Ad

புதன், 16 ஜூன், 2021

விழுப்புரம்: 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பில் `மிஸ்’ ஆன சில பொருட்கள்! - ஊழியர்கள் பணியிடை நீக்கம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த 'மே' மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 15.06.2021 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த தேவனூர் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், 14 வகை மளிகை பொருட்களில் இரண்டு பொருட்கள் குறைத்து தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று சுமார் 17 இடங்களில் இந்த தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பணியில் ஈடுபட்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைக்கு நேராகவே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் வாங்கிச் செல்லும் மளிகை பொருட்கள் தொகுப்பு பையை வாங்கி பார்த்தபோது, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நியாயவிலைக் கடை ஊழியர் கர்ணனிடம் அமைச்சர் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான பதில்களையே கூறிய அந்நபர், 'நான் வேண்டுமானால் எனது சொந்த செலவிலிருந்து வாங்கி தந்துவிடுகிறேன் சார்' என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உடன்வந்த துணை ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளரை அமைச்சர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, நியாயவிலைக் கடை ஊழியர் கர்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கூட்டுறவு சங்க இணை பதிவாளர்.

அதேபோல, நேற்று விழுப்புரம் மணிநகர் பகுதி உள்ள நியாயவிலைக் கடையில், 14 வகை மளிகை தொகுப்பு பொருளில் ஒரு சில பொருட்கள் இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதாக தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு புகார் சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்தபோது ஒரு சிலருக்கு, பொருட்கள் எண்ணிக்கையில் குறைத்து வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

லட்சுமணன் ஆய்வு

இந்த புகார், எம்.எல்.ஏ மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, மணி நகர் பகுதியின் நியாயவிலைக்கடை ஊழியர் வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில், மக்களுக்கு சென்று சேர வேண்டிய தொகுப்பு பொருட்கள் குறைத்து வழங்கப்பட்டதால், இரண்டு நியாயவிலைக்கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/two-employees-have-been-suspended-due-to-a-reduction-in-the-number-of-packages-needed-to-reach-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக