Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

யூடியூப் சேனல்கள்.. சர்ச்சைகள் - ஒரு பார்வை!

தமிழ்நாட்டில் எந்தளவுக்கு வேகமாக யூடியூப் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்தனவோ அதே வேகத்தில் அவற்றின் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளும் அதிகரித்தன. தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விபிஎன் என்ற இணைய வசதி மூலம் தரவிறக்கம் செய்து, அதை விளையாடும்போது யூடியூப் பக்கத்தில் நேரலை செய்ததுடன் ஆபாசமாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

யூடியூப் என்பது தற்போதைய சூழலில் பலவற்றைத் தெரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எந்தளவுக்கு அதனால் நன்மைகள் விளைகின்றனவோ அதே அளவு அங்கே தீமையும் கொட்டிக் கிடக்கின்றன. நாம்தான் நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருந்து அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

Also Read: ஆபாச கேள்விகள்... எல்லை மீறும் யூடியூப் சேனல்கள்... யார் பொறுப்பு?

யூ டியூப் பக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பிரபல யூடியூபர்கள் இருவரிடம் கேட்டோம்.

உண்மையில் தமிழ்நாட்டை மையமிட்டுள்ள யூடியூப் பக்கங்களும் அதன் மீதான விமர்சனங்களும் எப்படி இயங்குகின்றன எனப் பேசு தமிழா பேசு என்ற யூடியூப் பக்கத்தின் நிறுவனர் வானொலி அறிவிப்பாளர் ராஜவேலிடம் பேசினோம்.

`யூடியூப் பக்கத்திற்குள் இது போன்ற வயதுவந்தோர் உள்ளடக்கம் கொண்ட விஷயங்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன. கெட்ட வார்த்தை என்று சொல்லி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அதிகளவில் வீடியோக்களை உருவாக்கினர் சிலர். ஆனால், இவை குறிப்பிட்ட ஒரு சில பார்வையாளர்களை மட்டும்தான் சென்று சேர்ந்தன. அவர்களைத் தொடர்ந்து அப்படி கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை தமிழ்ச்சூழலில் அதிகரித்தது. அவை எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. ஏன் யூடியூப் பக்கத்திலிருந்தும் கூட எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதுதான் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம்.

ராஜவேல் நாகராஜன்

ஆங்கிலத்தில் தவறான பொருள் தரும் வார்த்தைகளை நம் வீடியோவை விளக்கம் உள்ளடக்கத்திலோ நேரடியாக வீடியோவிலோ பயன்படுத்தினால் யூடியூப் விதிகளுக்குப் புறம்பானது என நமக்கு மின்னஞ்சல் வரும். ஆனால், அதே மாதிரியான வார்த்தைகளை நான் தமிழில் பயன்படுத்தும் போது யூடியூப்-இல் இருப்பவர்களுக்கு அதற்கான அர்த்தம் தெரியாததால் அந்த வார்த்தைகளை அனுமதித்து விடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.

Also Read: அர்ச்சனா பாத்ரூம் டூர் வீடியோ சர்ச்சை : "இது சோலோ vs கார்ப்பரேட் பிரச்னையல்ல!"- விளக்கும் யூ-ட்யூபர்

யூடியூப் பெரியவர்களுக்கானது என்ற இடத்திலிருந்து நகர்ந்து பிறந்த குழந்தைகள் முதலே பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி அவர்கள் பார்க்கும் போது இப்படியான கொச்சை வார்த்தைகள் அடங்கிய வீடியோக்களைக் காட்டி அந்த வார்த்தைகளுக்கு நம்மிடம் விளக்கம் கேட்கும்போது அதற்கு எப்படி நாம் விளக்க முடியும் அல்லது அந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்வோம்? தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடுகிறார்கள். அதன் மூலம் குழந்தைகளை மதன் தவறாக வழி நடத்துகிறார் என்றுதான் மதனின் விஷயம் முதலில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதன்பின்னர் தான் அவர் செய்த மற்ற குற்றவியல் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

குழந்தைகள் மீதான வன்மறை

மதன் விஷயத்தில் வீடியோவில் ஆபாசமாகப் பேசினார் என்ற காரணத்தைக் காட்டி அவர் மீது வழக்குத் தொடர முடியாது. ஏனெனில் மதன் மீது சொல்லப்பட்டிருக்கும் எதுவும் யூடியூப் விதிகளுக்கு உட்பட்டு குற்றம் என்ற பின்னணியில் வராது. பொதுநலன் கருதித் தொடரப்பட்ட வழக்காகத்தான் இவை தொடரப்பட வேண்டும். அப்படித்தான் தொடரப்படும் என்றே நினைக்கிறேன்.

இணையத்தின் வரம்பு என்ன, எது ஆபாசம், எது பகடி, எது ரோஸ்ட், எது கேலி, எது சைபர் புல்லிங், எது 18 + எனத் தீர்மானிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. யூடியூபர்களுக்குள் ஒரு அழகான நெட்வொர்க் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் யாரை பேசுபொருள் ஆக்குவது என இவர்களுக்குள்ளாகவே பேசி முடிவு செய்து அதை செயல்படுத்துகிறார்கள். விமர்சனம் என்ற பெயரில் இடை இடையே இரண்டு கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது ரோஸ்ட் என்கிறார்கள். ஆனால், உண்மையில் மேற்கில் நல்ல அரசியல் விமர்சனங்களை முன்வைக்கப் பயன்படும் ரோஸ்ட் என்ற கலை குறித்து இவர்களுக்கு அடிப்படைப் புரிதல்கூட இல்லை என்பதுதான் உண்மை. ஆம், இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியாதுதான். ஆனால், இருவரும் பயன்படுத்தும் சொற்களுக்குத் தமிழில் ஒரே அர்த்தம்தானே!” என யூடியூப் சேனல்கள் இயங்கும் அரசியல் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

ரோஸ்ட் என்ற பெயரில் கொச்சையான சொற்பிரயோகங்கள் செய்யப்படுவதன்மீதான விமர்சனங்கள் குறித்து ப்லிப் ப்லிப் சர்வ்ஸ் சகா-விடம் கேட்டோம்... “எங்கள் அரசியலை திராவிடம், பெரியாரியம் என்று புரிந்துகொள்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் எங்கள் கலையை இப்படி ஒரு சிறிய வட்டத்திற்குள் சுருக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ப்லிப் ப்லிப்’ முன்வைக்கும் ‘ரோஸ்ட்’ எனும் கலை வடிவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் செயல்பாடாகத் தொடர்ந்து கையாளப்படும் ஒன்றே. உரிமைகள் மறுக்கப்படும் ஒரு சமூகம், தங்களை ஒடுக்குபவர்களை எதிர் கேலி செய்யும் அரசியல் கலையாகத் தோன்றியதே ’ரோஸ்ட்’. இந்த நோக்கத்தின் தொடர்ச்சியே ப்லிப் ப்லிப்பின் வீடியோக்கள். சரியாய்ச் சொன்னால், கொச்சையான வார்த்தைகள் பேசுவோர் எனும் அளவில் எங்களை அடையாளப்படுத்துவதை ஏற்கமுடியாது. ஒரு வார்த்தையின் அர்த்தம் எப்போதுமே ஒன்றாக இருப்பதில்லை. வசைச் சொற்களுக்கான அர்த்தமும் அவ்வாறே. ஒருவரைத் திட்டும்போது வேறு, நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வேறு பொருள். இன்னும் சொல்லப்போனால் நாம் வியந்து போற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் அவர்களுடைய படைப்புகளில் வசைச்சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் எனும்போது, பயன்பாட்டின் நோக்கமே வார்த்தைக்கான அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ப்லிப் ப்லிப்

மதன் தன்னுடன் விளையாட வரும் சிறார்கள், மற்றும் பெண்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும், ப்லிப் ப்லிப் பிற்போக்குத்தனங்களைக் கேலி செய்வதையும் ஒன்றாகப் பார்ப்பது அரசியல் உள்நோக்கமுடைய பார்வையாகவே தெரிகிறது. எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட ஒரு சாமானியனின் கடைசி அரண் அவனிடம் இருக்கும் வார்த்தைகள்தான். அந்த வார்த்தைகளையும் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினால் அது அவன் மீது நிகழ்த்தப்படும் மற்றுமொரு வன்முறையே” என விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-look-on-politics-behind-the-youtube-channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக