சென்னை திருவான்மியூர் போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் 5-ம் தேதி இரவு தெற்கு அவென்யூ சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வேகமாக வந்தது. காரின் வேகத்தைப் பார்த்த போலீஸார், அதை தடுத்து நிறுத்தினார். அப்போது காரை இளைஞர் ஒருவர் ஓட்டியதும், அவரின் அருகில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீஸார், காரை ஓட்டிய இளைஞரிடம் மது பரிசோதனைக்கான கருவியில் ஊதும்படி கூறினர்.
அதில், இளைஞர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காரை விட்டு இறங்கும்படி போலீஸார் கூறினர். அதன்படி அந்த இளைஞரும் காரைவிட்டு இறங்கினார். இந்தச் சமயத்தில் காருக்குள் அமர்ந்திருந்த இளம்பெண், கீழே இறங்கினார். `நீங்கள் யாரு, எங்களை காரை விட்டு இறங்க சொல்வது?’ எனக் கூறீ வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது அந்தப் பெண்ணும் மதுபோதையில் இருந்தது போலீஸாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கினார். அப்போது அந்தப் பெண், `நான் யாருன்னு தெரியுமா? மீடியாவில் இருக்கிறேன்’ என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார். அதோடு அருகில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து போலீஸாரை காலால் எட்டி உதைத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் இந்தச் செயலால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் மாரியப்பன், தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸார் அங்கு வந்தனர். இதற்கிடையில் இளம்பெண்ணின் அனைத்து செயல்களும் போக்குவரத்து போலீஸாரின் சட்டைப் பையில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவானது.
Also Read: `போதையில் தகராறு; பாலியல் வழக்கு..' - நடிகையின் மகனுக்கு சென்னையில் நேர்ந்த சோகம்
இதையடுத்து இளைஞர் மீது மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சமயத்தில் காரைப் பறிமுதல் செய்ய போலீஸார், அதில் ஏறியிருக்கிறார்கள். இதனால், `என்னுடைய காரில் நீங்கள் எப்படி அமரலாம்?’ என அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஒருவழியாக இளம்பெண்ணை சமதானப்படுத்தி இளைஞருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை இளம்பெண், அவரின் அம்மா ஆகியோர் திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தனர்.
இதற்கிடையில் போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன், இளம்பெண் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இளம்பெண் மீதும் இளைஞர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த காமினி (21) எனத் தெரியவந்தது. இவர், சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பதும் தெரிந்தது. மேலும், அவருடன் வந்த இளைஞர் அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த டோட்லா சேஷபிரசாத் (27) என்பதும் இன்ஜினீயராகப் பணியாற்றுவதும் தெரிந்தது. காமினி மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில்,``வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அணிந்திருந்த பாடி ஒன் (body one) என்ற கேமராவில் போதையிலிருந்த இளம்பெண் காமினி நடந்துகொண்ட விதம் அனைத்தும் பதிவானது. அதன்அடிப்படையில்தான் ஆபாசமாகப் பேசுவதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் காமினி மீது வழக்குபதிவு செய்திருக்கிறோம். காமினியின் பெற்றோர் மருத்துவர்களாக உள்ளனர்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-lady-cinema-asst-director
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக