Ad

புதன், 16 ஜூன், 2021

கரூர்: `தைரியமாக இருங்க..!' - முதல்நாளிலே கவச உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

பொறுப்பேற்றுக் கொண்ட முதல்நாளே, பாதுகாப்பு உடையணிந்து கொரோனா நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நலம் விசாரித்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

கொரோனா வார்டில் பிரபுசங்கர்

Also Read: `என்னைப் பார்த்து இப்போ பலரும் உதவுறாங்க!' - ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக கொடுத்த ஆசிரியை

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர், நேற்று (16 - ஆம் தேதி) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தூங்காமை, கல்வி, துணிவுடைமை.. இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு' - எனும் திருக்குறளில் அரசியல் எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப் போல, துணிவுடனுன், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, காலம் தாழ்த்தாமை என சிறப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் செயல்படும். கட்டுபாடுகளை தீவிரப்படுத்தி, மாவட்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார். அதோடு, தனது மேஜையில் திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கர் சிலைகளை வைத்து, 'எல்லோருக்கும் எல்லாம்' என்று கூறினார். இந்த நிலையில், அவர் பணிக்கு சேர்ந்த முதல்நாளே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வார்டில் பிரபுசங்கர்

அப்போது, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளது, இதில் எத்தனை படுக்கை வசதிகளுக்கு ஆக்ஸிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மொத்தம் எத்தனை வைக்கப்பட்டுள்ளது, கொரோனா தொற்றாளர்களுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றெல்லாம் கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர், 'கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்' என்று சொன்னார். அதனால், அவர் பாதுகாப்புக்காக கவச உடை அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரையும் அக்கறையாக நலம் விசாரித்தார். பிறகு, 'தைரியமாக இருங்க. விரைவில் குணமாவீங்க. நம்பிக்கைதான் உங்களுக்கு கொரோனாவை வெல்லும் முதல் ஆயுதம்' என்றார்

கொரோனா வார்டில் பிரபுசங்கர்

அடிப்படையில் ஆட்சியர் பிரபுசங்கர் ஒரு மருத்துவர். அதனால், ஒரு மருத்துவர் என்ற காரணத்தால் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்த நிலையிலும், கவச உடை அணிந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கிடங்கு வசதியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பணிக்கு சேர்ந்த முதல்நாளே கொரோனா வார்டு வரை போய் ஆய்வு செய்த ஆட்சியரின் செயல், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-new-collector-inspection-in-corona-ward

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக