Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

தஞ்சாவூர்: `என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்!’ தூய்மைப் பணியாளர்களை நெகிழவைத்த அரசுப் பள்ளி

கும்பகோணத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அதன் தலைமையாசிரியர் துாய்மைப் பணியாளர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து தேசிய கொடியை ஏற்ற வைத்து கெளரவப்படுத்தியுள்ளார். அவரின் இந்த செயல் பலராலும் பாராப்பட்டு வருகிறது.

சுதந்திர தினவிழா

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் செயல்பட்டு வருகிறது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி. பழமையான இந்தப் பள்ளியில் கொரோனா பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசு அறிவுறுத்தலைக் கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி தலைமையாசிரியர் சாரதி, என்.சி.சி. ஆசிரியர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் பேசினோம்.``நாட்டின் 74 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. எங்க பள்ளியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

அரசுப் பள்ளி

கும்பகோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் ரமா மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரை சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளியின் தலைமையாசிரியர் சாரதி அழைத்திருந்தார். அவர்கள் பள்ளிக்கு வந்ததுமே முதலில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தலைமை ஆசிரியர் துாய்மைப் பணியாளர் ரமாவை அழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரமா அப்போது, `என்னையா தேசியக் கொடியை ஏற்றச் சொல்கிறீர்களா?’ எனக் கேட்டார். `ஆமாம், நீங்கதான் கொடியை ஏற்ற வேண்டும்’ எனக் கூறி, தேசியக் கொடியை ஏற்ற வைத்தார். இதனால், நெகிழ்ச்சியடைந்த ரமா முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்’’ என்றனர்.

தூய்மைப் பணியாளர்

இதுகுறித்து தலைமையாசிரியர் சாரதி கூறுகையில், ``கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் டாக்டர்களுக்கு நிகராக போராடுபவர்கள் துாய்மைப் பணியாளர்கள். கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயமான சூழ்நிலையிலும் தங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் பணி செய்து ஊரைத் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். இதனால் நோய் பரவுவதல் தடுக்கப்படுகிறது.

Also Read: `சீக்கிரமே மீள்வோம்!’ - குடும்பங்களை மறந்து சேவையாற்றும் தூய்மைப் பணியாளர்கள்

தூய்மைப் பணியாளர்களின் பணிகள் என்பது போற்றப்பட வேண்டியது. அவர்களால்தான் எங்கள் பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கிறது. அப்படிப்பட்ட மதிப்புமிக்க செயலைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களை கெளரவப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதன்படி அவர்களை அழைத்து வந்தது தேசியக் கொடியை ஏற்ற வைத்தோம். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், நெகிழ்ந்து நன்றி என்றார்கள். `இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள்’ என பாராட்டி வாழ்த்தியதில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/sanitary-worker-hoist-flag-in-tanjore-government-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக