Ad

புதன், 16 ஜூன், 2021

புத்தம் புது காலை : நாயைத் துரத்தப் போய் தோள்பட்டை விலகியவரின் கதையும், மூட்டுகளின் வலிமையும்!

அந்த முப்பது வயது இளைஞரை, இரவு பத்து மணிக்கு அவசரசிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வந்த அவரது நண்பர் சொன்னதைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"லாக்டௌன்... வீட்டுக்குள்ளயே இருக்கோமேன்னு, கொஞ்சம் நடக்கலாம்னு ரெண்டு பேரும் வெளிய வாக்கிங் போனோம் டாக்டர். அப்ப ஒரு தெருநாய் குரைக்க, நான் வேணாம்னு சொல்லியும் கேட்காம, அதை விரட்ட குனிஞ்சு ஒரு கல்லை எடுத்து எறிஞ்சான். நாய் கத்திட்டு ஓடப்போகுதுன்னு பாத்தா, திடீர்ன்னு இவன் கத்திட்டு உக்காந்திருக்கான். ஷோல்டர் பெயின் தாங்க முடியலனு அழறான். கொஞ்சம் பாருங்க டாக்டர்..." என்றார் அழைத்து வந்தவர்.

வந்த அந்த இளைஞருக்கு, வலது தோள்பட்டையில் அதீத வலியும், லேசான வீக்கமும், கையைத் தூக்க முடியாமலும் இருக்க, எதிர்பார்த்தது போலவே தோள்பட்டையின் மூட்டு விலகியிருந்தது (Shoulder Dislocation). அவர்களிடம் விஷயத்தை எடுத்துக்கூறி, உடனடியாக அந்த இளைஞருக்கு எக்‌ஸ்ரே, வலி நிவாரண மருந்துகள், கையை மேலும் அசைக்காமல் இருக்கும் ஸ்ப்லின்ட் ஆகியவற்றை எலும்புமுறிவு மருத்துவரின் பரிந்துரையுடன் நிறைவேற்றினேன். பின்னர் மூட்டு விலகிய தோள்பட்டையை சரிசெய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினோம்.

தோள்பட்டை விலகல்

சரியாக அரை மணிநேரத்தில் அந்த இளைஞருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட, எலும்புமுறிவு மருத்துவர் மேற்கொண்ட எளிய ஆனால் உறுதியான ஒரு மென்யூவருக்குப் பிறகு, ஓரிரு நிமிடங்களுக்குள் விலகிய மூட்டு, ஒரு க்ளிக் சத்தத்துடன், அதன் இடத்திலேயே மீண்டும் உட்கார்ந்துகொண்டது. அதற்கான ஸ்ட்ராப்பிங் தந்து, இனிமேற்கொண்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுத்துச்சொல்லி அனுப்பி வைத்தோம்.

எல்லாம் சரி... குனிந்து ஒரு கல்லை எடுத்து எறிந்ததற்கெல்லாம் ஒரு மூட்டு விலகுமா என்ன? அவ்வளவு சுலபமாக விலகும்படி நம் உடம்பில் ஒரு பகுதி கூட இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் நமது உடலில் இருக்கும் மூட்டுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்!

மண்டையோடு, பற்கள் போன்றவை அசையா மூட்டுகள். முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, விரல்களில் போன்றவை கீல் மூட்டுகள் என்பதுபோல தொடை மற்றும் தோள் பகுதிகளில் உள்ள மூட்டுகள் நாலாபக்கமும் சுழலும் வகையில் இருக்கும் சுழல் அல்லது பந்துகிண்ண மூட்டுகள் (Ball and Socket Joint) என அழைக்கப்படுகின்றன.

இவற்றுள் மேலும்-கீழும், முன்னும்-பின்னும், உள்ளேயும்-வெளியேயும், சுற்றுவட்டமும் என அனைத்து திசைகளிலும் திரும்பக் கூடிய வகையில் அமைந்திருக்கும் நமது தோள்பட்டை, பார்க்க ஒன்றுபோலத் தோன்றினாலும், உண்மையில் இந்தப்பந்து கிண்ண மூட்டில் மட்டுமே, மூன்று எலும்புகள், மூன்று மூட்டுகள், அவற்றைச் சுற்றிலும் சிறிய, பெரிய அளவிலான தசைகள், தசைநார்கள் (Rotator Cuff) மற்றும் ஜவ்வு ஆகியன உள்ளன.

ஷோயப் அக்தர்

இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து, அனைத்து திசைகளிலும், அனைத்து விதங்களிலும் தோள்பட்டையைச் சுழலச் செய்யும் வகையில் அமைந்திருப்பதால் தான், இந்த மூட்டு எளிதாக விலகவும் நேரிடுகிறது.

ஆனால், மற்ற மூட்டுகள் போல அல்லாமல், ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு சிக்கலான அமைப்பு என்பதற்கு மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கிறது. நமது உடலின் மூல எலும்புகளான (axial) மண்டையோடு, தண்டுவட எலும்புகள் மற்றும் விலா எலும்புகளின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுவது, இணை எலும்புகளான (appendicular) கை, கால்களின் எலும்புகள்தான். மனிதனின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கு இவையனைத்தின் செயல்பாடுகளும் அவசியம் என்பது நமக்கு ஓரளவு புரியும்.

பரிணாம வளர்ச்சியில் மற்ற விலங்கினங்களின் நான்கு கால்கள் என்பது மனிதனின் இரண்டு கால்கள், இரண்டு கைகள் என மாற்றமடைந்தபோது, மனிதனுக்கு மேலும் சில நுணுக்கங்கள் தேவைப்பட்டது. தனது உடலில் கொம்பு, கொடுக்கு, கூரிய நகங்கள், இறக்கைகள் என்று எதுவும் இல்லாத மனிதனுக்கு, தனது உணவைத் தேடி அடைய கற்கள், கம்புகள் போன்ற சில ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை பிடித்து, குறிபார்த்து எறிய, வலிமையான கரங்களும், கச்சிதமான தோள்பட்டையும் தேவைப்பட்டது. இவற்றுள் பற்றுதலுக்கு ஏற்ப பெருவிரல் வளர, "எறிதல்" என்ற மிக முக்கியப் பணியைச் செய்வதற்குத் தகுந்தாற்போல அவனது தோள்பட்டை மாறத் தொடங்கியது.

ஆரம்ப நாட்களில் எறியப் பழகிய மனிதன், தனது தேவைகளுக்காக தன்னை மாற்றிக் கொண்டு கிட்டத்தட்ட ஏழு மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், அவனுக்கு இன்னும் அதிகமாக உதவ அவனது தோள்பட்டை எலும்புகளும், மூட்டுகளும், தசைகளும், தசைநார்களும்தான். அவனது தோள்பட்டையை திண்ணமாக்கி, வேட்டைக்கு மட்டுமல்லாமல் தொழில், விளையாட்டு, போர் என மற்ற செயல்பாடுகளுக்கும் அவனது தோள் வலிமை பயன்பட ஆரம்பித்தது.

தோள்பட்டை விலகல்

ஆக, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸான ஷோயப் அக்தர், ஆஸ்திரேலியாவின் ப்ரெட் லீ வேகமாகப் பந்து வீச, அதனை எதிர்கொள்ளும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், டெண்டுல்கரின் அசராத பேட்டிங் மட்டுமன்றி ஜாவ்லின் த்ரோ, ஷாட் புட், பூமராங் என அடுத்தடுத்து நாம் பார்த்து மகிழும் பல விளையாட்டுகள் தோன்றியது நமது தோள்பட்டையின் அமைப்பினால்தான்.

இப்படி பல்வேறு அசைவைக் கொண்ட இந்த பந்து-கிண்ண மூட்டு, அதிக உபயோகத்தால் தேய்மானம் காரணமாகவோ அல்லது திடீர் அழுத்தங்கள் ஏற்படும்போதோ, தோள்பட்டையின் தசைகள் அல்லது தசைநார்கள் கிழிவதாலேயோ அல்லது எலும்பில் முறிவு ஏற்படுவாதாலோ மூட்டு விலகல் என்ற shoulder dislocation நிகழ்கிறது. அதனால்தான் பொதுவாக கீழே விழும்போதும், திடீரென எதையாவது எறியும்போதும், முக்கியமாக விளையாட்டு வீரர்களிடையே இளவயதிலும், தேய்மானத்தின் காரணமாக முதுமையிலும் தோள்பட்டை மூட்டு விலகல் சற்று அதிகமாக காணப்படுகிறது.

கல்லெறிந்து மூட்டு விலகி வந்த இந்த இளைஞரைப் போல, யாருக்கேனும் இது நிகழ்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும். அதுவரை வலியைப் போக்க ஐஸ்-பேக் உபயோகிக்கலாம். முக்கியமாக கைகளைத் தூக்கவோ, அல்லது சினிமா ஹீரோக்கள் போல விலகிய மூட்டை தானே சரி படுத்தவோ முயற்சி செய்யக்கூடாது என எச்சரிக்கிறார்கள் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள்.

அனைத்திற்கும் மேலாக இது நிகழாமல் தடுக்க, விளையாட்டின்போது, தக்க பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது, முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, உணவில் போதிய அளவு கால்சியம் சத்தைச் சேர்த்துக்கொள்வது, தேவைப்படும் ஓய்வையும் அதற்குத் தருவது போன்ற வழிமுறைகளை எடுத்துக் கூறி, நமது தோள்பட்டையை பட்டைத் தீட்டச் சொல்கின்றனர்.

ஏனெனில் திண்ணமான தோள்கள் என்பது நம் உடலைத் தாங்குவதற்கு மட்டுமல்ல… நமக்குப் பிடித்தமானவர்கள் மனதார சாய்வதற்கும்தான்!

A Pillar to Lean!



source https://sports.vikatan.com/healthy/everything-we-need-to-know-about-shoulder-dislocation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக