Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

தூத்துக்குடியில் சிக்கிய பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட துருக்கி கரன்சி ரூ.2 கோடி - என்ன நடந்தது?

இந்தியாவில் ஏற்கெனவே பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கில் பலரிடம் இன்னும் கையிருப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு, பழைய ரூபாய் நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்களை மோம்பம் பிடித்து, ’`கமிஷன் கொடுத்தால் புதிய 500, 2,000 நோட்டுகளாக மாற்றிடலாம்’ என ஆசை வார்த்தைகூறி, புதிய ரூபாய் நோட்டுகளைக் கமிஷனாகப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் சம்பவங்கள் தற்போதும், ஆங்காங்கே நடந்து வருகின்றன.

தெர்மல்நகர் காவல் நிலையம்

`பழைய ரூபாய் நோட்டுகளை கைவசம் வைத்திருப்பதே சட்டவிரோதம். ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சொல்லிவிடுவோம்’ என எச்சரிக்கையுடனாக பயத்தையும் ஏற்படுத்தி மிரட்டிவிடுவதுதான் இந்த மோசடி கும்பலின் டெக்னிக் என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு சில மாதங்கள் வரை ரகசியமாக நடைபெற்ற நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சியை இந்திய பணத்தின் மதிப்புக்கு மாற்றித் தருவதாக சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் அப்படியொரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் தெர்மல்நகர் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போலீஸாரைக் கண்டதும் 2 பைக்குகளில் சுற்றித்திரிந்த 5 பேர், வேகமாகச் சென்றனர். இதையடுத்து, அவர்களை விரட்டிச் சென்று மடக்கிய போலீஸார், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். துருக்கி நாட்டின் 40 கரன்சி நோட்டுகள் இருந்துள்ளன. கரன்சிகளை சோதனை செய்ததில் அவை, ஏற்கெனவே பணமதிப்பிழப்பு செய்யட்ட கரன்சிகள் எனத் தெரிய வந்தது.

கரன்சிகளை ஆய்வு செய்த எஸ்.பி., ஜெயக்குமார்

மதிப்பிழப்பு ச்செய்யப்பட்ட கரன்சிகளைப் பதுக்கியது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜீவா, நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த விஜயமாணிக்கம் , தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது புகாரி, முகமது ரிஸ்வான், முகமது அஸ்கர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம், ``ரெகுலரான டூ விலர்கள் செக் அப்ல இருந்தோம். ரெண்டு பைக்குகள்ல வந்த அஞ்சு பேரு எங்களைப் பார்த்ததும் யூ-டர்ன் அடிச்சாங்க. லைசன்ஸ் இல்லாம, ஹெல்மெட் போடாம பயத்துல யூ-டர்ன் அடிச்சுப் போற பசங்களின் நடவடிக்கையை போல இல்லாம, இந்தப் பசங்களின் நடவடிக்கை வித்தியாசமா இருந்துச்சு. அவங்களை மடக்கிப் பிடிச்சு விசாரிச்சோம். தோளில் போட்டிருந்த பைகளை சோதனை செஞ்சதுல, துருக்கி நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பறிமுதல் செஞ்சோம். ஆனா, கடந்த 2006-லேயே அந்த கரன்சிகளை துருக்கி நாட்டுல பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுச்சு. இந்தியாவுல பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளையே புதுநோட்டா மாத்தித் தர்றதாச் சொல்லி ஏமாத்துற கும்பல்களின் நடமாட்டம் இன்னும் இருக்கு.

பறிமுதல் செய்யப்பட்ட கரன்சிகள்

அவர்களிடம் ஏமாறுறவங்க இன்னும் ஏமாந்துக்கிட்டுதான் இருக்காங்க. அதே மாதிரி, வெளிநாட்டுக் கரன்சிகளை இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகளா மாத்தித் தர்றோம்னு சொல்லியும் சில கும்பல் ஏமாத்திட்டு இருக்கு. பறிமுதல் செய்யப்பட்ட ஒரு துருக்கி கரன்சி நோட்டின் இந்திய மதிப்ப 5 லட்ச ரூபாய். 40 நோட்டுகளின் மதிப்பு 2 கோடி ரூபாய். இந்தப் பசங்க எல்லாருமே 22 முதல் 23 வயசுக்காரங்கதான். இவங்களுக்குப் பணத்தாசை காட்டி வேற பெரிய மோசடி கும்பல்கள் இவங்களை அனுப்பி வச்சாங்களா? இவங்க பின்னால இருக்குற மோசடி கும்பல் யாருன்னு விசாரிச்சிட்டு இருக்கோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/police-seized-rs-2-crore-worth-of-demonetized-turkish-currency-in-thoothukudi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக