Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

`வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தை நாடிய விவசாயிகள் சங்கம்

மத்திய அரசு, 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களைக் கடந்த செம்பம்பரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு செப்டம்பர் 27-ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அதில் எந்த ஒரு முடியும் எட்டப்படாத நிலையில், சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்தநிலையில், பாரதிய விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர சிங் தோமர்

அதில்,``வேளாண் சட்டங்களானது குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு விளைபொருட்களின் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை கொடுத்து விடும். வேளாண்மை வர்த்தகமையமாகிவிடும். விவசாயிகள் அந்த வர்த்தக நிறுவனங்களின் பேராசைக்கு இறையாகிவிடுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தாக்கல் மனுவில், ``போதிய விவாதங்களுக்கு உட்படுத்தப்படாமல் அவசர அவசரமாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு விவசாய சங்கங்கள், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தும் அரசு அதை கருத்தில்கொள்ளவில்லை.

Also Read: அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு; டோல்கேட் கட்டணம் கிடையாது - உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

விவசாய விளைபொருட்கள் சந்தை குழுஅமைப்பு (APMC) விலை, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை மற்றும் நிதி உதவியை வலுப்படுத்த வேண்டும்’’ என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆறு மனுக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி. மனோஜ் ஜா, சத்தீஸ்கர் கிசான் காங்கிரஸின் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் இறுதி வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை தொடரும் என்று மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ உத்திரவாதத்தை மத்திய அரசு கடந்த 9-ம் தேதி கொடுத்தது. ஆனால், விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அதை நிராகரித்தது. வேளாண் சட்டங்கள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக ரயில் மறியலில் ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/farmers-union-files-new-petition-in-sc-over-farm-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக