இன்று ஸ்மார்ட்போன்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் முக்கிய பங்கு கூகுளையும் சேரும். என்னதான் ஐபோன்கள் பல விஷயங்களில் மேம்பட்டிருந்தாலும், ஸ்மார்ட்போன் அனுபவத்தை அனைவருக்குமானதாக மாற்றியது ஆண்ட்ராய்டுதான். பெரிய நிறுவனங்களில் தொடங்கி நேற்று முளைத்த நிறுவனங்கள் வரை 'Open Source' ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்குச் சாதனங்கள் தயாரித்தன. ஓர் இயங்குதளமாக ஆண்ட்ராய்டும் ஒவ்வொரு வருடமும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் போக்கில் ஆண்ட்ராய்டை ஒவ்வொரு பக்கம் இழுத்தனர். சொந்தமாக ஹார்டுவேர் பிரிவு என்று ஒன்று இல்லாததால் கூகுளால் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவம் எப்படி இருக்கும் என ஒரு சாம்பிள் கூட காட்ட முடியவில்லை. இதற்காக 2010-களின் தொடக்கத்தில் எல்ஜி, சாம்சங், HTC போன்ற மொபைல் உற்பத்தியாளர்களுடன் இணைந்து 'நெக்சஸ் சீரிஸ்' மொபைல்களை அறிமுகப்படுத்தியது கூகுள். ஆண்ட்ராய்டு மொபைல்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இந்த மொபைல்களை முன்வைத்தது கூகுள். இந்த மொபைல்களிலிருந்த மென்பொருள் அனுபவம் பலருக்கும் பிடித்தது.
இனி ஸ்மார்ட்போன்களையும் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்த கூகுள் 2016-ல் 'பிக்ஸல்' போனை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ஆப்பிளுடன் அனைத்து பிரிவுகளிலும் போட்டி போட்டுவந்ததால் இதிலும் ஆப்பிள் ஐபோன் போன்றதொரு பிராண்டாக 'பிக்ஸல்' உருவெடுக்க வேண்டும் எனக் கருதியது கூகுள். அதனாலேயே அதிக வசதிகள், அதிக விலை என ப்ரீமியம் ஏரியாவில் களம் கண்டது. இதுவரை நான்கு தலைமுறை பிக்ஸல் போன்கள் வெளிவந்துவிட்டன. மென்பொருள் அனுபவமும் அசத்தலான கேமராவும் பிக்ஸலின் ஹைலைட்களாக இருந்தன. தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆனால் கூகுள் எதிர்பார்த்த வரவேற்பு இந்த போன்களுக்கு கிடைக்காமலேயே இருந்தது.
இறுதியாக ஸ்மார்ட்போன் விற்பனையில் கூகுளுக்கு ஒரு பூஸ்ட் கொடுத்தது கடந்த வருடம் அறிமுகமான பிக்ஸல் 3a. இதை 'பட்ஜெட் பிக்ஸல்' என்றது கூகுள். ப்ரீமியம் பிக்ஸல் போன்களின் முக்கிய சிறப்பம்சமான கேமராவை அப்படியே குறைந்த விலைக்கு எடுத்துவந்தது கூகுள். மற்ற விஷயங்களில் 'ஆஹா ஓஹோ' என எதுவும் இல்லை. ஆனால் மென்பொருள் அனுபவத்திற்காகவும் இந்த கேமராவுக்காகவும் பலரும் பிக்ஸல் 3a-வை வாங்கினர். குறிப்பாகப் பெரிதாக கேம் எதுவும் ஆடாத எளிமையான நீட்டான ஒரு போன் வேண்டுமென நினைத்தவர்கள் பிக்ஸஸ் 3a-வை டிக் அடித்தனர். இந்தியாவில் விலை அதிகமாக இருந்ததால் மேற்கத்திய நாடுகளிலிருந்த அதே வரவேற்பு இங்கு இல்லை. ஆனால், மொத்தமாக கூகுளின் ஹார்டுவேர் கனவுகளை பிக்ஸல் 3a நனவாக்கியது. இதற்குப் பின் வெளியான 'பிக்ஸல் 4'தான் கடந்த வருடம் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். விலைக்கும் போனுக்கும் சம்பந்தமே இல்லை என மொத்தமாக நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கூகுளுக்கு அதன் பட்ஜெட் 'a' வெர்ஷன்தான் கைகொடுக்க வேண்டும் என்ற நிலை. பல மாதங்களாக வரும் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த பிக்ஸல் 4a-வை இறுதியாக அறிமுகம் செய்துவைத்திருக்கிறது கூகுள். விரைவில் பிக்ஸல் 4a 5G, பிக்ஸல் 5 ஆகிய போன்களையும் எதிர்ப்பார்க்கலாம் என்றும் அறிவித்திருக்கிறது கூகுள்.
இதுவரை வெளியான பிக்ஸல் போன்களிலேயே விலை குறைந்த மாடல் இந்த பிக்ஸல் 4a தான்.
பிக்ஸல் 4a-ல் என்ன ஸ்பெஷல்?
கடந்த ஆண்டு வெளியான பிக்ஸல் 3a-ன் அப்டேட்டட் வெர்ஷனாகவே இருக்கிறது பிக்ஸல் 4a. ஏற்கெனவே, இதன் ஸ்பெக்ஸ் பற்றிப் பல தகவல்கள் கசிந்திருந்தன. கிட்டத்தட்ட அனைத்துமே சரியாகவே இருந்திருக்கிறது. 5.81 இன்ச் Full-HD AMOLED டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் 6 இன்ச் அளவிற்குக் கீழான டிஸ்ப்ளேவை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக ஆகிவிட்டது. அதனால் கைக்கு அடக்கமான ஒரு காம்பாக்ட் போன் எதிர்பார்ப்பவர்கள் இந்த போனை டிக் அடிக்கலாம்.
மற்றபடி இன்று பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இருப்பது போல 3, 4 கேமராக்கள் எல்லாம் கிடையாது. முன்பக்கம் ஒரு 8MP கேமராவும், பின்பக்கம் 12.2 MP கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட பிக்ஸல் 4-ல் இருக்கும் அதே கேமரா பர்ஃபார்மென்ஸ். இந்த கேமராக்கள் எடுக்கும் படங்கள் ப்ரீமியம் ஐபோன்கள் எடுக்கும் படங்களுடன் நேருக்கு நேர் வைத்துப் பார்க்கலாம். கேமராதான் இதன் முக்கிய ஹைலைட். ஷேக் இல்லாமல் வீடியோ எடுக்க OIS மற்றும் EIS என இரண்டு Stabilization வசதிகளும் உள்ளன. எப்போதும் போல பின்புறம் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். முதல்முறையாக பஞ்ச் ஹோல் கேமரா கொடுத்திருக்கிறார்கள். இதனால் 3a போல பெரிய பேஸல்கள் இல்லாமல் முழுமையான டிஸ்ப்ளே அனுபவம். பேட்டரியை பொறுத்தவரையில் 3,140 mAh கொடுத்திருக்கிறார்கள். USB-C வழி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. மிட்ரேஞ்ச் Snapdragon 730G புராசஸர் கொடுத்திருக்கிறார்கள். ரெட்மி K20, ரியல்மீ X2-ல் இருக்கும் அதே புராசஸர். இன்றைய சூழலில் கொஞ்சம் பழைய பிராசஸர்தான். 5G சப்போர்ட்டும் இல்லை.
கூகுளின் போன் என்பதால் மென்பொருள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 உடன்தான் வெளிவரும். ஆண்ட்ராய்டு 11-ம் முதலில் பிக்ஸலுக்குத்தான் வரும். மூன்று வருடங்களுக்கு உறுதியாக ஆண்ட்ராய்டு அப்டேட்கள் அனைத்தும் இந்த போனுக்கு வந்துவிடும்.
Also Read: ஒன் பிளஸ்... என்ன பிளஸ்?
மொத்தமாகவே ஒரே ஒரு வேரியன்ட்தான். 6GB RAM / 128GB, கருப்பு (Just Black).
சர்வதேச அளவில் இதன் விலை 349 டாலர்களாக (இந்திய மதிப்பில் 26,250 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒன்ப்ளஸ் நார்டை விடவும் குறைவான விலை. ஆனால், இந்தியாவில் அப்படி வரும் எனச் சொல்ல முடியாது. மொத்தமாக போனை இறக்குமதி செய்வதால் ஐபோன்களை போல இந்திய விலை எப்போதும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, லண்டன், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வரும் இந்த மாதமே பிக்ஸல் 4a கிடைக்கும். தற்போதைய சூழலில் இந்தியாவில் விற்பனைக்கு வர அக்டோபர் ஆகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். தீபாவளிக்கு முன் இங்கு எடுத்துவர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. முந்தைய பிக்ஸல் போன்களை போல இதுவும் ப்ளிப்கார்ட்டில் மட்டும் கிடைக்கும். விலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்தியாவில் தற்போது நிலவும் சீன எதிர்ப்பு மனநிலை கூகுளுக்கு கைகொடுக்கலாம். கிட்டத்தட்ட இந்த விலையில் இருக்கும் முக்கிய போன்கள் அனைத்துமே சீனத் தயாரிப்புகள்தான்.
இங்கு விலை 30,000 ரூபாய்க்கும் கீழ் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் இந்தியச் சந்தையில் தற்போது இருக்கும் போட்டியில் கூகுள் தாக்குப்பிடிப்பது கடினமே!
கூகுள் பிக்ஸல் 4a பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!
source https://www.vikatan.com/technology/gadgets/google-takes-the-budget-route-again-hows-pixel-4a-firstimpressions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக