Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

பா.ஜ.கவின் `ஆபரேஷன் நார்த் தமிழ்நாடு', செம அப்செட்டில் செல்லூர் ராஜூ... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

பா.ஜ.க-வின் ஆபரேஷன் நார்த்!

சென்னை, ஆயிரம் விளக்கு தி.மு.கழக எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், உதயநிதிக்கு நெருக்கமான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுவுக்கு, மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதில் கு.க.செல்வம் உட்பட கட்சியின் சீனியர்கள் பலரும் ஏக அப்செட். அடுத்த இடியாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியை உதயநிதிக்கு கொடுக்கப்போவதாக வந்த தகவல் கு.க.செல்வத்தைக் கதிகலங்க வைத்துவிட்டது. பா.ஜ.க-வில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு தி.மு.க ரூட் போடுவதால், பதிலுக்கு கு.க.செல்வத்தை பா.ஜ.க-வுக்கு இழுத்துவர கட்சியின் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தினார்கள். இதற்கிடையே ஆகஸ்ட் 4-ம் தேதி மதியம் கு.க.செல்வம், பா.ஜ.க தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை டெல்லியிலிருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மேலும், இந்த சந்திப்பு குறித்து பேசிய செல்வம், ``நான் பா.ஜ.க-வில் இணையவில்லை; என் தொகுதி பிரச்னை குறித்து பேசதான் வந்தேன். நல்லாட்சி நடத்தும் மோடியை விமர்சிக்கும் ராகுல் காந்தியுடனான தொடர்பை தி.மு.க துண்டித்துக்கொள்ள வேண்டும். இதற்காக முடிந்தால் என்மீது தி.மு.க நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்றெல்லாம் அதிரடியாக பேசியிருக்கிறார். இது தி.மு.க தலைமையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஜே.பி.நட்டா

பா.ஜ.க தரப்பிலோ, ``இந்த அதிரடி இத்துடன் முடியாது” என்பவர்கள், ``வருமானவரித்துறை வழக்குகளால் சிக்கலில் ஆழ்ந்துள்ள வன்னியர் சமூக தி.மு.க எம்.பி-க்கும் வலைவிரித்துள்ளோம். அவரை கட்சிக்குள் கொண்டுவந்த பிறகு, மலைவாசஸ்தலத்தில் தற்போது குடியிருக்கும் முக்கியத் தலைவரையும் பா.ஜ.க-வுக்குள் இழுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு `ஆபரேஷன் நார்த் தமிழ்நாடு’ என்று பெயர் வைத்துள்ளோம்” என்றார்கள். இந்த ஆட்டம், அடுத்தடுத்த வாரங்களில் சூடுபிடிக்கும் என்கிறது கமலாலய வட்டாரம்.

தாமரை மலர்ந்தே தீருமா - வட தமிழகத்திலாவது!

Also Read: ஜெ.அன்பழகன் பொறுப்பு யாருக்கு? வலுக்கும்போட்டி... குழப்பத்தில் ஸ்டாலின்!

அமுக்கப்பட்ட அரிசி மூட்டைகள்!

நீலகிரி எம்.பி-யான ஆ.ராசா 30 டன் அரிசியை நிவாரணமாக வழங்கியுள்ளார். அதை கட்சி நிர்வாகிகள் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்று வழங்கி வந்துள்ளனர். குன்னூர் அருகேயுள்ள ஒரு கிராமத்துக்கு அரசியைக் கொண்டுசெல்லும்போது, அது தடைவிதிக்கப்பட்ட பகுதி என்பதால், `அனுமதி பெற்ற பிறகு வழங்குங்கள்’ என்று அதிகாரிகள் சொல்லிவிட்டனராம். கட்சியினரும் அங்குள்ள எஸ்டேட் குடோனில் அரிசியை வைத்துவிட்டு பத்து நாள்கள் கழித்து அனுமதி பெற்ற பின்னர் மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதன் பிறகு இதையே சாக்காக்கிகொண்ட நிர்வாகிகள் சிலர், எந்தக் கிராமத்திலிருந்து தொண்டர்கள் நிவாரண உதவிகளைக் கேட்டாலும் ஒரே பதிலாக, ``ராசா கொடுக்கச் சொன்ன அரிசியில் கணிசமானதை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். அதனால் யாருக்கும் தர முடியவில்லை. அரிசி மூட்டைகளை மீட்டதும் கொண்டுவந்து தருகிறோம்’’ என பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து வருகின்றனராம். உண்மையை அறியாத அப்பாவி தொண்டர்களும், அரிசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

புளுகு மூட்டை!

ஆ.ராசா

குமரி காங்கிரஸ் குஸ்தி!

சட்டசபைத் தேர்தலுக்காக இப்போதே தயாராகி வருகிறது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ். குமரி மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. வரும் தேர்தலிலும் கூட்டணி உடன்பாட்டில் இதே தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள். அதேசமயம், இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் பேச்சிருக்கிறது. விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ-வான விஜயதரணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் எந்த வேலையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வான பிரின்ஸ், நாடாளுமன்றத் தேர்தலில் வசந்தகுமாருக்கு எதிராக உள்ளடி வேலைகள் செய்ததாகக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். `விஜயதரணி, பிரின்ஸ் இருவருமே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டனர். எனவே, இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை குரல்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

கூட்டணியில் முதலில் சீட்டு கிடைக்குமா?

புகழ்ந்த கந்தசாமி... கடுப்பான கமலக்கண்ணன்!

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புதுவை அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அமைச்சர் கந்தசாமி, தொகுதி எம்.எல்.ஏ-வான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரப்பிரியங்காவை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டார். கடுகடுத்த முகத்துடன் மைக் பிடித்த அமைச்சர் கமலக்கண்ணன், ``இந்த மந்திரி பதவி காங்கிரஸ் தலைவர்கள் போட்ட பிச்சை. அந்த நன்றியை யாரும் மறந்துவிடக் கூடாது. அமைச்சர் கந்தசாமிக்கு, எம்.எல்.ஏ சந்திரப்பிரியங்கா வேண்டப்பட்டவர் என்றால், அதை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இது காங்கிரஸ் கட்சியின் மேடை. கட்சிக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களைப் பற்றி அமைச்சர் கந்தசாமி பேசுவதை நான் ஏற்க முடியாது’’ என்று அனலைக் கக்கிவிட்டார். இதன் தொடர்ச்சியாக அங்கேயே அமைச்சர் கந்தசாமியை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டனர். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன், கட்சிக்காரர்களை சமாதானப்படுத்தி கந்தசாமியை பாதுகாப்பாக புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது இதுதானோ!

நீக்கப்பட்ட தி.மு.க நிர்வாகிகள்... காளையார்கோவில் கொந்தளிப்பு!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் மண்டை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து காளையார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் மார்த்தாண்டன், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் மேப்பல் சக்தி, சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் செயலாளர் சுப.முத்துராமலிங்கம் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் கட்சி நீக்கியது. இந்த நீக்கத்துக்கு சிவகங்கை மாவட்டச்செயலாளரான பெரிய கருப்பன்தான் காரணம் என்று சொல்பவர்கள், ``பெரியகருப்பன் தன் உறவினர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார். தனக்கு வேண்டப்படாதவர்கள்மீது புகார் கடிதங்களை மேலிடத்துக்கு அனுப்புகிறார்’’ என கொந்தளிப்பில் இருக்கிறது கட்சி வட்டாரம்.

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன்?

``ஆளுங்கட்சியை முத்துசாமி ஏன் எதிர்க்கவில்லை?’’

தி.மு.க-வின் ஈரோடு தெற்கு மாவட்டச்செயலாளர் முத்துசாமி மீது உடன்பிறப்புகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். வடக்கு மாவட்டச்செயலாளரான நல்லசிவம் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்கிறார். ``அதுபோல முத்துசாமி ஏன் எதிர்க்கவில்லை?’’ என தி.மு.க தொண்டர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ``ஏற்கெனவே முத்துசாமியின் செயல்பாடுகள் பிடிக்காமல், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் எனப் பலரும் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். இப்படியே சென்றால் 2016 தேர்தலைப்போன்று ஈரோடு மாவட்டத்தில் ஒரு சீட்கூட தி.மு.க ஜெயிக்க முடியாது’’ எனக் குமுறுகின்றனர்.

முத்துசாமி, கெத்துசாமியா மாறுவது எப்போது?

செல்லூர் ராஜூ

அப்செட்டான செல்லூர் ராஜூ!

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக செல்லூர் ராஜூவும் புறநகர் மாவட்டச் செயலாளராக ராஜன் செல்லப்பாவும் இருந்துவந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தனர். கிழக்கு மாவட்டச்செயலாளராக ராஜன் செல்லப்பாவையும், மேற்கு மாவட்டச்செயலாளராக ஆர்.பி.உதயகுமாரையும் கட்சி நியமித்தது. இதன்மூலம் செல்லூர் ராஜூ லிமிட்டில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா லிமிட்டில் தலா மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் இருந்து வருகின்றன.

இந்தநிலையில் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.எஸ்.சரவணனுக்கு பொறுப்பு அளிக்கும் வகையிலும், சௌராஷ்டிரா சமுதாய வாக்குகளை தக்க வைப்பதற்காகவும் மதுரை மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க ஆர்.பி.உதயகுமார் முயற்சித்து வருகிறாராம். செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா கட்டுப்பாட்டிலுள்ள தொகுதிகளிலிருந்து தலா ஒன்றை எடுத்து நான்காவது மாவட்டத்தை உருவாக்க முயற்சி நடைபெறுவதால், செல்லூர் ராஜூவும் ராஜன் செல்லப்பாவும் கடும் அப்செட்டில் இருக்கின்றனராம்!

பிரிச்சு பிரிச்சு விளையாடுவோமா?

``அந்த விஷயத்துல மட்டும்தான் அதிகாரி வீக்!’’

மத்திய மாவட்டம் ஒன்றில் கல்வித்துறை உயரதிகாரியாக பணியாற்றும் கடவுள் பெயர் கொண்ட ஒருவர் பெண்கள் விஷயத்தில் படு வீக்காம். இதனால், ஏகப்பட்ட பணிகள் தேங்கிக்கிடப்பதாக, உடன் பணியாற்றுபவர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியின்போது, சில ஆசிரியைகளை இரவு எட்டு மணிக்கு மேலும் வீட்டுக்கு அனுப்பாமல் அந்த உயரதிகாரி டார்ச்சர் செய்துள்ளார். மேலும் சில ஆசிரியைகளுக்கு தினமும் வாட்ஸ் அப்பில் `குட்மார்னிங்’, `குட்நைட்’ மெசேஜ் அனுப்பி வழிந்துள்ளார். ஆசிரியைகளின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் வரை விவகாரத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள். அந்த உயரதிகாரியை நேரில் அழைத்து ஆட்சியரும் ஏக டோஸ் விட்டுள்ளார்.

இதற்கு முன்பு கடற்கரை மாவட்டம் ஒன்றில் அந்த அதிகாரி பணியாற்றியபோது, பெண் விவகாரத்தால்தான் மற்றொரு கடற்கரை மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அங்கும் அதே வழிசல்கள். அங்கேயிருந்துதான் தற்போது இருக்கும் மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார் என்கிறார்கள். ``பணம், காசு விஷயத்துல எல்லாம் இவர்மேல புகார்கள் கிடையாது. பெண்கள் விஷயத்துலதான் இப்படி வீக்கா இருந்து பேரைக் கெடுத்துக்குறார்’’ என்கிறார்கள் அதிகாரிகளின் நலன் விரும்பிகள்.

வழிசல்கள் ஓய்வதில்லை!



source https://www.vikatan.com/government-and-politics/news/mr-kazhugar-updates-on-bjps-operation-north-tamilnadu-and-recent-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக