Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

கரூர்: `நம்ம ஆத்தை நாமதானே சுத்தப்படுத்தணும்!' - அமராவதி ஆற்றில் களமிறங்கிய இளைஞர்கள்

இரண்டாவது வருடமாக தொடர்ந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் வர, அதில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரையை, 'நம்ம ஆத்தை நாமதானே சுத்தப்படுத்தணும்' என்றுகூறி, இளைஞர்கள் களமிறங்கி அகற்றியது, கரூர் மாவட்ட மக்களை பாராட்ட வைத்திருக்கிறது.

ஆகாயத்தாமரையை அகற்றும் இளைஞர்கள்

அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ள அமராவதி அணையில் இருந்து பிரிகிறது. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

Also Read: கரூர்: `அமானுஷ்யக் கட்டடம்; அம்மோனியம் நைட்ரேட் பதுக்கல்?!' - அதிகாரிகள் அதிரடி ஆய்வு

வாய்மடை தொடங்கி கடைமடை வரை அமராவதி ஆறு, 240 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த ஆற்றை நம்பி கரூர் மாவட்டத்தில் 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்றது. ஆனால், அந்த நிலங்களில் விவசாயம் நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. காரணம், அமராவதி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலக்கப்பட்டதுதான்.

அமராவதி ஆற்றுக்குள் ஆகாயத்தாமரை

ஆனால், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த வருடம்தான் 5 வருடம் கழித்து, தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால், அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து,. இந்தவருடமும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட, அது நேற்று கரூர் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து, இரண்டாவது வருடமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதைப் பார்த்த கரூர் மக்கள், ஆற்றுக்குள் ஓடும் தண்ணீரை ஆவலோடு பார்த்தனர். அமராவதி ஆற்றில் இறங்கி, அதில் வரும் தண்ணீரில் கால் நனைத்து ஆனந்தமடைந்தனர்.

இந்த நிலையில், அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க, கூடவே ஆகாயத்தாமரையும், ஆறு முழுக்க படுதா விரித்ததுபோல் வந்தது. தண்ணீரின் போக்கைத் தடுத்தது. குறிப்பாக, கரூர் பசுபதிபாளையத்தில் ஆற்றுக்குள் தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தில், ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி நின்றன. இதனால், தண்ணீரின் வேகம் மட்டுப்பட்டது. இதைக் கவனித்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், `நம்ம ஆத்தை நாமதான் சுத்தப்படுத்தணும்' என்று கூறி, ஆற்றுக்குள் இறங்கினர். பாலத்தில் தேங்கிநின்ற ஆகாயத்தாமரைச் செடிகளை பிய்த்து, எடுத்து கரையில் போட்டனர்.

ஆகாயத்தாமரையை அகற்றும் இளைஞர்கள்

இதனைப் பார்த்த பலரும் இளைஞர்களோடு கைகோத்து, களத்தில் இறங்க, ஆகாயத்தாமரையை அகற்றும் பணி துரிதகதியில் நடைபெற ஆரம்பித்தது. தண்ணீர் தடையின்றி போகும் அளவுக்கு ஆகாயத்தாமரையை இளைஞர்கள் சுத்தப்படுத்த, அதில் தேங்கிய தண்ணீர் வேகமாக செல்ல ஆரம்பித்தது. மீதமிருந்த ஆகாயத்தாமரைச் செடிகளும் அந்த வேகத்தில் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட, கொஞ்சநேரத்தில் பெருமளவு ஆகாயத்தாமரைச் செடிகள் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது. அமராவதி ஆற்றுக்குள் இறங்கி, இப்படி ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்திய இளைஞர்களை, அங்கு திரண்ட மக்கள், தட்டிக்கொடுத்து உச்சிமுகர்ந்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-youth-clean-amaravathi-river

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக