Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

பெண்களுக்குச் சம சொத்துரிமை... கடந்த பாதை... காரணமான தலைவர்கள்!

மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமை 1937-ம் ஆண்டு வரையில் மறுக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக நடந்த போராட்டங்களால், 1937-ம் ஆண்டில் இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் (Women's Property Act 1937) , 1956-ம் ஆண்டில் இந்து வாரிசுச் சட்டம் (Indian succession act 1956), 2005-ம் ஆண்டில் இந்து வாரிசு திருத்தச் சட்டம் (Indian Succession Amendment Act 2005) எனச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டும், சீர்திருத்தம் செய்யப்பட்டும் வந்தன.

1874-ம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது குறித்த சட்டப்பிரிவில் 102 ஆண்டுகளுக்கு பிறகே நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னர் 14 ஏப்ரல், 1937-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் முன்மேவுத்திறன் (Retrospective Effect) கொடுக்கப்படவில்லை. 14 ஏப்ரல், 1938 சட்டத் திருத்தத்தின் பின்னர் அது வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி இறந்த கணவரின் சுயசம்பாத்தியச் சொத்திலும், பங்குரிமைச் சொத்திலும் உரிமை வழங்கப்பட்டது.

Women Empowerment

1956-ம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பரம்பரைச் சொத்து மற்றும் கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்கள் உரிமை கோர முடியாத நிலை இருந்தது. 1989-ம் ஆண்டு, இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பரம்பரைச் சொத்துகளில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தின்படி உரிமை பெற மார்ச் 25, 1989-ம் ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடக்காதவராக இருக்க வேண்டும். பிறகு 2005-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், `ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என திருத்தம் செய்யப்பட்டது.

அதேவேளையில், 2015 -ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் தந்தை உயிரோடு இருந்தால் மட்டுமே மகள்கள் சொத்து பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து, `2005-ம் ஆண்டுக்கு முன்னதாக சொத்தின் உரிமையாளர் இறந்திருந்தாலும், பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

Ambedkar
இந்திய விடுதலைக்கு பின்னர் பெண்களுக்காவும், பெண்களின் உரிமைக்காவும், பெண்களின் சொத்துரிமை பற்றியும் பெரியார், அம்பேத்கர் ஆகிய இரு தலைவர்கள் பேசியும் எழுதியும் போராடிக்கொண்டிருந்தனர்.

91 ஆண்டுகளுக்கு முன்னர், `பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும்’ என்கிற கலகக் குரலை இந்த மண்ணில் தந்தை பெரியார் எழுப்பினார். தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் சார்பாக 1929-ம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய நாள்களில் செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களில் மிக முக்கியமானவை பெண்கள் தொடர்பானவை. அப்போதைய சூழலில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், பிறந்த குடும்பத்திலிருந்து அனைத்து உரிமைகளும் ரத்தாகிவிடும் என்கிற நிலையில்தான் பெண்கள் இருந்தனர்.

பெரியார்

Also Read: பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு!

கல்விக்கூடங்களுக்கு அனுப்பவும் குடும்பத்தினர் மறுத்தனர். இந்த நிலையில், `பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்’ என்று பெரியார் முழங்கினார். பெரியாரின் இத்தகைய முழக்கத்தால் மொத்த நாடுமே செங்கல்பட்டு தீர்மானத்தையடுத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்த்தது.

அன்றைய இந்துச் சட்டத்தின்படி சொத்துரிமை, குடும்பத்தில் உயிரோடிருக்கும் மூத்த தலைவருக்கு மட்டுமே உண்டு. சொத்து என்பது குடும்பத்துக்கானது. அதில் இளையவர்கள் (ஆண்களாக இருந்தாலும்) பாகப் பிரிவினை கோர முடியாது. பெண்களுக்கு எந்தச் சொத்துரிமையும், எப்போதும் வராது. இதற்கு மாறாக அம்பேத்கர், ஒருவர் இறந்தவுடன் அவரது சொத்தில் அவரின் மனைவிக்கும், அவரின் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை வருகின்ற வாரிசுரிமை முறையை முன்மொழிந்திருந்தார். `மகனுக்குள்ள உரிமையில் பாதி கொடுங்கள்’ என்று திருத்தம் கொண்டு வந்திருந்தார்.

மனைவி மற்றும் விதவை மருமகளுக்குரிய பங்குகள் ஏற்கெனவே இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937-ன் படி அங்கீகரிக்கப்பட்டிருந்தன. `மகளுக்கும் மகனைப்போலவே சொத்துரிமை வேண்டும்’ என்று 1948-ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டதுதான் இந்தத் திருத்தம். அம்பேத்கர் இது பற்றிக் கூறுகையில், "பெண்களுக்குச் `சீதனம்’, `வரதட்சணை’ ஆகிய பெயர்களில் கொடுக்கப்படும் வேறுபட்ட நடைமுறைகள் மாற்றப்பட்டு, அவளுக்குரிய சொத்து என்பது நடைமுறைக்கு வர வேண்டும்" என்று கூறினார். இது குறித்து 1950-ம் ஆண்டில் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் கொண்டுவந்தார். ஆனால், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அது தோற்றுப்போனது.

பெண்கள் சொத்துரிமை

செங்கல்பட்டு மாநாடு நடைபெற்ற 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்ணாவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு.கருணாநிதி, பெரியார் கொள்கை வழியில், `இந்து வாரிசுரிமைச் சட்டம் (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) 1989 மூலம் பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு’ என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரமான சட்டத்தை நிறைவேற்றினார். தமிழகத்தின் இந்தச் சட்டத்துக்குப் பின்னர்தான் 16 ஆண்டுகள் கழித்து, 2005-ல் இந்திய அளவில் `பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு முன்னோடியாக கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் இருந்துள்ளன. அச்சுத மேனன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில், 1976-ம் ஆண்டில் கேரள இந்து கூட்டுக் குடும்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி `சொத்தில் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் உரிமை உண்டு’ எனக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் ஆந்திராவில் 1985-ம் ஆண்டில் என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசு, `பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை உண்டு’ என்கிற சட்டத்தைக்கொண்டு வந்தது.

கருணாநிதி

Also Read: ஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு!

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் இரு பிரிவுகள் உள்ளன- மிட்டக்சரா மற்றும் தயாபாகா. மிட்டக்சரா சட்டத்தின்படி, ஒரு குடும்பத்திலுள்ள ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பரம்பரைச் சொத்தில் உரிமை உண்டு. தயாபாகா சட்டப்படி பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில் பங்கு உண்டு. அஸ்ஸாம், மேற்கு வங்காளம் தயாபாகா சட்டத்தையும், பிற மாநிலங்கள் மிட்டக்சரா சட்டத்தையும் பின்பற்றிவந்தன. 1994-ம் ஆண்டில் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெண்கள் சொத்துரிமை பெற்றனர்.

பெண்களுக்கான சொத்துரிமை

ஆண், பெண் பாகுபாடு தலைதூக்கி இருப்பினும், பெண்களுக்குத் தந்தையரின் சொத்தில் சம உரிமை என்பது பல ஆண்டுகளுக்கு பின்னர் முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அம்பேத்கர், பெரியார், கருணாநிதி போன்றவர்களின் முயற்சியால் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, 2020-ல் முழு உரிமையை மீட்டுத் தந்துள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/women/history-of-women-property-rights-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக