Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

`6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?

இன்று காலை முதல் அ.தி.மு.க-வில் புயல் வீசுகிறது. சுமார் 11 அமைச்சர்கள் ஓ.பி.எஸ். வீட்டிற்கு நேரில் போனார்கள். அப்போது பேச்சுவார்த்தை நடந்தது. `நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளரா? அல்லது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியா? சொல்லுங்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கிறார். வேறு சிலர் பேசுகிறார்கள். அப்போது நான் எதற்கு?” என்று ஒ.பி.எஸ். கோபமாக கேட்டதாக தெரிகிறது.

அவரை காணச் சென்ற அமைச்சர்கள் அமைதியாக நிற்க...

``அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இன்று மாலை 6 மணிக்குள் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மாவட்ட பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். இல்லை என்றால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னோட வேலைகளை அவரே செய்கிறார் என்றால் நான் ஏன் அந்த பொறுப்பில் இருக்க வேண்டும். ராஜினாமா செய்து விட்டு தொண்டனாக செயல்படுகிறேன்’ என ஒ.பி.எஸ். சொன்னதாக அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தனர். மேலும் இதே கருத்தை அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் போனில் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

ராஜேந்திர பாலாஜி

ஒ.பி.எஸ்ஸுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், `முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்கிற வகையில் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், இருவரையும் பதவி விட்டு விலக்கவேண்டும்’ எனறு குரல் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து, `பேசாமல் இருங்கள்’ என்று கையால் சைகை காட்டினார் ஒ.பி.எஸ்’ என்கிறார்கள்.

அங்கு இறுக்காமன சூழ்நிலை நிலவியதாம். ``நாங்கள் முதல்வரிடம் பேசிவிட்டு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்களாம். அதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் நேராக முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு சென்றார்கள். அங்கே, அவரிடம் ஒ.பி.எஸ். சொன்ன கருததுக்களை சொன்னார்களாம். அதன் தொடர்ச்சியாக, விரைவில் முதல்வர் எடப்பாடியிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று அ.தி.மு.கழக அமைச்சர்கள் சொல்லுகிறார்கள்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

என்ன நடந்தது...?

வரும் 2021 -ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அனலாக விவாதம் அ.தி.மு.க -வில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு, `சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்’ என்றார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தித் தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே” தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

போஸ்டர்

இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதே போல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம். எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எளிமையின் அடையாளமான முதல்வர், வலிமையான அரசு என்று நிரூபித்திருக்கிறார்” என்றார்.

Also Read: `துணை முதல்வர் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள்; முதல்வரையும் சந்திக்கிறார்கள்!’ - தேனி போஸ்டர் காரணமா? #NowAtVikatan

இந்த நிலையில் கடந்த 13 -ம் தேதி சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ` சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

இதனிடையே சுதந்திர தினமான இன்று காலை தேனி மக்களின் கண்களுக்கு பளிச்சென்று போஸ்டர்கள் தென்பட்டன. போடி, தேனி, பெரியகுளம் என தேனியின் அனைத்துப் பகுதிகளின் முக்கிய சந்திப்புகளில் அந்த போஸ்டர்களை பார்க்க முடிந்தது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே அமைந்துள்ள கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில், ’அம்மா ஆசி பெற்ற என்றென்றும் மக்கள் முதல்வர் ஒ.பி.எஸ்’ என்றும், மற்றொரு போஸ்டரில், ’ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஒ.பி.எஸ் ஐயா’ என்றும். மற்றுமொரு போஸ்டரில், ’தமிழகத்தின் நிரந்த முதல்வர் ஒ.பி.எஸ் ஐயா’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

பன்னீர் செல்வம் - பழனிசாமி

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வருவது பன்னீர் செல்வம் தரப்பை கொதிப்படைய செய்திருப்பதாகவும் அதன் அடிப்படியில் தான் இந்த போஸ்டர் கலகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, `துணை முதல்வர் தரப்பில் இருந்து மூன்று முறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து வெளிப்படையாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்’ என்று பேசி வருகிறார்.

இது அ.தி.மு.க கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அடுத்ததாக, முக்கியமான அமைச்சர்கள் 11 பேர்கள, துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல்வரையும் சந்தித்தனர். அடுத்தகட்ட அறிவிப்பு என்ன வரும் என்பதை அறிய அ.தி.மு.கழக வட்டாரம் பதைபதைப்புடன் காத்திருக்கிறது.

Also Read: 'யார் முதல்வர் வேட்பாளர்?' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து



source https://www.vikatan.com/news/general-news/ops-upset-on-minister-rajendra-balaji-in-cm-candidate-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக