`கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவார்’, `ரஜினி, கட்சி ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை’ என்கிற விவாதங்கள் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த நிலையில், வரும் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். அடுத்ததாக, ரஜினி யாருடன் கூட்டணி கூட்டணி வைக்கப்போகிறார் என்பது பற்றிய விவாதம் தற்போது நடைபெற்றுவருகிறது.
பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரும் மத்திய உள்த்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் அறிவித்துவிட்டனர். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். இது பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். அவரது வரவு நல்வரவாக அமையட்டும்’ என்றார். `ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, `எதிர்வரும் காலங்களில் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்’ என்று அவர் பதிலளித்துள்ளார்.
Also Read: ``ஓ.பி.எஸ்-ஐ அமைதியா இருக்கச் சொல்லுங்க” - முதல்வரிடம் கடுகடுத்த அமைச்சர்கள்!
சிவகங்கையில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரஜினி கட்சி பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, ``ரஜினி தனது கட்சியைப் பதிவுசெய்யப்பட்டும். அவர் அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார். ரஜினி, தனது கட்சியைப் பதிவுசெய்தவுடன் வந்து கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியானதாக இருக்கும். பன்னீர்செல்வம் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது” என்றார். ரஜினி கட்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், `பன்னீர்செல்வம் தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து. ரஜினி கட்சி தொடங்குவது குறித்து யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்’ என்றார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடரும் என்று பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷா முன்னிலையில் அறிவித்தார்கள் என்றாலும், கூட்டணி குறித்து பா.ஜ.க தரப்பிடமிருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. `கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவுசெய்யும்’ என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறிவிட்டார். ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள பா.ஜ.க திட்டம் வைத்துள்ளதா என்பது தெரியவில்லை.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் `துக்ளக்’ ரமேஷிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ரஜினிகாந்த் முன்பாக இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் தனித்துப் போட்டியிடுவது. இன்னொன்று தனது தலைமையில் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணியாகப் போட்டியிடுவது. கூட்டணி என்ற வாய்ப்பை ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்தாலும்கூட, அந்தக் கூட்டணி அவரது தலைமையில்தான் இருக்கும் என்பதிலும், அவரது கட்சிதான் பெரும்பாலான இடங்களில் போட்டியிடும் என்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அவரது தலைமையை ஏற்க முன்வருகிற கட்சிகள்தான், அவரது அணியில் இடம்பெற முடியும். அப்படியொரு நிலை இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். ஆகவே, அவர் அ.தி.மு.க-வுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தி.மு.க அணியிலிருந்து வெளியே வந்து எந்தக் கட்சியும் ரஜினிகாந்த் தலைமையிலான அணியில் சேருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. ரஜினிகாந்த்துடன் இணைந்து பயணிக்க பா.ஜ.க விரும்புகிறது. ரஜினிகாந்த் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடரும் என்று அ.தி.மு.க தலைமை அறிவித்திருந்தாலும், அ.தி.மு.க-வுடன் உறவு தொடர்வதாக பா.ஜ.க மேலிடம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தலைமையிலான அணியில், ஏற்கெனவே அ.தி.மு.க அணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதை நிராகரிக்க நான் தயாராக இல்லை.
Also Read: ரஜினி அரசியல்: நவம்பர் 30 டு டிசம்பர் 3 - இடைப்பட்ட நாள்களில் நடந்தது என்ன?
ஒருவேளை ரஜினிகாந்த் பா.ஜ.க-வுடன் அணியாக செயல்படாத சூழல் ஏற்படுமானால், தி.மு.க அணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தி.மு.க-வுடன் தங்கள் பேர வலிமையை அதிகரிக்கக்கூடும். அப்போது தி.மு.க, தனது அணியில் உள்ள கட்சிகளிடம் கறாராக நடந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் ரஜினியின் வருகை பலமான அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. வருகிற வாரங்களில் சுவாரஸ்யமான காட்சிகளை தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்க்கலாம்.
ரஜினியுடன் கூட்டணி சேருவதற்கு பா.ஜ.க ஆர்வம் காட்டியிருக்கிறது. ரஜினிகாந்த் தனக்கு முன்பு உள்ள எல்லா வாய்ப்புகளையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு வியூகம் வகுப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், 2021 தேர்தல் களத்தில் ரஜினி பிரதானப் போட்டியாளராக இருப்பார். தேர்தலுக்கு முன்பு வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில அல்லது பல முக்கியஸ்தர்கள் ரஜினியுடன் கைகோக்கும் வாய்ப்பு உள்ளது” என்றார் துக்ளக் ரமேஷ்.
Also Read: ரஜினியின் அரசியல் வருகையைக் கொண்டாடும் பா.ஜ.க... காரணம் என்ன?
பா.ஜ.க-வின் கருத்தை அறிவதற்காக அதன் மாநில செய்தித்தொடர்பாளர் திருப்பதி நாராயணனிடம்,``ரஜினியின் அரசியல் வருகையை மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் மகிழ்ச்சியுடன் பா.ஜ.க வரவேற்கிறது’’ என்றார். ``ரஜினி கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி சேருமா?” என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர், ``கட்சியை ஆரம்பிக்கப்போவதாக ரஜினி சொல்லிவிட்டார். அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும். அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை அவர் அறிவிக்கட்டும்.
அதன் பிறகுதான் கூட்டணி பற்றியே பேச முடியும். ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க உள்பட ஆறேழு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில் பெரிய கட்சி என்ற வகையில் இந்தக் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை வகிக்கிறது. இந்தக் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், கூட்டணி பற்றி எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமை முடிவெடுக்கும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/impact-of-rajinikanths-party-entering-into-tamilnadu-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக