ஓ.எல்.எக்ஸ் (OLX) இணைய தளத்தில், கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட மிக்-23 ரக விமானம் விற்பனைக்கு வந்துள்ளதாக விளம்பரம் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த விளம்பரத்தின் ஸ்கீரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த மிக்-23 ரக போர் விமானம் ஜனவரி 24, 1981 அன்று இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. 1999-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், 28 ஆண்டுகள் இந்திய விமானப்படைக்கு சேவையாற்றியது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த விமானம் ஓய்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு (AMU) பரிசாக வழங்கப்பட்டது. இந்திய விமானப் படையிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழத்துக்கு வழங்கப்பட்ட முதல் விமானம் இதுதான்.
ஓய்வு பெற்ற போர் விமானங்களை பல்கலைக்கழகங்கங்களுக்கு பரிசளிப்பது இந்திய விமானப் படையின் வழக்கம். டெல்லியில் உள்ள சில பள்ளிகளுக்குகூட ஓய்வுபெற்ற போர் விமானங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2009-ல் ஏ.எம்.யூ வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த போர் விமானத்தைக் கொண்டு, பொறியியல் மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த விமானம் ஓ.எல்.எக்ஸில் விற்பனைக்கு வந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
அந்த ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தில், போர் விமானத்தின் விலை 9,99,99,999 ரூபாய் என்றும் `சிறந்த போர் விமானம்' என்றும் குறிபிடப்பட்டிருந்தது.
போர் விமான விளம்பரம் வைரலானதை தொடர்ந்து ஓ.எல்.எக்ஸ் இணையதளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. போர் விமான விளம்பரம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரியும் பேராசிரியருமான முகமது வாசிம் அலி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார்.
பல்கலைக்கழகம்தான் போர் விமானத்தை விற்பனை செய்ய முன் வந்துள்ளதா? என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக தரப்பிலிருந்து இது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: ரஃபேல் போர் விமானம்... காங்கிரஸ் முதல் பி.ஜே.பி. வரை... நடந்தது என்ன? #AtoZReport
கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபபாய் படேல் சிலை, ஓ.எல்.எக்ஸில் 30,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது பரப்பரப்பை கிளப்பியது. இப்போது போர் விமானம் 9.99 கோடி ரூபாய்க்கு விற்பனை என்று ஓ.எல்.எக்ஸில் வந்த விளம்பரம் மீண்டும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/kargil-fighter-plane-mig-23-is-for-sale-on-olx-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக