Ad

வெள்ளி, 11 ஜூன், 2021

திண்டுக்கல்: ஆட்டோவின் மேல்பகுதி உறைக்குள் கடத்தி வரப்பட்ட பாட்டில்கள்! - சிக்கியது எப்படி?

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழக எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த மதுப் பிரியர்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி அருந்துகின்றனர். இதேபோல், காட்டுப்பாதைகள் வழியாக அண்டை மாநிலங்களுக்குச் சென்று மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சட்டவிரோதமாக, தமிழகத்திற்குள் விற்பனை செய்கின்றனர். இதேபோல், ரயில்களிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட மாரியப்பன், கார்த்தி

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், பெண்களும், சிறுமிகளும்கூட மதுபாட்டில் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்பதுதான். சமீபத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்த பெண் மற்றும் சிறுமியிடமிருந்து போலீஸார், மது பாட்டிலகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த பெண்ணை சோதனை செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதேபோல, சென்னை ரயில் நிலையங்களில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மதுபான பாட்டில்கள் கடத்தல் அதிகரித்து வந்ததால், சோதனைச்சாவடிகள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், முக்கியச் சாலைகளில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீஸாரின் சோதனைகளில் சிக்காமல் இருப்பதற்காக பல வகைகளில் மதுபான பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த பலர் வசமாக சிக்கிக் கொண்டனர். திண்டுக்கல், குட்டியபட்டி அருகே கடந்த 6-ம் தேதி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெங்களூருவிலிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

ரயிலில் கடத்தி வந்த சந்திரமோகன், கார்த்திகேயன்

அதில், உருளைக்கிழங்கு மூட்டைக்கு அடியில் 40 பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2,880 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட இஸ்மாயில், பவுல் பெர்னாண்ட்ஸ், ஷேக் சல்மான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காய்கறி வேனில் உருளைக்கிழங்கு மூட்டைக்குள் மதுபானம் கடத்தி வந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தலை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் - மதுரை மாவட்ட எல்லையான விருவீடு சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மடக்கிப் பிடித்த போலீஸார், ஆட்டோவில் வந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீஸார், ஆட்டோவிற்குள் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவின் மேற்கூரையின் உட்பகுதியில் மது பாட்டில்கள் அடுக்கி மறைத்து வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திண்டுக்கலுக்கு கடத்தி வரப்பட்ட மதுபானங்களை ஆட்டோவில் மறைத்து வைத்து திருமங்கலத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினர்.

காய்கறி லோடு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 2,880 மது பாட்டில்கள்

இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட திருமங்கலம் அருகிலுள்ள சாத்தான்குடியைச் சேர்ந்த மாரியப்பன், கார்த்தி ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்த விருவீடு போலீஸார், அவர்கள் கடத்தி வந்த 15 லிட்டர் பெருமானமுள்ள 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, ரயிலில் 20 மதுபாட்டில்களைக் கடத்தி வந்த திண்டுக்கல் பிலாத்தைச் சேர்ந்த சந்திரமோகன், கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேரையும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும்15,000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்



source https://www.vikatan.com/news/crime/two-persons-arrested-for-smuggling-48-bottles-in-an-auto-in-dindigul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக