உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமைக்கு எதிராக உ.பி பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தது எனத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிலும், குறிப்பாக யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை கடும் அதிருப்தியில் இருக்கும் நேரத்தில், யோகியின் திடீர் டெல்லி விஜயம் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் மோசமாகச் செயல்பட்டது, குஜராத் அதிகாரி அரவிந்த் குமார் சர்மாவுக்கு உ.பி துணை முதல்வர் பதவி அளிக்க மோடியே பரிந்துரை செய்தும் எதிர்த்து நின்றது, தன்னிச்சையாகச் செயல்பட்டு மாநில நிர்வாகிகளின் அதிருப்திக்கு ஆளானது என யோகி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உ.பி வந்திருந்த சந்தோஷ் குமார் தலைமையிலான மேலிடக் குழு, பாஜக தலைமைக்கு உ.பி நிலவரம் குறித்துச் சமர்ப்பித்த அறிக்கையில் யோகி குறித்து பெரியளவில் மைனஸாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள யோகி ஆதித்யநாத் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினார்.
மோடியைச் சந்தித்த யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டரில் மோடியுடனான புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து, ``இன்று பிரதமரைச் சந்தித்து அவரது வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படு பிசியாக இருக்கும் போதிலும், நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்ததற்கும், ஆலோசனை வழங்கியதற்கும் நன்றி கூறுகிறேன்" என்று இந்தியில் பதிவிட்டிருக்கிறார்.
மோடியுடனான சந்திப்பிற்கு முன்னதாக நேற்று முந்தினம் பாஜக மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து ஆலோசனை நடத்திய யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் சுமார் 90 நிமிடங்களுக்கு மேலாக உ.பி தேர்தல் குறித்து விரிவாகப் பேசினார். யோகியின் பிறந்தநாளுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காததைப் போலவே அமித் ஷாவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் புறக்கணித்ததாகவும், யோகி மீது அவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இந்த சந்திப்பில் அமித் ஷா, யோகி மீதான அதிருப்திகளை மறந்து உ.பி தேர்தல் குறித்து மனம் திறந்து பேசியதாகக் கூறப்படுகிறது
அதே போல், மோடியைச் சந்தித்த கையோடு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டவையும் யோகி சந்தித்து சுமார் 1.50 மணி நேரம் பேசினார். சந்தோஷ் குமார் தலைமையிலான மேலிடக் குழு உத்தரப்பிரதேசம் விரைந்ததே நட்டாவின் உத்தரவின் பேரில் தான் என்று முணுமுணுக்கப்பட்டு வந்த நிலையில், நட்டா, யோகி ஆதித்யநாத் தான் மீண்டும் உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளர் என்பதைத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறார். அவர் யோகியுடனான சந்திப்பிற்குப் பிறகு, "உத்தரப்பிரதேசத்தின் வெற்றிகரமான முதல்வரைச் சந்தித்தேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இரண்டாவது நாளாக நேற்றும் டெல்லியில் முகாமிட்டிருந்த யோகி பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஒருவரை கூட விடாமல் அனைவரையும் சந்தித்து அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம், 2 வாரங்களாக யோகி குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த உ.பி பாஜக நிர்வாகிகளின் முயற்சிகள் அனைத்தும் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மோடி, அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோருடனான சந்திப்பில் யோகி ஆதித்யநாத் உ.பி-யில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதாகவும், மாநில நிர்வாகிகளுடன் இணக்கமாகச் செயல்படத் தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்ததாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹொசாபலே யோகிக்கு ஆதரவாக மோடி, அமித் ஷா ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பா.ஜ.க-வில் நிலவி வந்த யோகி எதிர்ப்பு/அதிருப்தி அலை தற்போது இருந்த இடம் தெரியாமல் அடங்கியிருக்கிறது. பா.ஜ.க. மூத்த தலைவர்களிடத்தில் தன் மீதான நம்பிக்கையினை மீட்டெடுத்துள்ள யோகி ஆதித்யநாத்தையே 2022 தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக கிட்டதட்ட உறுதி செய்திருக்கிறது பாஜக தலைமை.
கூடவே, காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்துள்ள உ.பி-யின் ஜிதின் பிரசாதா மூலம் பாஜகவின் வாக்கு வங்கியும் வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், மூத்த தலைவர்களுடனான இந்த சந்திப்பில் மோடியின் அபிமானிகளுள் ஒருவராகத் திகழும் முன்னாள் அரசு அதிகாரி அர்விந்த் குமாருக்கு உ.பி அரசாங்கத்தில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத்திடம் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லிக்கு செல்லும் வரை சற்றே தடுமாற்றத்துடன் காணப்பட்ட யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு தற்போது புது தெம்பு பெற்றிருக்கிறாராம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-happened-in-yogi-adityanaths-2-days-delhi-camp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக