அதிகாலை எழும் அபி, வீட்டில் சித்தார்த் இல்லாததைக் கண்டு குழப்பமடைகிறாள். அப்போது சித்தார்த் போன் செய்து, அவசர வேலையாக ஹைதராபாத் செல்வதாகவும் ஏர்போர்ட் வந்துவிட்டதாகவும் சொல்கிறான். அபி, `நான் ஆபிஸ் போக வேண்டுமே, இப்படி திடீரென்று சொன்னால் என்ன செய்வது?' என்று கேட்கிறாள். ``ஏற்கெனவே சொல்லிட்டேன், உன் வேலைக்காக என் கரியரை நான் விட்டுத் தர மாட்டேன்” என்று வழக்கம்போலவே கோபத்துடன் போனை வைக்கிறான் சித்தார்த்.
என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் மனைவியிடம் சொல்லாமலா செல்வார்கள்? அபி வேலைக்குச் செல்வது பிடிக்காமல், வேண்டுமென்றே அவளைத் திண்டாட வைக்க இப்படிச் செய்கிறான் சித்தார்த். குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தால் சித்தார்த் இப்படி நடந்துகொள்ள மாட்டான். நம் நாட்டில் பெரும்பாலானவர்களின் எண்ணம் இதுவாகத்தானே இருக்கிறது!
வேலைதான் சவாலாக இருக்கிறது என்றால், வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு வேலைக்குப் போவது மிகப் பெரிய சவாலாகிவிட்டது அபிக்கு. எந்த அலுவலகமும் பெண்களின் பிரச்னைகளை ஸ்பெஷலாக எடுத்துக்கொள்ளாது. லீவு போடவும் முடியாது.
அபியின் கவலையைக் கண்ட அவள் மகள், ``நாங்க ரெண்டு பேரும் வீட்லயே இருக்கோம். வாட்ச்மேன் அங்கிள், ஆன்ட்டி எங்களைப் பார்த்துப்பாங்க. கவலைப்படாம போயிட்டு வாங்க” என்கிறாள். அபிக்கும் அது நல்ல ஐடியாவாகத் தோன்றுகிறது. இந்தக் குழந்தைகள் இருவரும் செம க்யூட். அதுவும் பெண் குழந்தை பேசும்போது, வாரி அணைக்கத் தோன்றுகிறது.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, வாட்ச்மேன் மனைவியிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஆபிஸ் செல்கிறாள் அபி. சித்தார்த் வீடியோ காலில் வருகிறான். எழுந்து வெளியில் போய்ப் பேச வேண்டும் என்பதுகூடவா ஒரு பெண்ணுக்குத் தெரியாது? எல்லோரும் அமைதியாக வேலை செய்துகொண்டிருக்க, உட்கார்ந்த இடத்திலேயே பேச ஆரம்பிக்கிறாள் அபி. அவள் ஆபிஸ் வந்ததை அறிந்து, சித்தார்த் கத்துகிறான். எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். அபிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து வரும் வீணா, அபியை வெளியே சென்று பேசச் சொல்கிறாள். ஆனால், சித்தார்த் போனை ஆஃப் செய்துவிடுகிறான்.
சித்தார்த் நினைப்பிலிருந்து வெளிவரும் அபி, வேலையில் கவனம் செலுத்துகிறாள். அவள் செய்யும் வேலையைக் குறை சொல்கிறாள் சக ஊழியரான காயத்ரி.
ஆபிஸ் டாஸ்க்கையும் வீட்டு டாஸ்க்கையும் ஒருசேர சமாளிப்பாளா அபி?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-31
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக