Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

கரூர்: `அமராவதி ஆற்றில் கழிவு கலக்கப்படுகிறதா?' - பரபரக்க வைத்த அதிகாரிகளின் ஆய்வு

கரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகளை கலந்து விடப்படும் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி மாசுபட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர்

Also Read: கரூர்: அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்... தாமாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றக் கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து வரும் ஆறு அமராவதி. கரூர் நகரையொட்டி ஓடி, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூரில் காவிரியில் கலக்கிறது. இந்த அமராவதி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகளும், சாக்கடைகளும் கலக்கப்பட்டதால், இந்த ஆறு முற்றிலும் மாசுப்பட்டுப்போனது. சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் வரை சென்று போராடி, 300 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளை மூடவைத்தார்கள். அதன்பிற்கு, 100 க்குள் இருக்கும் சாயப்பட்டறைகளில் சில நிர்வாகங்கள், அவ்வபோது அமராவதி ஆற்றில் கழிவுகளை கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்.

அமராவதி ஆறு

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, அமராவதி ஆற்றில் கரூர் நகராட்சியே முன்னின்று, கழிவு நீர் கால்வாய் ஒன்றை, ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டுவதாக, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் எழுப்பினார்கள். இதுபற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது. அதைதொடர்ந்து, சிலதினங்களுக்கு முன்பு அந்த கால்வாயை கரூர் சார்பு நீதிபதி மோகன்ராம் ஆய்வு மேற்கொண்டு, அந்த அறிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், அமராவதி அணை மழையால் நிரம்ப, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள, விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குநர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கிளை கால்வாய்களில் வரும் தண்ணீரை ஆய்வுக்காக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிளை வாய்க்காலில் வரும் கழிவு நீர்

இதற்கிடையில், 'கரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கப்படுவதால், ஆறு மாசடைகிறது. நோய் உருவாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலக்க விடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?. டன் கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்.

தொடர்ந்து அவர்கள், 'அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும்' என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கரூர் அமராவதி ஆற்றில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குநர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை மற்றும் கரூர் நகராட்சி அதிகாரிகள் 5 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சேகரிக்கப்பட்ட கழிவு நீர்

அமராவதி ஆற்றை ஒட்டியிருக்கும் கிளை வாய்க்காலிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், அந்த அறிக்கையையும் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அமராவதி ஆறு மாசடையும் விவகாரத்தில், நீதிமன்றம் சாட்டையை சுழற்றுவதால், அமராவதி ஆறு விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விவசாயிகள்.



source https://www.vikatan.com/news/general-news/officers-inspection-in-amaravathi-river-by-court-order

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக