Ad

திங்கள், 21 ஜூன், 2021

`நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள், இன்று?!’ -ஆளுநர் உரையில் இடம்பெறாதவற்றை பட்டியலிட்ட பழனிசாமி

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சிங்காரச் சென்னை 2.0, பொருளாதார ஆலோசனைக் குழு, லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர், மீண்டும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இன்றைய ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரை குறித்து கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

இதுதொடர்பாக மேலும் அவர் பேசுகையில், ``நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க-வின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. தேர்தல் வரும்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சாக இருக்கிறது. தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தெரிவித்திருந்தது அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இல்லை.

Also Read: சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: `சிங்காரச் சென்னை 2.0 முதல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு வரை!’ -ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு மாதமாகியும் விவசாய கடன் ரத்து செய்த ரசீது வழங்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். அது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றனர். அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்த்துவது குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் குறித்தும் ஒரு வரிகூட ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்குவது குறித்தும் இந்த உரையில் இடம்பெறவில்லை. கொரோனா பரவலை திமுக அரசு முறையாக கையாளவில்லை கிராமப்புறங்களில் கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாநகராட்சி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு பாஸிட்டிவ் என வந்தது. அவருக்கு சந்தேகம் இருந்ததால், தனியாரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. பரிசோதனைகளின் தவறு நடக்கிறது. சாதாரண மக்கள் எப்படி மீண்டும் தனியாரிடம் பரிசோதனை செய்வார்கள்?” என்றார் பழனிசாமி. இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-leader-edapadi-palanisamy-slams-dmk-regarding-governor-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக