Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

`அழுதுட்டே இருப்போம்; கொத்தடிமை கொடுமை!’ - 20 ஆண்டுகளுக்குப்பின் சுதந்திர காற்றை சுவாசிக்கும் தம்பதி

இன்று சுதந்திர தினம். மனித வாழ்க்கையில் சுதந்திரம் என்பது மிகவும் இன்றியமையாதது. சுதந்திரத்துக்காக முன்னோர்கள் பலரும் தீவிரமாக போராடிய வரலாறுகள் அனைவரும் அறிந்த ஒன்று. பிற நாட்டினரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை கிடைத்தாலும் சாதி, மதம், இனம், பாலினம், வர்க்கம் என பல்வேறு பெயர்களின் கீழும் மனிதர்கள் பலரும் இன்னும் அடிமையாகதான் நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரின் விடுதலைக்கான நாள் எது? என்பது மிகப்பெரிய கேள்வியாக மட்டுமே இருந்து வருகிறது. குறிப்பாக ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்க்கை. பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்படைந்த மக்கள் பலரும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து சமூகத்தில் நடந்து வருகிறது. கொடூரமான அடிமை வாழ்க்கையில் இருந்து மீண்டு வரும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வியோடு கொத்தடிமையில் இருந்து தற்போது மீண்டு வந்து சுதந்திர காற்றை சுவாசிக்கும் தம்பதியின் கதை ஒன்றைப் பார்ப்போம்.

கொத்தடிமை

திருவள்ளூர் மாவட்டத்தில் நெமிலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பாபுவும் அவரது மனைவி தேசம்மாவும். பாபுவுக்கு தற்போது 60 வயது இருக்கும். அவரது மனைவிக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். இவர்கள் அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரிடம் இருந்து வீட்டினை சீரமைக்கும் பணிக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர். கடன் முழுவதுமாக முடியும் பட்சத்தில் வீட்டுப் பத்திரத்தை திருப்பித் தருவதாகக் கூறி வீட்டுப் பத்திரத்தையும் வாங்கி வைத்துள்ளார். கடனை அடைக்கும் பொருட்டு அந்த நபர் இவர்களை தங்களது தோட்டத்தில் பணிக்காகவும் அழைத்துச் சென்றுள்ளார். ஞானமங்களம் கண்டிகை பகுதியில் உள்ள சுமார் 20 ஏக்கர் மாந்தோப்பில் அனைத்து பணிகளையும் இரவு பகலாக இவர்கள் இருவர் மட்டும் செய்து வந்துள்ளனர். தோட்ட வேலைகளைத் தவிர்த்து அந்த உரிமையாளர் சொல்லும் பிற வேலைகளையும் செய்து வந்துள்ளனர். கொத்தடிமையாக இருக்குறோம் என்பதே தெரியாமல் பணி செய்து வந்த இருவரிடமும் பேசினோம்.

Also Read: ``சிகிச்சைக்குக்கூட அனுமதிக்கல!” - கொத்தடிமை கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர்

``மாந்தோப்பில்ல மாந்தோப்பு.. அங்கதான் இவ்வளவு நாளா இருந்தோம்” என வேதனை கலந்த தொனியில் 20 வருடங்கள் கழித்து வெளி உலகத்தைப் பார்க்கும் பாபுவும் தேசம்மாவும் நம்மிடம் பேசத் தொடங்கினர். ``வீடுகட்ட பணம் வாங்குனோம். கடனை அடைச்சிட்டு பத்திரத்தை வாங்கிக்கோனு சொன்னாரு. அப்படியே அவங்க தோட்டுத்துலயும் வந்து வேலை பாக்க சொன்னாரு. அப்படித்தான் உள்ள போனோம். காலைல எட்டு மணிக்கு வேலையத் தொடங்குனா, ராத்திரி 11, 12 மணி வரைக்கும் வேலை பாப்போம். சம்பளம் எதுவும் தர மாட்டாங்க. ரேஷன் அரிசி மட்டும் தருவாங்க. அரிசி எங்களுக்கு சாப்பாட்டுக்கே பத்தாது. அதிகமா கேட்டாக்கூட தர மாட்டாங்க. தோப்புக்குள்ள ஒரு வீடு இருக்கும். அங்கதான் நாங்க இருந்தோம். நல்லது கெட்டதுக்குகூட நாங்க வெளில வந்தது கிடையாது. எப்பவும் வேலை செஞ்சிட்டே இருக்கணும். உடம்பு சரியில்லனு சொன்னா, திட்டுவாரு. மருந்து வாங்கிட்டு வர சொல்லுவோம். அதுக்கு அவரு `உனக்கு மாத்திரக்கடைதான் வைக்கனும். போய் வேலைய பாரு!’ அப்டின்னுவாரு” என்று கூறினார்.

பாபு மற்றும் தேசம்மா

தொடர்ந்து அவர்கள் பேசும்போது, ``ரொம்ப அசிங்கமா பேசுவாரு. நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள இருந்து வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேனு அழுதுட்டே இருப்போம். எங்களால முடியல வெளிய விடுங்கனு சொல்லுவோம். `மொத்த பணத்தையும் எடுத்து வச்சிட்டு போ’ அப்டினு சொல்லுவாரு. வெளிய எங்க பசங்களும் என்ன செய்யணும்னு தெரியாம வேலை இல்லாம ரொம்ப கஷ்டபட்டாங்க. கூலியும் கிடையாது. பத்திரமும் அவருகிட்ட இருக்கும். 20 வருசமா எங்களயும் வெளிய விடல. பசங்க பார்க்க வந்தாலும் ரொம்ப நேரம் பேச விடமாட்டாங்க. மழை வந்தாலும் வேலை செய்ய சொல்லுவாங்க. `மழை தண்ணி என்ன அடிச்சிட்டா பொய்ட போவுது. போய் வேலைய பாருனு’ கேப்பாங்க. அதையும் மீறி பேசுனா. ரொம்ப பேசாதனு திட்டுவாங்க. அவரு பேசுறதே அடிக்கிற மாதிரி இருக்கும். பணம் இல்லாம கஷ்டப்பட்டாலும் கிடைக்கிறத வச்சு நிம்மதியா சாப்டுட்டு வாழ்ந்துட்டு இருந்தோம். ஆனால், அங்கள கூட்டிட்டு போய் கொடுமைபடுத்தினாங்க. எல்லாம் தலையெழுத்து” என்றனர்.

கொத்தடிமைகள் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த நபர்கள் மூலமாக அதிகாரிகள் தகவல் அறிந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த தோப்புக்கு ஆய்வுக்கு சென்றுள்ளனர். அப்போது, இவர்கள் அங்கு இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அவர்களை மீட்டு வந்துள்ளனர். இவர்களை அழைத்துச் சென்ற நபர் மீதும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கையை தொடர தேவையான உதவிகளை அரசாங்கமும் கொத்தடிமைகள் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த தலைவர்களும் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர். சுமார் 20 ஆண்டுகள் கழித்து வெளியே வந்தது பற்றி தேசம்மா பேசும்போது, ``உள்ள இருக்குறப்போ சென்ட்ரல் ஜெயில் மாதிரி இருந்துச்சு. வெளிய வந்தப்பிறகுதான் நிம்மதியா இருக்கோம். நிறைய ஜனங்கள பாக்குறோம். ஆளுங்ககூட பேசுறோம். அங்க இருக்கும்போது யாரும் அவ்வளவு சீக்கிரம் எங்கள வந்து பாக்க முடியாது. இப்போ அப்படி இல்ல. புள்ளைஞ்க பேத்திங்க கூடலாம் பேசுறோம்” என்று சற்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

மீட்கப்பட்ட இடம்

பட்டாவைப் பற்றி கவலையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட தேசம்மாவிடம் இதுதொடர்பான விவரங்களை கேட்டோம். அப்போது அவர், ``கடன அடைச்சிட்டு பத்திரத்தை வாங்கிக்கோனு சொன்னாரு. ஆனால், எங்கள ஏமாத்தி அவங்க பேருல பட்டாவை மாத்திட்டாங்க. கடன் வாங்குனதுக்கு கையெழுத்து போடுங்கனு சொன்னாங்க. நாங்களும் போட்டோம். ரொம்ப நாள் கழிச்சுதான் எங்களுக்கே அது பட்டா பத்திரம்னு தெரியும்” என்றனர். தற்போது, அந்த பத்திரத்தை மீட்டெடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளனர்.

பாபுவும் தேசம்மாவும் சுமார் 20 வருடங்கள் அடிமை வாழ்வுக்கு பிறகு தற்போது விடுதலையாகியுள்ளனர். மனிதர்களை பார்க்காமல் வெறும் மரத்தோடும் மண்ணோடும் அவர்கள் இருந்து வந்ததால் சரியாக வார்த்தைகளை அடுக்கி சகஜமாக சக மனிதர்களிடம் அவர்களால் பேச முடியவில்லை என்பதை உணர முடிந்தது. சக மனிதர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை உணர முடிந்தது. இன்னும் எவ்வளவோ பாபுக்களும் தேசம்மாக்களும் உலகம் முழுவதும் சுதந்திரத்தை சுவாசிக்க முடியாமல் யாரோ ஒரு முதலாளிக்காக தங்களது வாழ்க்கையை கொத்தடிமைகளாக இருந்து கழித்து வருகின்றனர். அவர்களுக்கான விடுதலை என்பது எப்போது?

Also Read: `எல்லா பேரிடர் காலங்களுக்குப் பின்னும் மனிதக் கடத்தல் அதிகரிக்கும்!’- அதிர்ச்சிப் பின்னணி



source https://www.vikatan.com/news/tamilnadu/a-couple-speak-about-their-slavery-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக