Ad

செவ்வாய், 13 டிசம்பர், 2022

``உதயநிதி ஸ்டாலின் எனும் நான்...." - இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரானார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படுகிறது. அமைச்சரவையில், உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.மேலும், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையின் அருகே வைக்கப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/udhayanidhi-stalin-sworn-as-the-tamilnadu-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக