், "கேரளத்தில் வனத்தில் மரம் முறித்த வழக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி ஆகியவற்றை திசைதிருப்புவதற்காகவே எதிர்கட்சியுடன் இணைந்து முதல்வர் பினராயி விஜயன் இந்த விவாதத்தை கிளப்பியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் வி.முரளிதரன்

முதலமைச்சர் பினராயி விஜயனும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனும் அடிப்படையில் நாங்கள் ரவுடிகளாக்கும் என்பதை கேரள மக்களுக்கு சொல்ல வருகிறார்கள். முதல்வரும், காங்கிரஸ் தலைவரும் செய்தியாளர் சந்திப்பின்போது அக்கிரம கதைகளை சொல்லுவதும், மோதலுக்காக அழைப்பதும் திட்டமிட்ட செயல். மரம் கடத்தப்பட்ட வழக்கு, மற்றும் கொரோனா தடுப்பில் அரசின் வீழ்ச்சி ஆகியவற்றை திசை திருப்ப எதிர்கட்சி உதவுகிறது. சிறப்பாக கல்வி வழங்கும் வட கேரளத்தில் உள்ள கல்வி நிலையங்களை கேவலம் ரவுடிகள் மற்றும் கிரிமினல்களின் கேந்திரம் என்ற ரீதியில் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும் சித்திரிக்கிறார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/kerala-congress-chief-k-sudhakaran-makes-stunning-allegation-over-pinarayi-vijayan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக