Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

`தனிப்பெரும் தலைவர்’ : எடப்பாடி வளர்ச்சிக்கான `மேஜிக்’ என்ன?

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் செல்வாக்குமிக்க தலைவர்களில் முதலிடம் வகிப்பவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருக்கு அடுத்த இடத்தில் செல்வாக்குமிக்க தலைவர் யாரென்று பார்த்தால், அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராக இருந்த நேரத்தில், அவரது அமைச்சரவையில் ஒர் அமைச்சராக இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு அவர் ஓ.பன்னீர்செல்வத்தைக் காட்டிலும் கட்சியிலும் ஆட்சியிலும் வலிமைமிக்க ஒரு தலைவராகத் தன்னை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. முதல்வராக அவர் தேர்வுசெய்யப்பட்டதன் பின்னணி, அன்றைக்கு நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அமைச்சர்களில் ஒருவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அ.தி.மு.க-வுக்குள் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களத்திலும் தனிப்பெரும் தலைவராக வளர்ந்திருக்கிறார்.

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியால் அந்தக் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல விவாதங்களும் சர்ச்சைகளும் நடைபெற்றன. ஆனாலும், அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் என்ற இடத்தில் எடப்பாடி பழனிசாமி தவிர்க்க முடியாதவராகவே இருந்தார். ஆகவேதான், எடப்பாடி தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வத்தாலேயே அவர் அறிவிக்கப்பட்டார். ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி என்று பார்க்கப்படும் அளவுக்கு தமிழக அரசியலில் தன்னுடைய செல்வாக்கையும் பலத்தையும் அவர் உயர்த்திக்கொண்டிருக்கிறார். நான்கு ஆண்டுகளில் இது எப்படி சாத்தியமானது?

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான சிவசங்கரியிடம் பேசினோம்.
``முதல்வர் எடப்பாடியாரின் ஆட்சி நிர்வாகம் சற்று மாறுபட்டது. எந்த வகையில் என்றால், எந்தவொரு பணியும் எந்தவொரு திட்டமும் கிடப்பில் இருக்கிறது என்று சொல்ல முடியாது என்கிற அளவுக்கு கோப்புகள் அனைத்தும் விறுவிறுவென்று நகரக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார். எந்தவொரு கோப்பும் தேங்காமல் பார்த்துக்கொள்வதில் மிகவும் கவனமாக முதல்வர் இருக்கிறார். கட்சியினரோ, பொதுமக்களோ, தொழிலதிபர்களோ, அதிகாரிகளோ என யாராக இருந்தாலும் மிக எளிதாக அணுகக்கூடியவராக இருக்கிறார்.

சிவசங்கரி

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரே நேரத்தில் பல சவால்களும் போராட்டங்களும் அவருக்கு இருந்தன. டி.டி.வி.தினகரனால் பல பிரச்னைகள் வந்தன. தி.மு.க தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. கட்சிக்குள் அனைத்துத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து, கட்சியை இணைக்க வேண்டிய சூழல் என மும்முனைப் போராட்டத்தை முதல்வர் நடத்தினர். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது உள்பட பல பிரச்னைகளைத் தி.மு.க கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த சவால்களும் நெருக்கடிகளும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடக்கூடியவை அல்ல. ஆனால், அவற்றை வெற்றிகரமாக முதல்வர் எதிர்கொண்டார்.

சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்தது. அதற்காக தி.மு.க பல போராட்டங்களை நடத்தியது. அந்த நேரத்தில், ரூ.1,000 கோடியை ஒதுக்கி தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள உத்தரவிட்டார். 80 ஆண்டுகளாகத் தூர்வாராமல் இருந்த மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. அதனால் கொள்ளளவு அதிகரித்து, இரண்டு தடவை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நிறைய தடுப்பணைகளும் பாலங்களும் மேம்பாலங்களும் கட்டப்பட்டன. 95 கூட்டுக்குடிநீர் திட்டங்களும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் உள்பட மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி, இந்திய அளவில் மத்திய அரசின் விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.

Also Read: `குடியரசு தினத்துக்குள் விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு' - மத்திய அரசின் திட்டம் பலிக்குமா?!

வெளிநாட்டு தொழில் முதலீடு ஈர்த்துள்ளார். கொரோனா காலத்தில் ரூ.61,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியை வேளாண் மண்டலம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை இருக்கிறது. 18 மணி நேர மின்வெட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னை, நில அபகரிப்பு போன்ற பிரச்னைகள் தி.மு.க ஆட்சி மீது கடுமையான அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியது உள்பட பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் இந்த அரசின் மீது அதிருப்தி என்பது இல்லை.

எடப்பாடி

இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், 35,000 போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தது இந்த ஆட்சிதான். முதல்வர் எடப்பாடியார் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

டி.டி.வி.தினகரனெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு முதல்வர் ஆக்கிவிட்டார். தினகரன் முகாமில் இருந்த மொத்தப் பேரையும் அ.தி.மு.க-வுக்கு கொண்டுவந்துவிட்டார். ஆட்சி இருக்கவே இருக்காது, நாளைக்கே ஆட்சி மாற்றம் நடக்கும் என்றெல்லாம் ஸ்டாலின் சொன்னார். நாம் நினைப்பது மாதிரி அவ்வளவு எளிதாக அ.தி.மு.க-வை ஜெயிக்க முடியாது என்ற அச்சம் தி.மு.க-வுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் முதல்வரின் ஆளுமைமிக்க ஆட்சிதான். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியைக் கட்டியதிலும் சரி, கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியதிலும் சில முதல்வரின் ஆளுமையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் சிவசங்கரி.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் பேசினோம்.
``காலம் சிலருக்கு சில வாய்ப்புகளைக் கொடுக்கிறது. திறமையுள்ளவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். யாரோ ஒருவருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்கிற சூழல், ஜெயலலிதா இருந்தபோதும், சசிகலா இருந்தபோது எடப்பாடிக்கு இருந்தது. அதுபோன்ற சூழல் இப்போது அவருக்கு இல்லை. இப்போது அவர் சுதந்திரமாக இருக்கிறார். தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் என்னவெல்லாம் தேவையோ அவற்றை அவரால் செய்துகொள்ள முடிகிறது. உட்க்கட்சிக்குள் இருந்தும், எதிர்க் கட்சியிலிருந்தும் வரக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க வெளியிலிருந்து கிடைக்கிற உதவியாக மத்திய அரசின் உதவியும் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைக்கிறது.

ஜென்ராம்

இந்த எல்லா சூழலையும் எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டதால், அவர் நன்றாக செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது.முன்னாள் முதல்வராக இருந்து வாய்ப்புக் கிடைக்காத அதிருப்தியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவரிடமிருந்து எடப்பாடிக்கு சவால் வந்தது. ஆட்சியை கலைப்பதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்கட்சியிலிருந்து கொண்டுவரப்பட்டது. அதை சசிகலா துணையுடன் எடப்பாடி எதிர்கொண்டார். அதன் பிறகு, சசிகலா குடும்பத்திலிருந்து அவரது பதவிக்கு ஏதேனும் நெருக்கடி வரும் என்கிற சூழலில், தினகரனால் எழுந்த சவால்களை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எதிர்கொண்டார். எல்லா தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வந்தபோது மத்திய அரசின் துணையுடன் அவற்றை சமாளித்தார். இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு தொடர்பான சில நலன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் என்பதும் உண்மை. அது அவருக்கு பலவீனம்.

எட்டு வழிச்சாலை, தூத்துக்குடி போன்ற விவகாரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர் இருந்தார். வளர்மதி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைத்தது போன்ற நடவடிக்கைகள் எடப்பாடியின் ஆட்சிக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தின. பல பிரச்னைகள் தொடர்பாக போராட்டங்கள் வெடித்தபோது, ‘மக்களின் உணர்வுக்கு எதிராக எதையும் செய்யமாட்டோம்’ என்று எடப்பாடி வெளிக்காட்டிக்கொண்டார்.

ஸ்டாலின்

ஆனால்,உண்மையியே மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கைவிட்டாரா என்பது தெரியாது. ஆனால், அவரது வாக்குறுதியில் மக்கள் ஆறுதல் அடைந்துவிடுகிறார்கள். மக்களுக்கு வாக்குறுதிகள் போதுமானவையாக சில சமயங்களில் இருக்கின்றன

Also Read: `அ.தி.மு.க உறுப்பினர்’... பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி அஸ்திரம்?

எடப்பாடியைப் பொறுத்தளவில், ஓரளவுக்கு அதிகாரப் பரவலை அனுமதித்திருக்கிறார் என்று பார்க்கிறேன். இந்த நான்காண்டு காலத்தில் கிடைத்த வாய்ப்புகளை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சி நான்கு ஆண்டுகளும் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஓர் உதவியுடன் அவர் இந்த நான்கு ஆண்டுகளிலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.

எடப்பாடி

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது அவருக்கு நல்ல பெயர் இல்லை. எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தது. பொதுமக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை. அதற்கு பிறகான இந்த நான்காண்டுகளில் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். கருத்துக்கணிப்பு முடிவுகளின் பார்வையில் பார்க்கும்போது, ஸ்டாலினுக்கு அடுத்த தலைவராக எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வமோ, சசிகலாவோ, தினகரனோ, மற்ற தலைவர்களோ இல்லை” என்றார் ஜென்ராம்.

முதல்வர் பதவியைக் கொடுத்து முதுகில் தட்டிக்கொடுத்த சசிகலாவை, கட்சியில் சேர்த்துக்கொள்ள `100 பர்சன்ட் வாய்ப்பே இல்லை’ என்று பகிரங்கமாகச் சொல்லுகிற துணிச்சலுக்குப் பின்னால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-edappadi-palanisamy-stands-himself-as-a-strong-leader

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக