Ad

புதன், 16 ஜூன், 2021

புதுச்சேரி: முதன்முறையாக சபாநாயகர் பதவியைக் கைப்பற்றிய பா.ஜ.க! - பதவியேற்றார் எம்.எல்.ஏ செல்வம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அமைச்சரவைப் பங்கீடு தொடர்பாக இருதரப்புக்கும் இழுபறி நீடித்துவந்ததால், எதிர்கட்சிகளும் பொதுமக்களும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்தநிலையில்தான் சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி சார்பில் மணவெளித் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான செல்வம் தனது வேட்புமனுவை நேற்று முன்தினம் 14.06.2021 அன்று தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை

முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் எட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. இதற்கிடையே சபாநாயகர் தேர்தலுக்காக வேறு எம்.எல்.ஏ-க்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை 9:30 மணிக்கு புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

தற்காலிக சபாநாயகரான லட்சுமிநாராயணன், சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை முறைப்படி வெளியிட்டதுடன், சபாநாயகராகப் பதவியேற்றுக்கொள்ள அழைத்தார். அதையடுத்து அவை முன்னவரும், முதல்வருமான ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா இருவரும் சபாநாயகரை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர். அதன் பிறகு புதிய சபாநாயகரை எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் செல்வம்.

Also Read: புதுச்சேரி: அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த சகோதரர்! - பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுவரை 20 பேர் சபாநாயகர்களாகப் பதவி வகித்திருக்கின்றனர். 1963-ம் ஆண்டு முதல் சபாநாயகராக காங்கேயன் பதவிவகித்தார். அவரையடுத்து எம்.ஓ.ஹெச்.பாரூக், சண்முகம், மாணிக்கவாசகம், பெருமாள், செல்வராஜன், பாக்கியம், காந்தி, காமிசெட்டி ஸ்ரீபரசுராமா, வரபிரசாத ராவ், சந்திரகாசு, பழனிராஜா, கண்ணன், வி.எம்.சி.சிவக்குமார், ஏ.வி.சுப்பிரமணியன், எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், சபாபதி, வைத்திலிங்கம், வி.பி.சிவக்கொழுந்து ஆகியோர் சபாநாயர்களாகப் பதவி வகித்தனர். அந்த வரிசையில் 21-வது சபாநாயகராக தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம் பதவியேற்றிருக்கிறார். புதுச்சேரியில் பதவியேற்ற முதல் பா.ஜ.க சபாநாயகர் இவர். அதேபோல 2001 தேர்தலுக்குப் பின் தற்போதுதான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mla-become-a-speaker-of-15-th-legislative-assembly-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக