Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

தோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்... ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா?! #DhoniForever

நீளமான முடி, ஹெலிகாப்டர் ஷாட் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் புதுமுகமாக அறிமுகமான தோனி, கேப்டன் கூல், பெஸ்ட் ஃபினிஷர் என்று பல முகங்கள் பெற்று இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத முகமாக இருந்து வந்தவர். நேற்றிரவோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன் காரணமாக இன்று, சோஷியல் மீடியா முழுவதும் தோனியே நிரம்பி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இனி தோனியைப் பார்க்க முடியாது என்கிற ஏக்கத்தை வழக்கம் போல சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்டேடியத்தில் எடுக்கும் முடிவுகள் தொடங்கி பிரஸ் மீட்டில் மீடியாவை அணுகுவது வரை பல வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார் தோனி. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதுகூட ஒரு வித்தியாசமான முடிவுதான். மற்ற வீரர்களைப் போல முன்னரே அறிவிக்காமல், திடீரென ஒரு போட்டியின் பிரசென்டேஷனில் அறிவித்து ஓய்வு பெற்றார். தற்போதும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை வெறும் இரண்டு வரிகளில் ஒரு இன்ஸ்டகிராம் பதிவில் சொல்லி தன் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறார் தோனி.

தோனி ஓய்வு

Also Read: சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!

இந்திய கிரிக்கெட்டில் இப்படியான வித்தியாச அணுகுமுறைகளை இதற்கு முன்னர் எவரும் செய்ததில்லை என்றே சொல்லலாம். இந்த வித்தியாசமான அணுகுமுறைதான் அவரை ஸ்பெஷல் ஆக்கியது!

தோனி முக்கியமான போட்டிகளில் எடுத்த சில வித்தியாசமான முடிவுகளையும் அதன்பின் அரங்கேறிய சம்பவங்களையும்தான் இந்தக் கட்டுரையில் அலசப்போகிறோம்.

சம்பவம் 1

2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. கடைசி ஓவர், இந்தியா வெற்றி பெற ஒரு விக்கெட் தேவை. பாகிஸ்தான் வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை. செட்டில்டு பேட்ஸ்மேன் மிஸ்பா உல் ஹக் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஹர்பஜன் சிங் மற்றும் ஜோகிந்தர் ஷர்மா இருவருக்கும் ஒரு ஓவர் மீதமிருந்தது.

தோனி ஜோகிந்தர் ஷர்மாவை தேர்ந்தெடுத்தார். முதல் பந்து வைட். கமென்ட்ரியிலிருந்த ரவி சாஷ்த்ரி, `Big Decision from Dhoni. Shouldn't Have Been Harbhajan With His Experience? But He Opted Joginder' என்று சொல்ல ரசிகர்களுக்கு பிரஷர் எகிறியது.
Dhoni T20 World Cup

ஆனால், தோனி வைடாக வந்த பந்தைக் கையில் பிடித்தவுடன் ஜோகிந்தரை நோக்கி ஓடி வந்து சில வார்த்தைகள் பேசிச் சென்றார். அடுத்த பந்து டாட் பால். அதற்கடுத்த பந்து புல் டாஸாக வர அதை கூலாக சிக்ஸருக்கு அனுப்பினார் மிஸ்பா. பாகிஸ்தான் ரசிகர்கள் குதிக்க, இந்தியர்கள் 'ஹர்பஜனுக்கே கொடுத்திருக்கலாம்' என்று தலையில் கை வைத்தனர். மீண்டும் தோனி ஜோகிந்தரிடம் பேசிய பின், 3-வது பந்தை வீசினார் ஜோகிந்தர். மிஸ்பா பின்னோக்கி அடிக்க ஷாட் ஃபைன் லெக்கில் நின்றிருந்திருந்த ஶ்ரீசாந்திடம் கேட்ச் ஆனது. இந்தியா வெற்றி! தோனியை இந்திய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த தருணம் அது. அதன்பிறகு ஒரு விளம்பரத்தில்...

டி20 உலகக் கோப்பை பற்றி அந்த விளம்பரத்தில் பேசியிருந்தார் தோனி. தோனியின் வித்தியாசமான ஐடியா மட்டுமல்ல, அந்த விளம்பரமும் ஹிட் அடித்தது.

சம்பவம் 2

அதே 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டிதான் சம்பவம் 2. கடைசிப் பந்தில் பாகிஸ்தான் வெற்றி பெற 1 ரன் தேவை. ஃபீல்டர்களை சர்கிலுக்குள் கொண்டு வந்தார் தோனி. ஒரு ரன் எடுக்க முடியாமல் ரன் அவுட் ஆனார் மிஸ்பா. மேட்ச் டை. சம்பவம் இது இல்லை. பவுல் அவுட்டில்தான் அந்தச் சம்பவத்தைச் செய்தார் தோனி. சோஹைல் தன்வீர், உமர் குல் உள்ளிட்ட 5 சிறந்த பெளலர்களை தேர்ந்தெடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் மாலிக். ஆனால், பெரிதாக பெளலிங் ரெக்கார்டே இல்லாத ஷேவாக் மற்றும் உத்தப்பாவை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் தோனி.

Dhoni Bowl out

பவுல் அவுட் என்றால் 5 பந்துகள். 5 பெளலர்கள். ஆளுக்கொரு பந்துதான் போட வேண்டும். விக்கெட் கீப்பர் ஸ்டம்பிற்குப் பின்னால் நிற்க வேண்டும். எந்த அணி அதிக முறை ஸ்டம்பை காலி செய்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும். முதல் மூன்று பந்துகளை வீச, ஷேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று ஸ்லோ பெளலர்களை தேர்வு செய்தார் தோனி. மூன்று பேர் வீசிய பந்துகளும் ஸ்டம்பில் அடித்தது. பாகிஸ்தானின் யாசிர் அராஃபத், உமர் குல் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் வீசிய இரண்டு பந்துகளும் ஸ்டம்பில் படவில்லை. மூன்றாவதாகக் களமிறக்கப்பட்ட அஃப்ரிடியின் பந்தும் ஸ்டம்பை மிஸ் செய்தது. இந்தியா வெற்றி பெற்றது!

இந்திய பெளலர்கள் சரியாக ஸ்டம்பிற்கு போட்டதற்கு முக்கிய காரணம் தோனி ஸ்டம்பிற்குப் நேர் பின்னால் சென்று முட்டி போட்டுக் கொண்டதுதான். பெளலர்கள், தோனியை பார்த்து வீசினால் சரியாக ஸ்டம்பில் அடிக்கும் என்பதுதான் ட்ரிக். அதைச் சரியாகச் செய்து முடித்தனர் நம் இந்திய பெளலர்கள்.

சம்பவம் 3

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிதான் 3-வது சம்பவம். மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது அப்போட்டி. முதலில் பேட் செய்த இந்தியா 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இங்கிலாந்து அணி எளிதாக சேஸ் செய்துவிடும் என்ற நிலை இருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு, கடைசி 3 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. இஷாந்த் ஷர்மா 3 ஓவர்களுக்கு 27 ரன்களைக் கொடுத்திருந்தார். அன்றைய போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் அவராகத்தான் இருந்தார். இருப்பினும் 18-வது ஓவரை வீச இஷாந்தை அழைத்தார் தோனி. அடுத்தடுத்த பந்துகளில், ரவி போப்பாரா, மோர்கன் ஆகிய இரண்டு செட்டில்டு பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார் இஷாந்த்.

Dhoni Champions Trophy
"How does Dhoni do it every time!?? Joginder Sharma 6 years back. Now Ishant Sharma!'' என்று தோனிக்கான பாராட்டு கமென்ட்ரியில் ஒலித்தது.

இஷாந்தின் அந்த ஓவர் இங்கிலாந்து பக்கமிருந்த வெற்றி வாய்ப்பை நம் பக்கம் இழுத்தது. தோனியின் அந்த முடிவு சாம்பியன் டிராபியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தது.

சம்பவம் 4

2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிதான் அடுத்த சம்பவம். தோனி இந்தப் போட்டியில் எடுத்த முடிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. ஷேவாக், சச்சின், கோலி என்று 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. வெற்றிக்கு இன்னும் 161 ரன்கள் தேவை. இந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கினார் தோனி.

"Bit Of Surprise! That Dhoni Comes Ahead Of Yuvraj'' என்று கமென்ட்ரியில் சொல்ல, அதே மனநிலையில்தான் ரசிகர்களும் இருந்தனர்.

நல்ல ஃபார்மிலுள்ள யுவராஜ் சிங்கை அனுப்பாமல் தொடர் முழுவதும் சரியாக விளையாடாத தோனி ஏன் இறங்கினார் என்ற பேச்சு நாடு முழுவதுமே இருந்தது. ஆனால், தோனியின் இந்த வித்தியாசமான முடிவிற்கு நல்ல பலனே கிடைத்தது. நல்ல இன்னிங்ஸ் ஆடி 91 ரன்கள் குவித்தார். குலசேகரா வீசிய பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு, 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையைக் கையிலெடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பரிசாக்கினார் மகேந்திர சிங் தோனி!

இந்த நான்கு சம்பவங்கள் மட்டுமே தோனியைக் காதலிக்கப் போதுமானது!

Also Read: `தோனி, சுரேஷ் ரெய்னா; சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!’ - ஒரே நாளில் வெளியான அறிவிப்பு

அந்த மூன்று கோப்பைகளின் இறுதிப் போட்டிகளிலும் தோனி எவரும் எதிர்பார்க்காத வித்தியாசமான முடிவுகளை எடுத்தே வெற்றி கண்டார் என்பது கூடுதல் சிறப்பு!

இதுபோன்ற தோனியின் வித்தியாசமான முடிவுகள் சில நேரங்களில் சறுக்கலில் முடிந்ததும் உண்டு. ஆனால், பெரும்பாலும் தோனி எடுக்கும் முடிவு அணிக்குச் சரியானதாகவே அமைந்துள்ளது. அதனால்தான் 'கேப்டன் தோனி'க்கு ரசிகர்கள் அதிகம்.

Dhoni

மின்னல் வேக ஸ்டம்பிங், கடைசி பந்தில் சிக்ஸர் என தோனியின் ட்ரேட் மார்க் விஷயங்களை இனி நீல ஜெர்ஸியில் காண முடியாது என்றாலும் இதையெல்லாம் யெல்லோ ஜெர்ஸியில் காணலாம் என்ற ஒரே திருப்தியுடன் தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக விசிலோடு வெறித்தானமாகக் காத்திருக்கிறார்கள் தோனி ரசிகர்கள்.

2018 ஐபிஎல்லை போல வரவிருக்கும் ஐபிஎல்லிலும் மாஸான கம்பேக் கொடுங்க தோனி! We are Waiting!


source https://sports.vikatan.com/cricket/why-dhoni-is-the-best-decision-maker-in-cricket

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக