Ad

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

பதாகையுடன் அமைதி காத்த விவசாயிகள்! - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். `வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும், ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்' என்று விவசாயிகள் உறுதியாக இருப்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி தொடர்ந்து குவிந்து வருவதால் பாதுகாப்பு அளிக்க போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதையடுத்து, மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் நேற்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்

இதனிடையே விவசாய சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, டெல்லி விக்யான் பவனில், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட 5 -ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் குறித்த கருத்தையும் வரவேற்பதாகவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். அப்போது பஞ்சாபி மொழியில் பேசிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், ``பஞ்சாபின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதாகவும், உங்ககளின் அனைத்து கவலைகளுக்கும் திறந்த மனதுடன் தீர்வு காண தயாராக இருக்கிறோம். விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. தீர்க்கமான முன்மொழிவை வழங்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் வரும் 9-ம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

இதையடுத்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "இன்று வெவ்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. நாங்கள் ஒரு நியாயமான தீர்வை விரும்பினோம், ஆனால் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அது நடக்கவில்லை. டிசம்பர் 9-ம் தேதி மற்றொரு கூட்டம் நடைபெறும். நாங்கள் விவசாயிகளிடம் அனைத்து பிரச்னைகளையும் விவாதிப்போம்” என்று கூறியுள்ளோம்.

``விவசாய சங்க தலைவர்களிடமிருந்து எங்களுக்கு சில தீர்வுகள் கிடைத்திருந்தால் அது எளிதாக இருந்திருக்கும். அதற்காக நாங்கள் இன்னும் காத்திருப்போம்" என்று தோமர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவித்தார். மேலும், தலைநகரை எதிர்த்து முகாமிட்டுள்ள முதியவர்களையும், குழந்தைகளையும் திரும்ப அனுப்புமாறு விவசாய சங்க தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார் தோமர். குளிர்காலம் மற்றும் கோவிட் தொற்றுநோயைக் காரணம் காட்டி வீடு திரும்ப அறிவுறுத்தியதோடு, "எம்.எஸ்.பி. (குறைந்தபட்ச ஆதரவு விலை) தொடரும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையே எந்த வித முடிவுகளும் எடுக்கப்படாமல் 5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 5-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் பெரும்பாலும் அமைதியாக இருந்தனர். தங்கள் கையில், `வேளான் சட்டங்களை ரத்து செய்ய முடியுமா முடியாதா’ என்ற பதாகையை கொண்டு இருந்தனர். இதன் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் விவசாய குழுக்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் வரும் 8-ம் தேதி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/what-happened-in-farmers-government-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக