Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

நீலகிரி: கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளியும் மக்கள்; விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத்துறை!

நீலகிரியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், இங்கு வாழ்ந்துவரும் 6 வகையான பழங்குடியின மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு பழங்குடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.18 வயது நிரம்பிய,தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய அனைத்து பழங்குடியின மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏதுவாக அந்த மக்களின் கிராமங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

இன்றளவும் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான புரிதல் நீடிப்பதால்,பெரும்பாலான பழங்குடிகள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியே வருகின்றனர்.பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கிராமத்துக்கு தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரத்துறையினரைக் கண்டாலே முதுமலை, கூடலூர், பந்தலூர் பகுதி பழங்குடியின மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.இதனால் பலருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை சரிகட்ட முடிவு செய்த சுகாதாரத்துறையினர், ஒரு சில பகுதிகளில் இரவுவரை அந்த கிராமத்தில் மறைந்திருந்து பழங்குடிகள் வீடு திரும்பியதும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.யானைகள்‌ நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும்‌ உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

சுகாதாரத்துறையின் கூடலூர் களப்பணியாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில்,"கொரோனா தடுப்பூசியின் பயன் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.ஒரு சிலர் அச்சத்திலேயே உள்ளனர்.பல ஊர்களில் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.தேடிப்பிடித்துச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை வரவழைத்தப் பின்னரே தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.ஒரு சில கிராமங்களில் இரவு வரை காத்திருக்க வேண்டியுள்ளது"என்றார்.

கொரோனா தடுப்பூசி

மாவட்ட பொறுப்பில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில்,"பழங்குடி மக்களிடம் தற்போது தடுப்பூசி குறித்த அச்சம் மெல்ல நீங்கி வருகிறது.அனைத்து பழங்குடி கிராமங்களிலும் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள சுமார் 17 ஆயிரம் பழங்குடிகளில் 8 ஆயிரம் பழங்குடிளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.பழங்குடிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அந்தந்த கிராமங்களுக்கு செல்கிறோம்.யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்துவதில்லை"என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tribes-in-nilgiri-hesitate-to-take-a-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக