Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

மதுரை: தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை! - அமைச்சரிடம் எஸ்.எஃப்.ஐ புகார்

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் முழுமையான கல்விக் கட்டணத்தை கட்டச் சொல்லி பெற்றோருக்கு நெருக்கடி கொடுப்பதாக, இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் புகார் அளித்தார்கள்.

அமைச்சரிடம் எஸ்.எஃப்.ஐ மனு

கலைஞர் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்வது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர் - புறநகர் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் அமைச்சரைச் சந்தித்து புகார் மனு அளித்தார்கள்.

மனுவில், "கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் இரண்டு மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது குறைந்த அளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், தமிழக அரசாங்கத்தால் அனைத்துப் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

அனைத்து மாணவர்கள் தேர்ச்சி என்றாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களைக் கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துகிறார்கள்.

மாணவர்களிடம் 70 சதவிகிதம் கல்விக் கட்டணத்தை மட்டும் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்த உத்தரவை தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 50 சதவிகித கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளில் செலுத்திய நிலையில், தற்போது மீண்டும் 50 சதவிகிதக் கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே பிள்ளைகளை அடுத்த வகுப்புக்கு மாற்றுவோம் என்று பெற்றோர்களை மிரட்டுகிறார்கள்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதே போன்று கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடமும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் என்ற பெயரில், எவ்வித ரசீதும் கொடுக்காமல் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து கட்டணக் கொள்ளை நடக்கிறது .

தமிழகத்தில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் அறிவிப்புகள் அப்படியே உள்ளன.

அரசின் உத்தரவுகளைத் தனியார் பள்ளிகள் ஒருபோதும் மதிப்பதில்லை. இந்தநிலையில் மாணவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/education/sfi-complaint-to-school-education-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக