Ad

செவ்வாய், 13 டிசம்பர், 2022

புற்றுக்களாக முளைத்து வரும் புத்தூர்கட்டு மருத்துவமனைகள்...

விபத்தின் காரணமாக கை, கால் என உடலில் எங்கு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் புத்தூர் கட்டு போட்டால் சரியாகி விடும் என பலரும் அதனை நம்பிச் செல்கின்றனர். எலும்பு முறிவுக்காக போடப்படும் கட்டுக்கு, புத்தூர் பிரசித்தி பெற்றது. நாளடைவில் புத்தூர் கட்டு என்கிற பெயரில் பல பகுதிகளிலும் வைத்திய சாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புத்தூர் கட்டு என்றால் என்ன... மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட சூழலில், இது போன்ற நாட்டு வைத்தியத்தை நாடலாமா என்கிற கேள்விகளோடு சென்னையைச் சேர்ந்த எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் கோகுல்ராஜை சந்தித்தோம்...

கோகுல்ராஜ்

``எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உடைந்த எலும்புகள் சேர்ந்திருந்தால் அவை தானாகவே ஒட்டிக்கொள்ளும். முறிந்த எலும்புகளை சரியான பொசிஷனில் வைப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. இதற்காகத்தான் எலும்பு முறிவுக்கு கட்டு போடப்படுகிறது. புத்தூர் கட்டு என்கிற நாட்டு வைத்தியம் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு முறிவு ஏற்பட்டால் ஒருவித பச்சிலையை அரைத்து அதனை மேலே தடவி விட்டு, மூங்கில் துண்டுகளை சுற்றிலும் வைத்து, முட்டையின் வெள்ளைக்கருவை துணியில் தொட்டு முழுவதும் தடவிக் கட்டுப்போடுவார்கள். இதைத்தான் புத்தூர் கட்டு என்று சொல்கிறார்கள்.

நம் உடலில் சருமம், சருமத்தின் அடியில் கொழுப்பு, அதற்கடியில் தசை, அதற்கும் அடியில் எலும்பு என சில அடுக்குகள் இருக்கும். இவர்கள் தடவும் பச்சிலை இந்த அடுக்குகளை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்படி வினையாற்றுகிறது. இதன் காரணமாக அப்பகுதியே இறுகிப்போய் விடுகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் எலும்பு கூடாவிட்டாலுமே கூடி விட்டதைப் போன்ற உணர்வைக் கொடுத்து விடுகிறது. இதனால் முழுமையாக குணமடைந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள். இது மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.

ஆண்டாண்டு காலமாகச் செய்து வரும் இந்த நாட்டு வைத்தியத்தை முற்றிலும் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை. இது எந்த அளவுக்கு அறிவியல்பூர்வமாக பிரச்னையை அணுகுகிறது என்பதுதான் முக்கியம். தசையில் அடிபட்டாலுமே கூட எலும்பு முறிவுக்கான சிகிச்சையையே வழங்குகின்றனர்.

விபத்தின் காரணமாக எலும்பு வெளியே தெரிகிற அளவுக்கு காயம் ஏற்பட்டால், ரத்தக்குழாய் மற்றும் நரம்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டிருக்கலாம். அப்படியான சூழலில் அறுவை சிகிச்சை மூலம் 6 மணி நேரத்துக்குள் அதனை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், ரத்த ஓட்டம் செல்லாமல் குறிப்பிட்ட அந்தப் பகுதி அழுகிப்போய் விடும். எலும்பு வெளியே தெரிகிற அளவிலான மோசமான காயத்துக்கும் இதே பச்சிலைக் கட்டு போட்டார்கள் என்றால் அதன் விளைவு மிகக்கொடியதாக இருக்கும்.

புத்தூர் கட்டு

புத்தூர் கட்டு போடும் மையங்களிலும் எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கிறார்கள் என்று சொன்னாலுமே கூட, அதை எப்படியாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிந்தவர்களால்தான் முறையான சிகிச்சையை வழங்க முடியும். எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை சார்ந்து நான்கு ஆண்டுகள் படித்துவிட்டு வருகிறவர்களுக்குதான் தசைகள், ரத்தக்குழாய், எலும்பு என அனைத்தைப் பற்றியும் தெரியும். ஒவ்வொரு காயமும் ஒவ்வொரு விதமானது. அதன் தன்மைக்கேற்ப எப்படி சிகிச்சை வழங்க வேண்டும் எனத் தெரியும். எலும்பு முறிவு என்றாலும் அது எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்பது முக்கியம்.

உடலின் ஒவ்வொரு பகுதிக்குமான தனித்தனியான சிகிச்சைகள் இருக்கின்றன. இதனையெல்லாம் முறையாகக் கற்றுத் தேர்ந்த பிறகுதான் எலும்பு மற்றும் மூட்டு சார்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வருகிறோம். புத்தூர் கட்டு என்கிற நாட்டு வைத்தியத்தில் இவ்வளவு நுட்பமாக சிகிச்சை மேற்கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி" என்றவர் அலோபதியில் மேற்கொள்ளப்படும் எலும்பு முறிவு சிகிச்சை பற்றி பேசினார்.

``அலோபதியில் எலும்பு முறிவுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (plaster of paris) எனப்படும் வெள்ளைநிறப் பொடியைக் கொண்டு மாவுக்கட்டுப் போடுவோம். இப்போது அதற்கும் நவீனமாக ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. மாவுக்கட்டில் கூட எலும்பு கூடி விட்டதா எனப் பார்க்க கட்டைப் பிரித்துதான் எக்ஸ் ரே எடுக்க வேண்டியிருக்கும். ஃபைபர் கிளாஸை பொறுத்தவரை, அதனை மாட்டிக் கொண்டே எக்ஸ் ரே எடுக்கலாம். எலும்பு முறிவு அனைத்துக்குமே கட்டுப் போடப்படும் என்றில்லை. அதன் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை கூட மேற்கொள்வோம். இவை அனைத்துமே மருத்துவ அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படும். புத்தூர் கட்டைப் பொறுத்தவரை இந்த ஒழுங்குமுறை இருக்காது. பல்வேறு வைத்திய சாலைகள் முளைத்திருக்கின்றன. இவை அனைத்திலும் பாரம்பர்ய புத்தூர் கட்டின் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறதா... எலும்புமுறிவின் தன்மைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படுகிறதா... என்று பல கேள்விகள் இருக்கின்றன. முறைப்படுத்தப்படாத வைத்திய முறையாக அவை இருக்கின்றன என்பதால் கவனம் தேவை" என எச்சரிக்கிறார் மருத்துவர் கோகுல்ராஜ்.



source https://www.vikatan.com/health/healthy/fracture-can-puthur-kattu-remedies-be-trusted

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக