Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

நெல்லை: `தந்தையின் மரணம்; கடமை முக்கியம்!’ - அணிவகுப்பை ஏற்று நடத்திய பெண் காவல் ஆய்வாளர்

நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், மகேஷ்வரி. அவரது தலைமையிலேயே சுதந்திர தினத்துகான காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுவது வழக்கம்.

பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. அதில் கலந்துகொண்டு மகேஷ்வரி பயிற்சி எடுத்துக் கொண்டதுடன் சக ஆயுதப்படைப் பிரிவினருக்குத் தலைமையேற்று வழிநடத்தி வந்தார்.

பெண் ஆய்வாளர் மகேஷ்வரியின் சொந்த ஊர் திண்டுக்கல். வயோதிகம் காரணமாகவும் உடல் நலக்குறைவாலும் மகேஷ்வரியின் தந்தை நாராயணசாமி சில தினங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்ததாகத் தகவல் வந்தது.

Also Read: காவலர்களுக்கான பயிற்சியில் ராணுவ வீரரை சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேசவைத்த காவல்துறை! - கரூர் நெகிழ்ச்சி

சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்புக்குத் தலைமையேற்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைகளில் பங்கேற்ற நிலையில் திடீரென வேறொரு நபரை அதில் பங்கேற்கச் செய்வதில் சிரமம் இருப்பதை உணர்ந்த காவல் ஆய்வாளர் மகேஷ்வரி, தந்தை இறப்பு குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை.

மகேஷ்வரியின் கணவர் பாலமுருகன் காவல்துறை உதவி ஆய்வாளராக உள்ளார். அவரின் ஒருமகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றொரு மகள் 12-ம் வகுப்பு படிக்கிறார். குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய அவர் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதென முடிவெடுத்தார்.

காவல்துறை அணிவகுப்பு

அதன்படி இன்று பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதைக்குத் தலைமையேற்றார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் நிகழ்ச்சிக்கு வந்தபோது மரியாதை வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றிய பின்னர் நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் காவல் ஆய்வாளர் மகேஷ்வரி சிறப்பாக நடத்தி முடித்தார்.

சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே அவர் உயரதிகாரிகளைச் சந்தித்து உடனடியாகத் திண்டுக்கல் செல்ல வேண்டியதையும் அதற்காக விடுப்பு கேட்டார். அப்போதுதான் அவரின் தந்தை நேற்றே இறந்துவிட்ட தகவல் அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

Also Read: ராமநாதபுரம்: `மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலை!’ - கைகொடுத்த மாவட்ட காவல்துறை

உடனையாக அவரையும அவருடையை குடும்பத்தினரையும் திண்டுக்கல் செல்ல காவல்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள். தந்தை உயிரிழந்த நிலையிலும் சுதந்திர தின விழாவில், அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை ஆய்வாளர் மகேஷ்வரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.



source https://www.vikatan.com/news/general-news/lady-inspector-presides-the-guard-of-honour-after-knowing-her-fathers-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக