Ad

ஞாயிறு, 5 ஜூன், 2022

தேமுதிக தலைவராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்... கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மேலும், அந்தக் கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதனால் துவண்டுபோயிருக்கும் கட்சியைத் தூக்கி நிறுத்துவதற்கு சில திட்டங்களை தே.மு.தி.க பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் வகுத்திருப்பதாக அந்தக் கட்சியினர் கூறுகின்றனர்.

விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற புதிய கட்சியை மதுரையில் 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்காலத்திலேயே 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்கொண்டது. அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை விஜயகாந்த் களமிறக்கினார். ஆனால், அதில் விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார். வட மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் தொகுதியில் அவர் வெற்றிபெற்றார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. அந்த வாக்குகள் அ.தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதனால், அரசியல் களத்தில் அனைவரின் பார்வையும் தே.மு.தி.க-வை நோக்கித் திரும்பியது. அடுத்ததாக, 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டது. அதிலும், தனது வாக்குவங்கியை அந்தக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.

விஜயகாந்த், பிரேமலதா

பின்னர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கைகோத்தது. அதில், 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். அதன் பிறகு, அ.தி.மு.க - தே.மு.தி.க இடையிலான கூட்டணி முறிந்தது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது. பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட அந்தத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியை பா.ஜ.க பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெறவில்லை. அதோடு சேர்ந்து தே.மு.தி.க-வும் தோல்வியடைந்தது. 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் வேட்பாளர்களில் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.

விஜயகாந்த்

அந்தத் தேர்தலில் தே.மு.தி.க-வின் வாக்குவங்கி 5.1 சதவிகிதமாக சரிந்தது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களிலும் தே.மு.தி.க சரிவைச் சந்தித்தது. அந்த வகையில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க தேர்தலைச் சந்தித்தது. அதிலும் தே.மு.தி.க தோல்வியடைந்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிதம் 2.41-ஆகச் சுருங்கியது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது. அந்தத் தேர்தலிலும் தே.மு.தி.க-வுக்கு தோல்வியே கிடைத்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து தே.மு.தி.க போட்டியிட்டது. அதிலும் தோல்வியே கிடைத்தது.

தே.மு.தி.க-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் வெளியேறிய நிலையில், அந்தக் கட்சியின் கட்டமைப்பும் பலவீனமடைந்தது. இது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்தது.

மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்

தே.மு.தி.க-வின் தொடர் தோல்விகளால் விரக்தியடைந்த அந்தக் கட்சியினர் வேறு கட்சிகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, தே.மு.தி.க-வை அந்தக் கட்சியின் பொருளாளரான பிரேமலதா வழிநடத்திவருகிறார். தே.மு.தி.க-வின் உட்கட்சித் தேர்தல் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது உட்கட்சித் தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யவேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், தே.மு.தி.க-வை வலுப்படுத்துவதற்கு பிரேமலதா பல அதிரடித் திட்டங்களை வகுத்திருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 78 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்துவது குறித்தும், உட்கட்சித் தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன.

கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா

முக்கியமாக, கட்சியின் தலைவர் பதவியை பிரேமலதா ஏற்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே இருப்பதால், தலைவராகப் பொறுப்பேற்குமாறு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பிரேமலதாவை வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/is-premalatha-going-to-become-president-of-dmdk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக