Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

`எதிர்க்கட்சியின் கோரிக்கை ஏற்கப்படுவது ஆரோக்கியமானது!’ - அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,

``மாவட்டத்தில் 450 என்றிருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 69-ஆகக் குறைந்துள்ளது. விரைவில் மாவட்டத்தில் தொற்றில்லாத நிலையை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது எனச் சரியாகச் செய்துவருகின்றனர். தமிழக அளவில் அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 62,000 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன.

ஆய்வு

70,000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிட் மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தில் மாவட்டம்தோறும் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் தனி சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட 28 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன்கூடிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதே போன்ற சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன், விரைவில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையிலான தினக்கூலித் தொழிலாளர்கள் நியமனத்தைத் தவிர்த்து, தற்போது புதிதாகத் தேர்வு செய்யப்படவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பிற மருத்துவப் பணியாளர்களை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களே நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மொத்தம் 11.36 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்போது தமிழகத்துக்கு 1.16 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

கொரோனாவால் தாய் அல்லது தந்தை இறந்த ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய், தந்தையரில் யாரேனும் ஒருவர் இறந்தால் ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களிடம் கட்டணம் குறித்த தகவல்கள் கேட்டறியப்பட்டுக் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்தக் கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது" என்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி. சிவ.வீ.மெய்யநாதன், அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திமுக எம்.எல்.ஏ-க்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட விழாவில் அதிமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கரும் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ``கொரோனா தொற்றால் மீண்டவர்களுக்கு மாவட்டம்தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். எதிர்க்கட்சியின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதை ஆரோக்கியமாகக் கருதுகிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-health-minister-vijayabaskar-statement-in-minister-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக