Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`வீட்டுக்கொரு விவசாயி போராட்டக் களத்தில்!' - டெல்லி விவசாயிகள் போராட்டம் சாத்தியமானது எப்படி?

இன்றும் குளிரில் நடுங்கியபடியே டெல்லியில் விவசாயிகள் 27-வது நாளாக தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 27-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ``புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, சந்தை அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அந்தச் சட்டம் எங்களுக்கு வேண்டாம். திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி விவசாயிகள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். மேலும், வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் விவசாயிகளைத் தமிழக விவசாயிகள் சார்பில் பலரும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த தூரன் நம்பியும் ஒருவர்.

விவசாயிகள் போராட்டம்

அந்த வகையில் டெல்லியில் போராடும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்றிருக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், தூரன் நம்பியிடம் பேசினோம். ``டெல்லியில் நுழையும் இடங்களில் தடுக்கப்படும் விவசாயிகள் அங்கேயே நின்றுகொள்கிறார்கள். நேற்று முன்தினம் திகிரி ஏரியாவுக்குப் போயிருந்தோம். 17 கி.மீ தொலைவுக்கு டிராக்டரில் விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. திகிரி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பேசும்போது சில தகவல்கள் கிடைத்தன.

`இங்கு போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, மூன்று நேரமும் உண்டு வசதியாக இருக்கும் இடைத்தரகர்கள்தாம்' என்று அரசு சொன்னதுதான் விவசாயிகளுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயி போராடினால் மூன்று வேளை உணவு உண்ணாமல்தான் போராட வேண்டுமா? நாங்கள் என்ன சோற்றுக்கே வழியில்லாதவர்கள் என நினைக்கிறதா அரசு? நாங்கள் மக்களுக்கு உணவு கொடுப்பவர்கள். அப்படியென்றால் நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என அரசு நினைக்கிறதா? என்று பல விதமான கேள்விகள் அவர்களிடத்தில் இருக்கின்றன. அவர்களின் போராட்டம் சில நாள்களுக்கு ஆரம்பித்து முடிவது கிடையாது. அவர்கள் வேளாண் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற முடிவோடுதான் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டத்தை இத்தனை நாள்கள் கடந்து வெற்றிகரமாகத் தொடர்கிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாகத்தான் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் வீடு வீடாகச் சென்று திருமணத்துக்கு அழைப்பது போல அழைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஆங்காங்கே விவசாயிகள் கலந்து ஆலோசித்துப் போராட்ட யுக்தியை வடிவமைத்திருக்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியானா மாதிரியான மாநிலங்களில் பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். அதனால் விவசாயி குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவர் போராடுவது, சில நாள்களுக்குப் பின்னர் ஒருவருக்கு மாற்றாக அந்தக் குடும்பத்திலிருந்து இன்னொருவர் கலந்துகொள்வது, களத்தில் இருக்கும் விவசாயிகளின் நிலத்தை அந்தக் குடும்பமே சேர்ந்து கவனிப்பது எனப் பல பல யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். அங்கே பெரும்பாலும் கோதுமைதான் பயிர் என்பதால் அதற்குத் தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதுமானது. அதனால் அதற்கு மட்டும் அவர்கள் சென்று வருகிறார்கள். போராட்டக் களத்திலிருந்து ஒரு டிராக்டர் திரும்பி வருகிறது என விவசாயிகளிடமிருந்து ஒரு செய்தி மக்களுக்கு வந்தால், அதற்கு மாற்றாக இரண்டு டிராக்டர்கள் இங்கிருந்து அனுப்பப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் தடுத்து வைத்திருப்பதால் இந்த விவசாயிகள் கவலை கொள்ளவில்லை மாறாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். டெல்லிக்குள் விட்டிருந்தால் இந்நேரம் போராட்டம் நீர்த்துப் போயிருக்கும். இப்போது டெல்லி எல்லையில் இருப்பதால் அங்கே இருக்கும் கிராம மக்கள் உதவியும் இவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. 10 கி.மீ தூரம் தொலைவுக்கு இருந்த விவசாயிகள் கூட்டம், இப்போது 17 கி.மீ தூரமாகி இருக்கிறதே தவிர குறையவில்லை.

இன்னும் 6 மாதங்கள் ஆனாலும் நாங்கள் இங்கிருந்து போகப்போவதில்லை என்பது அவர்களின் பேச்சில் தெரிகிறது. இப்போது ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் என நான்கு மாநில விவசாயிகள் அதிகமாக இருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளும், ஆந்திர மாநில விவசாயிகளும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

தூரன் நம்பி

பேச்சுவார்த்தைக்கு இந்த விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு வந்தால் பேசுவார்கள். அதன் பின்னர் அரசும் விவசாயிகளும் இணைந்து பேசி, விவசாயிகளுக்குச் சரியான சட்டத்தை அரசு இயற்றலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள். எப்படியாவது போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவையெல்லாம் இங்கு நடக்காது என்பது விவசாயிகளின் பேச்சில் தெரிகிறது. இதுவரை 35 விவசாயிகள் இந்தப் போராட்டத்தின்போது இறந்திருக்கிறார்கள். நேற்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது, நானும் கலந்துகொண்டேன். இன்று காஜீப்பூர் பகுதிக்குச் செல்கிறேன். விவசாயிகள் கலைந்து போய்விடுவார்கள் என நினைப்பது அரசின் தவறான புரிதலைத்தான் இப்போதும் காட்டுகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/activist-thooran-nambi-explains-how-farmers-continuing-their-protesting-in-delhi-border

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக