Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

`இதெல்லாம் செய்தால் ஸ்நாக் கிரேவிங்கை ஆரோக்கியமாகக் கையாளலாம்!' - நிபுணரின் வழிகாட்டல்

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நம்மில் பலர், ஸ்நாக்ஸ் விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம். அதிலும் குறிப்பாக `இனிப்பா, காரமா அல்லது புளிப்பா ஏதாச்சும் சாப்பிடணும்' என்பது போன்ற ஸ்நாக்ஸ் கிரேவிங் எழும்போதெல்லாம் ஃபிட்னஸ் விஷயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு இஷ்டத்துக்கு எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறோம்.

யோகா ஆசிரியர் சினேகா ஸ்ரீனிவாசன்

ஆனால், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால், அந்நேரத்தில் ஜங்க் ஃபுட், எண்ணெய் உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கிய சிற்றுண்டிகள் எடுத்து, ஸ்நாக்ஸ் கிரேவிங்கை சிறப்பாகக் கையாளலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா ஆசிரியர் சினேகா ஸ்ரீனிவாசன். ஸ்நாக்ஸ் கிரேவிங்கை சரியாகக் கையாள தனது சொந்த அனுபவத்திலிருந்து அவர் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக...

* வீட்டில் எப்போதும் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை போன்றவற்றை ஸ்டாக் வைத்துக்கொள்ளுங்கள். இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள்.

* நாவின் இனிப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய, மாவுருண்டைகள் நல்ல சாய்ஸ். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்ற அனைத்து பருப்பு வகைகளையும் சம அளவு எடுத்து தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து ஒன்றாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இனிப்பாய் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது மாவைக் குறிப்பிட்ட அளவு எடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை, உருக்கிய நெய் ஆகியவற்றைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்துச் சாப்பிட்டால் இனிப்பு வேட்கை அடங்குவதோடு நிறைவான புரதமும் உடலில் சேரும்.

Snacks

* சிறிதளவு துருவிய தேங்காய், சிறிதளவு வெல்லம், ஒரு வாழைப்பழத்தின் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து சாப்பிட்டால் வயிறு நிரம்புவதோடு இனிப்பு ஆசையும் அடங்கும்.

* வீட்டில் என்னென்ன பழங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் எடுத்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தேன், சிறிது பனங்கற்கண்டு, சிட்டிகை உப்பு, சிட்டிகை மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்தால் டேஸ்ட்டியான பழ ஸ்நாக்ஸ் தயார்.

* இரண்டு வாழைப்பழம், காய்ச்சி ஆற வைத்த பால், தேவையான அளவு வெல்லம், சிட்டிகை மிளகுத்தூள், சிட்டிகை சீரகத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்தால் ஆரோக்கியமான மில்க் ஷேக் தயார். வயிறு நிரம்பிய உணர்வையும், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் இந்த மில்க் ஷேக் ஒருசேரத் தந்துவிடும். ஆனால், இதைத் தயாரித்த உடனேயே சாப்பிட்டுவிட வேண்டும்.

* கேரட், புடலங்காய் போன்ற காய்கள் கைவசம் இருக்கின்றனவா? அவற்றைச் சன்னமாகத் துருவுங்கள். பின்னர் இதனுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். உப்பு, புளிப்பு, காரத்துடன் இருக்கும் இந்த ஹெல்த்தி வெஜ் மிக்ஸ் உங்களது விருப்பான ஸ்நாக்ஸ் பட்டியலுக்கு விரைவில் வந்துவிடும்.

* கேரட்டைத் துருவி அதில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். சிறிது எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதை இந்தக் கேரட் கலவையில் சேர்த்தும் சாப்பிடலாம்.

ஊட்டி கேரட்

* துருவிய காய்கறிகள் எனக்குப் பிடிக்காது என்பவர்கள் கேரட், வெள்ளரி, வெங்காயம் போன்ற காய்கறிகளை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேருங்கள். எலுமிச்சையின் மேல் தோலைத் துருவி அதை இந்த சாலட் மேல் தூவிச் சாப்பிட்டுப் பாருங்கள். இதன் மணமும் ருசியும் உங்களது ஸ்நாக்ஸ் கிரேவிங் ஆசையை அருமையாகப் பூர்த்தி செய்துவிடும்.

* அலுவலக வேலையில் இருக்கும்போது திடீரென்று பசிப்பதுபோலத் தோன்றும். அப்போது பஜ்ஜி, வடை போன்றவற்றைத் தேடிப் போகாதீர்கள். கைவசம் பாதாம் அல்லது வெள்ளரி விதை, பூசணி விதை, உலர் திராட்சை போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டு அவற்றைக் கொஞ்சம் சாப்பிடுங்கள். சட்டென்று வயிறு நிரம்பியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டுவிடும்.

* ஆப்பிளைத் துண்டுகளாக்கி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைத் தடவுங்கள். பின்னர் இந்த ஆப்பிள் துண்டுகளின் மேல் சிறிது உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து, குலுக்கி டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இனிப்பு, புளிப்பு, மென்மையான காரத்துடன் இருக்கும் இந்த ஆப்பிள் துண்டுகள் அலுவலகத்தில் ஏற்படும் உங்களது ஸ்நாக்ஸ் கிரேவிங்கை நிச்சயம் தீர்த்து வைக்கும்.

* காரமாகச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வருகிறதா? கொஞ்சம் பொட்டுக்கடலை, அவல் இரண்டையும் ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளியுங்கள். பின்னர் பவுலில் எடுத்து வைத்திருக்கும் அவல், பொட்டுக்கடலையை அதில் போட்டு ஒரு பிரட்டுப் பிரட்டுங்கள். பின்னர் இதில் தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் இட்லி மிளகாய்ப்பொடி தூவி நன்கு கலந்தால் சுவையான, காரமான ஹோம்மேட் ஸ்நாக் தயார். வேண்டுமென்றால் இதிலேயே நறுக்கிய கேரட், வெங்காயம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Lemon

* கொஞ்சம் புதினா, பச்சைமிளகாய், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்தால் காரமான புதினா ஜூஸ் தயார். மேலே சொன்ன பொட்டுக்கடலை ஸ்நாக்கும், புதினா ஜூஸும் காரம் சாப்பிட வேண்டும் என்கிற உங்கள் கிரேவிங்கை நிச்சயம் பூர்த்தி செய்துவிடும்.

* நிறைய வீடுகளில் நெல்லிக்காய் பச்சடி செய்வது வழக்கம். நெல்லிக்காய் துண்டுகளுடன் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து பின்னர் அதில் கடுகு,பெருங்காயம் தாளித்தால் நெல்லிக்காய் பச்சடி ரெடி. இந்த நெல்லிக்காய் பச்சடியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலந்தால் காரமும், புளிப்புமான நெல்லிக்காய் - தேங்காய் ஜூஸ் ரெடி. களைப்பு காரணமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது உப்பு, புளிப்பு, காரத்துடன் இருக்கும் இந்த ஜூஸைப் பருகினால் அவ்வளவு இதமாக இருக்கும்.

* எதுவுமே சாப்பிட இல்லை. ஆனால், ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வருகிறதா? உங்களுக்கு நெல்லிக்காய் ஒத்துக்கொள்ளும் என்கிற பட்சத்தில் நெல்லிக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெல்லிக்காய் துண்டுகளை இந்தப் பொடியில் தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு நன்றாக இருக்கும். நெல்லிக்காயில் இருக்கும் விட்டமின் - சி உங்களது நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தும்.

* ஸ்நாக்ஸ் கிரேவிங்கை புரதத்தின் ஊற்றான சுண்டல் மிகச் சிறப்பாகத் தீர்த்து வைக்கும். எந்தவொரு சுண்டலானாலும் சரி, சுண்டல் செய்து முடித்த பிறகு அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

sundal

* இரண்டு டீஸ்பூன் முளைகட்டிய வெந்தயம், முளைகட்டிய பாசிப்பயறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கேரட், வெள்ளரித் துண்டுகள், மாதுளை முத்துகள், துருவிய பாதாம் இரண்டு, சிறிது உலர் திராட்சை, சிறிது உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவை சேர்த்துக் கலந்தால் சுவையான ரிச்சான, ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக் ரெடி.

* சௌ-சௌவை தோல் நீக்கித் துண்டுகளாக்குங்கள். பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்தெடுங்கள். இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடுங்கள். கலவை நன்கு கொதித்ததும் இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து இறக்குங்கள். மழைக்காலத்துக்கேற்ற சுவையான சூப் போன்ற ஒரு ஸ்நாக் ரெடி. இதேபோல புரோக்கலி, காலிஃபிளவர் போன்றவற்றையும் செமி சாலிட் சூப்பாக்கலாம்.''

இனி ஸ்நாக் கிரேவிங் ஏற்படும்போது கொறிப்போம் ஆரோக்கியமாக!



source https://www.vikatan.com/food/healthy/how-to-handle-snack-cravings-with-healthy-foods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக