Ad

புதன், 16 ஜூன், 2021

`சாதிரீதியாகச் செயல்படும் வேலுமணி' - சசிகலாவிடம் குமுறிய கோவை அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகி

அ.தி.மு.க நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோ அந்தக் கட்சிக்குள் ஆங்காங்கே அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதையடுத்து, சசிகலாவிடம் பேசிய நிர்வாகிகளை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கட்சியைவிட்டு நீக்கிவருகின்றனர். ஆனாலும், சசிகலா ஆடியோ தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தநிலையில், அ.தி.மு.க-வின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும் சசிகலா ஆடியோ விவகாரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

சசிகலா

Also Read: அ.தி.மு.க-வை நெருக்கும் சசிகலா ஆடியோக்கள்! - பின்புலமும் வியூகமும் என்னென்ன?

அதன்படி, கோவை சூலூர் அருகேயுள்ள பட்டணம் பகுதி அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ரகுநாதன் என்பவரிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது ரகுநாதன் பேசுகையில், “அம்மா... இது நம்ம கட்சியான்னே தெரியலை. குறிப்பிட்ட சாதியோட அங்கமா மாறிடுச்சு. சூலூர் ஒன்றியத்துல எல்லா பொறுப்புகளுக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணியோட சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. நீங்க வந்தா மட்டும்தான் கட்சியைக் காப்பாத்த முடியும்.

ஆடியோ

இங்கே தி.மு.க., அ.தி.மு.க மறைமுக உடன்படிக்கையோடு செயல்படாறங்க” என்றார். அதற்கு சசிகலா பதிலளிக்கையில், “இது கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. இதைச் சிதறிப் போக நான் விட மாட்டேன். நிச்சயம் காப்பாத்துவேன். விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். உங்க கிராமத்துக்கே வர்றேன்” என்று கூறினார்.

இந்த ஆடியோ விவகாரம் கோவை அ.தி.மு.க-வுக்குள் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இது குறித்து ரகுநாதனிடம் பேசுகையில், “பரபரப்புக்காகவோ, விளம்பரத்துக்காகவோ நான் அம்மாவிடம் பேசவில்லை. அ.தி.மு.க கடைமட்டத் தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்காக அம்மாவிடம் பேசினேன்.

ரகுநாதன்

அம்மாவுக்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான கடிதங்களை அனுப்பியுள்ளேன். இதற்கு முன்பு ஒரு முறை போனிலும் பேசியுள்ளேன். நான் சொன்ன கருத்துகளை யாராலும் மறுக்க முடியாது. இந்த விஷயங்களையெல்லாம் வேலுமணியிடம் கொண்டே போயிருக்க மாட்டார்கள்.

Also Read: சசிகலா ஆடியோ விவகாரம்: `கட்சிக்குள் சமூகரீதியாகப் பிரச்னையா?!’ - கே.சி.வீரமணி சொல்வதென்ன?

நானும் அவரிடம் பேச நிறைய முயற்சிகளைச் செய்தேன். என்னைப் போல பல நிர்வாகிகள் இங்கு வேதனையுடன் இருக்கின்றனர். நான் யாரையும் குறை சொல்லவில்லை. இங்கு என்ன நடக்கிறதோ அதைத்தான் அம்மாவிடம் எடுத்துச் சொன்னேன். இதற்காக என்னை அ.தி.மு.க-விலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியைக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-admk-it-wing-secretary-spoke-with-sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக