Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

`பெங்களூரில் கைது; அடையார் காவல்நிலையத்தில் ஆஜர்'- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிக்கியது எப்படி?

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றினை அளித்திருந்தார். அது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாந்தினி, 2017-ம் ஆண்டு பரணி என்ற துணை நடிகர் மூலம் அப்போது தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின் ஐந்து வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தன்னை மூன்று முறை கட்டாய கருச்சிதைவு செய்யச் சொன்னதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகத் தொடர்ந்து ஆசை காட்டி மோசடி செய்ததாகவும், தன்னை அந்தரங்கமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் அது தொடர்பாக வாட்ஸப் சாட் ஆதாரங்கள் மற்றும் வீடியோ,ஆடியோ ஆதாரங்களைச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளதால் அவரால் தன் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

துணை நடிகை சாந்தினியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் புகாரைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவிற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். அதனடிப்படையில் சாந்தினி பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வருவதால், அடையாறு காவல் மாவட்டத்தின் கீழ் உள்ள அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியது. நடிகை சாந்தியின் புகார் மீது அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(a) - தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சாந்தினி

அதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், நீதிபதிகள் மணிகண்டனின் மனுவினை கடந்த 16-ம் தேதி தள்ளுபடி செய்தனர். அதைத் தொடர்ந்து, மணிகண்டனுக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மணிகண்டன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதையடுத்து, மணிகண்டனைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். முதற்கட்டமாக, மதுரையில் மணிகண்டனைத் தீவிரமாகத் தேடினார்கள். ஆனால், அவர் அங்கிருந்து தலைமறைவாகி பெங்களூர் சென்று விட்டதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் போலீஸார் பெங்களூர் விரைந்தனர்.

இதற்கிடையில், துணை நடிகை சாந்தினி புகாரின் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவர் ஒப்படைத்த கருக்கலைப்பு ஆதாரங்கள் மற்றும் போட்டோ, வீடியோக்களை போலீஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில், சாந்தினி அளித்த ஆதாரங்கள் உண்மை என்பது உறுதியானது. அதனையடுத்து, போலீஸார் பெங்களூரில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். அப்போது, மணிகண்டன் தனது நண்பர் ஒருவரின் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் இன்று காலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் காலை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, சாந்தினியின் புகாரில் மணிகண்டன் தன்னுடன் குடும்பம் நடத்தியது அவரது பாதுகாவலர்,கார் ஓட்டுநர் ,வீட்டு வேலைக்காரர் என குறிப்பிட்டிருந்த 3 பேருக்குச் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

பெங்களூரில் கைது செய்யப்பட்டு நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மணிகண்டனுக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , அங்கிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரது தரப்பு வாதத்தை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். அதே போல், பெங்களூரில் மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவிய பிரவீன், இளங்கோ என்ற 2 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அடையாறு காவல்நிலையத்தில் விசாரணையை முடித்த காவலர்கள் அங்கிருந்து மணிகண்டனை சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கின்றனர். நீதிமன்ற விசாரணை முடிந்த பிறகு, அங்கிருந்து நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக மீண்டும் மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/aiadmk-ex-minister-who-arrested-in-a-sexual-abuse-case-produced-in-saidapet-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக