Ad

வியாழன், 17 ஜூன், 2021

`பாலியல் சர்ச்சையில் எம்.பி; கலக்கத்தில் பசுபதி, சீறும் சிராக்' - பஸ்வான் கட்சியில் நடப்பது என்ன?

லோக் ஜன சக்தி கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் சிராக் பஸ்வானுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அவரை தேசிய தலைவர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கினார்கள். அப்படி, பசுபதி குமாருடன் இணைந்து சிராகுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 4 எம்.பி-க்களில் பிரின்ஸ் ராஜும் ஒருவர். சிராக் பஸ்வானை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கிவிட்ட நிலையில், பதிலுக்கு சிராக் பஸ்வானும் தனக்கு எதிராகச் செயல்பட்ட பசுபதி குமார், பிரின்ஸ் ராஜ் உள்ளிட்ட 5 எம்.பி-க்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் கலீக் மூலம் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், பசுபதி குமார் தலைமையிலான எம்.பி-க்கள் சுராஜ் பான் என்பவரைத் தற்காலிக தலைவராக நியமித்து அவரது தலைமையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் தனது சித்தப்பா பசுபதி குமாரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் இறங்கி ஏமாற்றமடைந்த சிராக் பஸ்வான் தற்போது பதிலுக்கு பாய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி பிளவு பட்டு இரண்டாகி விட்ட நிலையில், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் அவர் இறங்கியுள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமை நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தைச் சாடிய சிராக் பஸ்வான் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயல்வதாக முதல்வரைக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தான் ஒரு சிங்கத்தின் பிள்ளை என்றும், போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் சூளுரை ஆற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பசுபதி குமாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது கட்சியின் சாரங்களை மீறும் செயல் என்பதால் தன்னையே தலைவராகத் தொடரும்படி அறிக்கை வெளியிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

சிராக் பஸ்வான் - பசுபதி குமார்

முன்னதாக, கட்சியிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும், தாய் போல் கருதும் கட்சியை தான் முறையாக வழிநடத்தத் தவறிவிட்டதாகவும் பசுபதி குமாருக்கு மார்ச் மாதம் எழுதியிருந்த கடிதத்தை ட்விட்டரில் சிராக் பஸ்வான் ஷேர் செய்திருந்தார். அதை வைத்து, அவராகவே, கட்சியிலிருந்து விலகி விட்டார் என்று பசுபதி குமார் தரப்பினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், சிறிது நேரத்திலேயே பாயும் புலியாக 5 எம்.பி-க்களை நீக்க பொதுச்செயலாளர் மூலமாக உத்தரவிட்டார்.

ஆனாலும், பசுபதி குமார் தொடர்ந்து கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சிராக் பஸ்வான் கட்சியின் விதிமுறைகளுக்குப் புறம்பாக நாடாளுமன்ற குழுத்தலைவர், தேசிய தலைவர் உட்பட 3 பதவிகளில் இருப்பதாகக் குற்றம்சாட்டி கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார்.

முன்னதாக, 2019-ல் பசுபதி குமார் வகித்து வந்த பீகார் மாநில தலைவர் பதவியை சிராக் பஸ்வான், அவரது இளைய சித்தப்பா மகனான பிரின்ஸ் ராஜுக்கு வழங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று பிரின்ஸ் ராஜ் உள்ளிட்ட 5 எம்.பி-க்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டதால், பிரின்ஸ் ராஜுக்கு பதிலாக பீகார் மாநில தலைவராக ராஜு திவாரி என்பவரை நியமித்திருக்கிறார். அதன் காரணமாக, பசுபதி குமார் தரப்பினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள பிரின்ஸ் ராஜ் மீதான பாலியல் சர்ச்சை விவகாரம் சிராக் பஸ்வானுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

லோக் ஜனசக்தியின் சமஸ்திபூர் எம்.பி-யான பிரின்ஸ் ராஜ், 4 மாதங்களுக்கு முன் 2 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். அதில், ஒரு பெண் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தன்னை பொய்யான பாலியல் புகாரில் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார். பிரின்ஸ் ராஜ் புகார் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சிராக் பஸ்வான் தனது சித்தப்பா பசுபதி குமாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், "பிரின்ஸை கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பெண் பாலியல் புகாரில் மிரட்டி பண பறிக்க முயன்று வருகிறார். இந்த விவகாரத்தில் உங்களின் கருத்துக்களை நான் கேட்க விரும்புகிறேன். நான் பிரின்ஸிடம் நேராகக் காவல்நிலையம் சென்று உண்மைகளைக் கூறிவிடுமாறு சொல்லியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அந்த கடிதத்தைத் தனது ட்விட்டரில் சிராக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டு, தான் இந்த விவகாரத்தில் முறையான போலீஸ் விசாரணை வேண்டும் என்றே ஆரம்பத்திலிருந்து கூறி வருவதாக பதிவிட்டுள்ளார்.

பிரின்ஸ் ராஜ்

மேலும், இது தொடர்பாகப் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிராக், "எனக்கு இந்த விவகாரம் ஜனவரி 8-ம் தேதி தான் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கடிதம் அளித்திருந்தனர். அவர்கள் நடந்த விஷயங்களை என்னிடம் கூறினார்கள். இது குறித்து நான் எனது சகோதரர் பிரின்ஸிடம் பேசினேன். ஆனால், அவர் முன்வைத்த வாதம் முற்றிலும் நேர் மாறாக இருந்தது. நான் விசாரிக்க வேண்டிய தேவை இல்லாததால், இருவரையுமே காவல்நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தினேன்" என்று கூறினார். பிரின்ஸ் ராஜ் குறித்ததான சிராக் பஸ்வானின் பேச்சு பசுபதி குமார் தரப்பினருக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த பாலியல் சர்ச்சை விவகாரம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "டெல்லி பார்லிமென்ட் காவல்நிலையத்தில் பிரின்ஸ் ராஜின் புகார் பதியப்பட்டிருக்கிறது. 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. பின்னர், டெல்லி மாவட்ட சிறப்புக் காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பிரின்ஸ், லோக் ஜனசக்தி கட்சியின் நிர்வாகியான ஒரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் சந்தித்ததாகவும், தொலைப்பேசி எண்களை மாற்றிக்கொண்டு நெருங்கிப் பழகியதாகவும் கூறியிருக்கிறார். பின்னர், சில மாதங்கள் கழித்து தன்னிடம் நெருங்கிப் பழகிவந்த பெண் இன்னொரு நபருடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருவதைக் கண்டு அதிர்ந்து போனதாகவும், அதிலிருந்து அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த பெண் அந்த நபருடன் சேர்ந்து தன்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், கொடுக்க தவறினால் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியதாகவும் பிரின்ஸ் கூறியிருக்கிறார்.

Also Read: பீகார்: சித்தப்பாவால் வீழ்த்தப்பட்ட சிராக் பஸ்வான்! - ராம் விலாஸ் பஸ்வான் கட்சியில் என்ன நடக்கிறது?

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை எம்.பி பிரின்ஸ் ராஜ் போலீஸில் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ள பெண் பிரின்ஸ் ராஜ் மீது 3 பக்க புகார் கடிதத்தை அளித்திருக்கிறார். அதில் அந்த பெண், பிரின்ஸ் ராஜ் தன்னிடம் நெருங்கிப் பழகி குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்துகொடுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், மேலும், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய பிரின்ஸ் ராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும் புகார் அளித்திருக்கிறார்.

ஏற்கனவே, எதிர்த் தாக்குதல் புரிந்து வரும் சிராக் பஸ்வானால் கலங்கிப் போயிருக்கும் பசுபதி குமார் தற்போது பிரின்ஸ் ராஜ் மீதான பாலியல் சர்ச்சையால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாராம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/new-twist-in-ljp-crisis-complaint-of-sexual-abuse-against-chirag-cousin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக