Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

நோபலுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட FACT CHECK நிறுவனம்... ஏன், எதற்காக?

அமெரிக்காவிலிருந்து இயங்கும் The International Fact-Checking Network IFCN என்னும் நிறுவனத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஜோ பைடன் அவரின் அறிமுக உரையிலேயே பொய்ச் செய்திகள் பரப்பும் விஷம் பற்றி பேசியிருந்தார்.

நோபல் பரிசு

இணையம் வந்த பின்னர், செய்திகளின் இலவச இணைப்பாக போலிச் செய்திகளும் அதிகம் பரவ ஆரம்பித்துவிட்டன. அதற்கு முன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அச்சேறும் என்றாலும், இணையம் தரும் வேகமும், ஒரு செய்தியை முந்தித் தர வேண்டும் என்கிற ஆர்வமும், போலிச் செய்திகளுக்கு மக்களிடம் இருக்கும் கிளர்ச்சியும், தொடர்ந்து அதை அதிகமாக்கவே செய்கிறது.

சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின்னர், அது இன்னும் அதிகமாகியிருக்கிறது. பிடித்த ஹோட்டல், பிடித்த நடிகர், பிடித்த குழு என்பதுபோல் செய்திகளிலும் பிடித்தது சேர்ந்தது கொள்ள, ஒருவரின் கொள்கைகளுக்கு ஆதரவான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. ஒரு செய்தியை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்பது மாறி, கற்பனையில் பல கோணங்களில் உருவாக்கப்பட்ட செய்திகள் வாட்ஸப் வழி அனைவரது மொபைல்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.

இதன் விளைவாக செய்தி சேகரிக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக ஒரு செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யும் FACT CHECK நிறுவனங்களும் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் போஸ்ட் , அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் அதன் ஒரு அங்கமாக இந்த FACT CHECK செய்திகளையும் வைத்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட International Fact-Checking Network என்கிற அமைப்பு, எழுபது நாடுகளிலிருக்கும் 99 FACT CHECK நிறுவனங்களை இணைத்திருக்கிறது.

" எல்லாவற்றையும்விட போலிச் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. நாம் நம் கருத்துகளுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், யாரோ சிலர் உண்மைக்காகப் போராடுகிறார்கள், பொய்ச் செய்திகள் பரவாமல் இருக்க மெனக்கெடுகிறார்கள். அவர்கள் செய்வதே அமைதியை நோக்கிய ஒரு முயற்சி தான்" என்கிறார் IFCNஐ பரிந்துரை செய்த நார்வே எம்பி கிரேண்ட்.

FACT CHECK செய்யும் நிறுவனங்கள் நடுநிலைமையானதா, எந்தவித அரசியல் சார்பும் இல்லாதவர்களா, அவர்கள் நிறுவனத்தின் மூலதனம் என்ன என்பதுபோன்ற போன்ற பலவற்றை ஆராய்ந்து அவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதைப் புதுப்பிக்கவும் வேண்டும். இப்படியாக உண்மைச் செய்திகளை கண்டறிவதோடு நில்லாமல், அது சார்ந்து இயங்கும் நிறுவனங்களையும் கவனம் பெற வைக்கிறது IFCN. உண்மைச் செய்திகளுக்கான அவசியம் அதிகரித்து வரும் சூழலில், பொய்ச் செய்திகளை இனம் காணுவது அதைவிடவும் அவசியம் என்பதை நினைவுறுத்துகிறது IFCN



source https://www.vikatan.com/news/general-news/ifcn-nominated-for-nobel-peace-prize

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக