Ad

புதன், 16 ஜூன், 2021

இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையும். உலகளவில் சினிமாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தாலும் அதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் முத்தமிழை ரசித்து திரைத்துறையினரை ஆட்சிபீடத்திலும் அமர்த்தி உள்ளனர். இனி வரும் என் பதிவுகள் அனைத்தும் திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்கள், நம் நெஞ்சில் எவ்வாறு நீங்காத இடம் பிடித்தனர் என்பதை ஆராயும்!

கொடுந்தமிழ், செந்தமிழ், தனித்தமிழ்,நற்றமிழ், முத்தமிழ் என்று பற்பல வண்ணம் தமிழ் இருந்தாலும், இவற்றில் என்னை அள்ளி அணைத்து கருத்தைப் புகட்டி, கலைப்பில்லா பெருவாழ்வை கழிக்கச் செய்யும், கலை நிறைந்த ஒன்று முத்தமிழ்.

கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.

தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம்.

Representational image

இந்த முத்தமிழை நான் ரசிக்க, நான் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள 6.7 கோடி பேரும் ரசிக்க சமகாலத்தில் பெரும்பங்கு தமிழ்த் திரைத்துறைக்கு உண்டு.

எடுத்த எடுப்பில் தமிழ்சினிமாவை நாகரீகம் அற்றது என்று ஏதோ ஒரு வெறுப்பில் நம்மில் பலர் சொன்னாலும், ஏதோ ஒரு மனநிலையில் உரைத்தாலும் அது தந்த அலாதி இன்பத்தைப் பலமுறை ஒவ்வொரு நாளும் நாம் உணர்வது உண்டு. ஏனெனில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றும் தமிழ் உணர்வாளர்களின் உள்ளுரே பொதிந்த ஒன்று இவை நமக்கு புரிந்த ஒன்றும் கூட.

அத்தியாயம் 1

1. இசைஞானி இளையராஜா

இளையராஜா - மோகன்

1976 மே 14 ஆம் ஆண்டு, அதுவரை தமிழர்களின் பொக்கிஷமாய் பேசப்பட்டு வந்த, இந்நாள் வரை பேசப்படும் எம்எஸ்வி அவர்களின் இசையோடு, இன்னொரு மணிமகுடம் தமிழ்த் திரையுலகில் வந்தது. இதனை எழுபதுகளின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்கள் நன்கு அறிவர், அவர்களில் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து வரலாறு இது.

மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட மோகனின் வருகை 1977இல் கன்னடப்படம் கோகிலா என்றாலும், 1980 இல் மூடுபனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் வருகை. 1981இல் வெளியான கிளிஞ்சல்கள் படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகம், இசை டி ராஜேந்தர்.

இதற்கு முன்னே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் இளையராஜா இசையில் மோகன் கைகோர்த்து இருந்தாலும், முதல் பாடலாய் பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் கிட்டார், வயலின் வைத்து கலக்கலாக இசைத்திருப்பார் இளையராஜா. இன்றிலிருந்து நாற்பத்தி ஒரு வருடம் முன்பு அமைந்த இசை அது. ஒரு முறை மீண்டும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'மைக்' மோகன்

பின் அந்தக் கூட்டணி தொடுத்த பல பாமாலை நிறைந்த திரைப்படங்கள் பற்பல. எல்லாம் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்.

பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், விதி, நூறாவது நாள், உதயகீதம், குங்குமச்சிமிழ், இதயக் கோவில், மௌனராகம், மெல்லதிறந்ததுகதவு, இரட்டைவால் குருவி, பாசப்பறவைகள் இப்படி இன்றளவும் நாம் பல மேடை கச்சேரி தொடங்கி, திருமண விழா, பாடகர் தேர்வு என்று எங்கும் நிறைந்த இசை அது. ராஜாவின் ராஜ கீதங்கள் அது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. இதை இசைப் பிரியர்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள், தொடுத்த இசையை மறக்கவும் மாட்டார்கள்.

எண்பதுகளில் காதல் வாய்ப்புப் பெற்ற 1960 இல் பிறந்தவர்கள் இந்தக் கூட்டணியை ரசிப்பதை அவ்வப்போது கேட்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன்.

காதலில் இணைந்த போதும், மோதலில் காதல் பிரிந்த போதும், இணைந்தவர் மணந்த போதும், பிரிந்தவர் இறந்தபோதும், இதுதான் கதி என, சதியால் மதிகெட, விதி பல புதிர்கள் இட்டபோதும், வாழ்வின் விடை அற்ற போதும், இந்தக் கூட்டணியின் இசை வெண்பா ஆறுதல் பூமாலையாய் என்றும் நம் மனதடியில் வாடாத மலராய் அழியாமல் இருக்கும்.

(நினைவலைகள் தொடரும்)

-செங்கதிர் தாசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-tamil-cinema

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக