சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ``எனது மகன் பி.மணிகண்டனை கைது செய்ய தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத், வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் ஆகியோரின் தலைமையிலான தனிப்படை போலீஸார் கே.கே.நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், மடிப்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் ராஜ்மோகன், அசோக்குமார், ஞானசேகரன், பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய போலீஸார், கடந்த 1.6.2021-ம் தேதி இரவு 9.45 மணியளவில் சென்னை புதுபாக்கம் சார்சன் பார்ம் ஆர்ச் விலாஸ் என்ற முகவரியில் இருந்த எனது மகனை கைது செய்ய பூட்டை உடைத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் என் மகனை சரமாரியாகத் தாக்கினர். அதைத் தடுக்கச் சென்ற என்னையும் என் மனைவியையும் அடித்து கீழே தள்ளினர். பிறகு வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் உடைத்து விட்டு ஹார்டு டிஸ்க், என் மகனின் செல்போன், லேப்டாப், பி.எம்.டபுள்யூ, பென்ஸ் என இரண்டு கார்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி, அவருடன் வந்த சப்-இன்ஸ்பெக்டர், `உன் புள்ள என்ன பெரிய தியாகியா, ஸ்டேஷன் பக்கம் புகார் கொடுக்க வந்த உன்னையும் தூக்கி வச்சுருவேன்’ என்று ஒருமையில் மிரட்டினார். தரக்குறைவாகவும் என்னையும் என் மனைவியையும் திட்டினார். 2.6.2021-ம் தேதி மாலை என் மகனை எலும்பு முறிவு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்தி கிடைத்து சென்றேன். அங்கு என் மகன் இடது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதுதொடர்பாக என் மகனிடம் விசாரித்தபோது என் மகனை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சட்டவிரோத காவலில் வைத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், என் மகனை என்கவுன்டர் செய்யாமல் உயிருடன் விடுவதற்கு 50,00,000 ரூபாயை லஞ்சமாக கேட்டார். ஆனால் என் மகன் தான் எந்தஒரு தவறிலும் ஈடுபடாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுவதாகவும் தன்னை உயிருடன் விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளான். ஆனால் பணம் கொடுத்தால்தான் உயிருடன் சொல்ல முடியும் என போலீஸார் கூறியிருக்கின்றனர்.
பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என மணிகண்டன் கேட்டிருக்கிறான். அதற்கு போலீஸார் சம்மதிக்கவில்லை. பணம் கிடைக்காது என தெரிந்தவுடன் என் மகன் மணிகண்டனை கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து போரூர் சமயபுரம் மெயின் ரோடு அருகில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதையடுத்து என் மகனை என்கவுன்டர் செய்து விடலாம் எனக்கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். இதற்கிடையில் என் மகன் கைது செய்யப்பட்ட தகவல் செய்தியாக வெளியானது. அதனால் என் மகனைப் போலீஸார் பிடிக்க சென்றபோது போரூர் பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி நின்றதாகவும் கதவைத் திறக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனை மணிகண்டன் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதன்பிறகு போலீஸாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்ததாகவும் அதனால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீஸார் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கின்றனர்.
கதையை உருவாக்கி விட்டு இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ், மோகன்தாஸ் ஆகியோரை வரவழைத்திருக்கின்றனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சில போலீஸார் என் மகனின் கையை நீட்டியபடி இறுக்கி பிடித்துக் கொள்ள இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் ஈரத் துணியைச் சுற்றி இரும்பு ராடால் அடித்து உடைத்துள்ளார். அரை மணி நேரத்துக்குப்பிறகு இடது காலில் ஈரத் துணியைச் சுற்றி இரும்பு ராடால் அடித்து இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் உடைத்துள்ளார். இந்தச் சம்பவத்தை வெளியிலும் நீதிமன்றத்திலும் சொல்லக்கூடாது என போலீஸார் மிரட்டியிருக்கின்றனர். அதையும் மீறி சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு என் மகனை கைது செய்து வலது கை, வலது காலை அடித்து உடைத்தனர். அதுதொடர்பாக நான் புகார் அளித்திருக்கிறேன். என் மகன் மணிகண்டன் மீது கடந்த 3 ஆண்டுகளாக எந்த வழக்கும் கிடையாது. எந்த பிடியாணையும் கிடையாது. என் மகன் மீதான அனைத்து வழக்குகளிலும் அவன் நீதிமன்றங்களில் ஆஜராகிவருகிறான். எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதுகுறித்து சி.டி மணியைக் கைது செய்த ஸ்பெஷல் டீம் போலீஸாரிடம் கேட்டபோது, `காவல்துறையினர் மீது சி.டி மணியின் தந்தை பார்த்தசாரதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய். இதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்' என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/how-police-arrested-rowdy-cdmani-his-father-complaints-in-human-rights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக