வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படித் தொடங்குவீர்கள்?
`Central list of projects' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டப்பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளும் இந்தத் திட்டத்தின் கீழ்தான் மேற்கொள்ளப்பட இருக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளுக்குப் பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்ட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களைத் தொடங்குவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில், புதிய கட்டுமானப் பணிகள் தொடங்குவதோ, பழைய கட்டடங்களை இடிப்பதோ என எந்தவொரு பணியும் நடைபெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இந்தசூழலில், புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
Also Read: `பணத்தைச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம்!’ - AGR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
எட்டு மாதங்களுக்குப் பின் கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் இறுதியில் மூடப்பட்ட கல்லூரிகள் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/07-12-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக