Ad

ஞாயிறு, 5 ஜூன், 2022

ENG vs NZ: Fab 4-ல் தொடரும் ஜோ ரூட் ஆதிக்கம்; இங்கிலாந்துக்கு நம்பிக்கைக் கொடுத்த கோச் மெக்கல்லம்!

நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் வெற்றியோடு, டெஸ்டில் ஒரு புது சகாப்தத்தை எழுதத் தொடங்கியுள்ளது, ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி.

உலகின் ஒரு முனையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வி முகத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அதே சமயம்தான் ஆஷஸ் அவமானத்தோடு இங்கிலாந்தும் பாடம் கற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவை விடவும் இங்கிலாந்து அதனை இன்னமும் கவனமாக அணுக வேண்டிய அவசியமிருந்தது. ஆஷஸுக்குப் பின் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் கண்ட சூடு மட்டுமல்ல, மொத்தமாகக் கடந்த 17 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வென்றிருந்ததும், டெஸ்ட் சாம்பியன்ஸிப் பட்டியலில் கடைசியாக இருப்பதுவும் முக்கியக் காரணம்.

ரூட்டின் விலகல், ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாகப் பதவியேற்றது ஆகியவற்றையும் தாண்டி மெக்கல்லமின் கையில் பயிற்சியாளர் பதவி கொடுக்கப்பட்டதும் ரெட்பால் கிரிக்கெட்டுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது. அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரே அவரது முதல் ப்ராஜெக்டாக மாறியதும் சுவாரஸ்யம் கூட்டியது. சரி, இது எந்தளவு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது?!

ENG vs NZ

போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மெக்கல்லம் இங்கிலாந்து பௌலர்களிடம், "நீங்கள் மணிக்கணக்காகப் பந்துவீசி அழுத்தமேற்றிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ரன்கள் கசியட்டும், கவலையில்லை. எனக்கு விக்கெட்டுகள் தேவை. முதல் பந்திலிருந்து அட்டாக்கிங் பாணியிலேயே வீசுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் துரும்பிலேயே கிள்ளி எறியும் அணுகுமுறைதான் அது. அந்த வார்த்தைகளை அப்படியே உயிர்பெற வைத்தனர் இங்கிலாந்து பௌலர்களும், கேப்டனும். ஆறு ஸ்லிப்களை எல்லாம் வைத்து அட்டாக் செய்தார் ஸ்டோக்ஸ்.

ஒரு தொடரில் வெளியே உட்கார வைக்கப்பட்ட போதே ஆண்டர்சன் - பிராடின் ஓய்வுரை வரை பலர் தயாரிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால், இப்போட்டியில் இந்த அபாயகரமான இரட்டையர்கள்தான் 20-ல் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். புதுப்பந்து, அதுவும் ஸ்விங்காகும் புதுப்பந்து சீம் மொமெண்டோடு கைகொடுக்கும் இங்கிலாந்து சூழல், எல்லாமுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கான சொர்க்கபுரியாக லார்ட்ஸை எப்போதும் மாற்றும். கூடவே ஆண்டர்சனின் மேஜிக்கும் சேர, தான் வீசிய 13 பந்துகளுக்குள்ளாகவே ஓப்பனர்கள் லாதம், வில் யங்க் இருவரையுமே அனுப்பிவைத்தார். பிராடும், கான்வேயை வெளியேற்றி வெறித்தனம் காட்டினார். 37/6 என இந்தியாவின் 45 மினிட்ஸ் ஆஃப் பேட் கிரிக்கெட் கிளப்பிற்கு விசிட் அடித்தது நியூசிலாந்து.

ENG vs NZ

இந்த ஆறில் மூன்று, அறிமுக வீரரான மேத்யூ பாட்ஸால் எடுக்கப்பட்டவைதான். சமீபத்தில் கவுண்டி வட்டாரத்தில் தனது அசத்தலான பந்துவீச்சால் மின்சாரத்தைப் பாய்ச்சிய பாட்ஸ், ஆறே போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதகளம் காட்டியதன் மூலமாக இங்கிலாந்து அணிக்குள் நுழைந்திருப்பவர். முதல் ஓவரே விக்கெட் மெய்டன் என்பதையும் தாண்டி, அதுவும் வில்லியம்சனின் விக்கெட் என்பதுவும்தான் கூடுதல் ஸ்பெஷல். அவரது பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகவில்லை என்றாலும், சீம் மொமெண்டோடு சரியான லைன் அண்டு லெந்த்தில் வீசப்படும் அவரது பந்துகள் குறிப்பாக Wobble பந்துகள், பேட்ஸ்மென்களைத் திணறடிக்கின்றன. இன்னமும் வேகத்தையேற்றும் பட்சத்தில் இங்கிலாந்தின் அடுத்து தலைமுறை பௌலராக அவர் உருவெடுக்கலாம்‌.

முதல் இன்னிங்ஸில், ஆண்டர்சனுக்கு இணையாக, மேத்யூ பாட்ஸும் 4 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கையூட்டி உள்ளார். வெறும் 132 ரன்களுக்கு நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து சுருட்டியது. சரியாக 40 ஓவர்கள் மட்டுமே அதற்குத் தேவைப்பட்டன.
மேத்யூ பாட்ஸ் | ENG vs NZ

பௌலர்கள் செய்த பணியை மேலும் சிறப்பிப்பதும் அர்த்தமுள்ளதாக்குவதும் பேட்ஸ்மென்கள் கையில்தானே உள்ளது? தற்போது இங்கிலாந்தின் பேட்டிங் லைன்அப் அத்தனை உறுதியானதாக இல்லை. ஆஷஸில்கூட ஆடிய 12 இன்னிங்ஸ்களில் 10-ல், 300 ரன்களுக்கும் கீழாகவே இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது. இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.

கன்கசனால் வெளியேறிய லீச்சுக்குப் பதிலாக, அறிமுக வீரரான பார்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தார். ஓப்பனர்கள் லீஸ் மற்றும் க்ராவ்லி மட்டுமே தங்கள் பங்குக்கு முறையே 25 மற்றும் 43 ரன்களைச் சேர்த்திருந்தனர். மற்ற 9 பேரில் யாருமே 11 ரன்களைக்கூடத் தாண்டவில்லை. சரிந்து விழுவதில் நியூசிலாந்துக்கே டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருந்தனர். 92/2 என இருந்த ஸ்கோர், அடுத்த ஐந்து ஓவர்களுக்குள் 100/7 என மாறியது. தறிகெட்டு ஓடி, விபத்துக்குள்ளாகப் போகிறது என்று தெரிந்தும், பிரேக்கை அழுத்த யாருமே முயலாதது போன்றுதான் இருந்தது.

ENG vs NZ
17 விக்கெட்டுகள் முதல் நாளிலேயே விழுந்தது பிட்சின் குற்றமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இன்னொரு முகம் பௌலர்களின் தனி ஆவர்த்தனமும், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து போன பேட்ஸ்மேன்களும்.

2015-ல் மார்கன் தலைமையேற்ற பின் முழுமையாக வெள்ளை வர்ணத்தை மட்டுமே சுமந்து ரெட் பூச்சை மொத்தமாக மறந்துவிட்டது போன்றே இங்கிலாந்தின் பேட்டிங் தென்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 ஃபிரேமில் ஆடுவது போன்ற அணுகுமுறைதான் இந்த வீழ்ச்சிக்கான காரணம். 59/0 - 141/10 என்பது மெக்கல்லமுக்கு சரி செய்ய வேண்டிய முதல் பழுதாக இருப்பது எது என்பதனைத் தெளிவுபடுத்தி இருக்கும். வெறும் ஒன்பது ரன்கள் முன்னிலையோடு முதல் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டதற்கு இதுவும் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் 56/4 என தடுமாறிய நியூசிலாந்தை கரை சேர்த்தது, மிட்செல் - ப்ளண்டல் பார்ட்னர்ஷிப். நிக்கோல்ஸின் காயம் காரணமாக இப்போட்டியில் ஆடக் கிடைத்த வாய்ப்பை மிட்செல் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். நான்கு விரைவான விக்கெட்டுகளுக்குப் பிறகு அணியை மீட்டெடுக்கும் ஆட்டமாக இவர்களுடையது அமைந்தது.

மிட்செல் - ப்ளண்டல்

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் குறிப்பிட்டிருந்ததைப் போல, "வெரைட்டி பௌலிங்" இல்லாத குறையை, அந்தப் புள்ளியில்தான் இங்கிலாந்து உணர்ந்தது. ஆர்ச்சர், மார்க் வுட் உள்ளிட்ட எட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக இத்தொடரில் ஆட முடியவில்லை. அதனால் நான்கு வலக்கை மீடியம் பேஸ் பௌலர்களுடன்தான் இங்கிலாந்து களமிறங்கியது. அதுவும் இரண்டாவது நாளின் பிற்பகுதியில் பிட்ச் ஃப்ளாட்டாக மாறத் தொடங்க, விக்கெட் எடுக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

அதனை மிகச் சரியாகப் பயன்படுத்தி இரண்டாவது நாள் ஆட்டத்தை மிட்செல் - ப்ளண்டல் இருவருமே 90-களில் முடித்தனர். மூன்றாவது நாளின் முதல் ஓவரிலேயே மிட்செல் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கனவான லார்ட்ஸ் சதம் மிட்செலுக்கு நனவானது. ஆனால், அங்கிருந்து இங்கிலாந்துக்குக் களம் காட்டாத கரிசனத்தை எடுத்த எடுப்பிலேயே நியூபால் காட்டியது.

அடுத்த 12 ஓவர்களுக்குள் மீதமிருந்த ஆறு விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வீழ்த்தியது. குறிப்பாக, நாளின் ஐந்தாவது ஓவராக பிராட் வீசிய ஓவரில் டீமின் ஹாட்ரிக் விக்கெட் சகலத்தையும் புரட்டிப் போட்டது. அதற்கடுத்தாக ப்ளண்டலை 96 ரன்களில் அனுப்பிய ஆண்டர்சன், அவரது சதமடிக்கும் கனவைப் பொடிப் பொடியாக்கினார். நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஒருவர் இங்கிலாந்தில் டெஸ்ட் சதமடிப்பது இன்னமும் நடந்தேறாத ஒன்றாகவே உள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய கோச்சான மெக்கல்லம்கூட, 2004-ல் 96 ரன்களோடுதான் லார்ட்ஸில் நடையைக் கட்டினார்.

டாம் ப்ளண்டல் | ENG vs NZ

இறுதியில் 285 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டி 276 ரன்களை தங்களது வெற்றிக்கான இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை 70 ரன்களை எட்டுவதற்குள் இழந்தது இங்கிலாந்து. ஜேமிசன்தான் இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிர்ச்சி ஆரம்பத்தை எதிரணிக்குக் கொடுத்தார். நியூசிலாந்து வரலாற்றில் ஜேமிசனை முதல் 15 இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை (72) எடுத்த பௌலராகவும் இந்த இன்னிங்ஸ் மாற்றியது. அதுவும் எடுத்த நான்கு விக்கெட்டுகளுமே, அந்தந்த ஓவரின் கடைசிப் பந்தில் விழுந்து, எந்தளவு அழுத்தத்தை அவர் ஏற்றியிருந்தார் எனவும் உணர்த்தியது.

நேரமும் ஓவர்களும் நிறையவே எஞ்சியிருந்ததை கொஞ்சமும் உணர்ந்தது போலில்லை பேர்ஸ்டோ உள்ளிட்ட பேட்ஸ்மென்கள். முடிவில், இங்கிலாந்தின் முன்னாள் - இந்நாள் கேப்டன்கள் ரூட் - ஸ்டோக்ஸுக்கு இடையேயான 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான், அவர்களுக்கான ஆதாரப்புள்ளியாக மாறியது. ஸ்டோக்ஸின் அரைசதம், கேப்டன் இன்னிங்ஸாக சரியான நேரத்தில் வந்தது.

61 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்துக்கு, ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்தால் நியூசிலாந்துக்கு என த்ரில்லிங் நொடிகள் கேரண்டியானது. ஆனால், இறுதியில் பந்துகள் எதிர்பார்த்தபடி ஸ்விங் ஆகவுமில்லை, கவனமின்றி ஆடி ரூட்டோ, ஃபோக்ஸோ விக்கெட்டுகளை விடவுமில்லை. கடைசி நேரத்தில் அஜாஸிடம் பந்தைத் தந்ததிலும் எந்த நன்மையும் ஏற்படவுமில்லை. ரூட், தன் 26-வது டெஸ்ட் சதத்தை அடித்ததோடு, 10000 ரன்களையும் கடந்தார். தலைவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணிக்கான அவரது பங்களிப்பில் மாற்றமேயில்லை. மிகச்சுலபமாக வெற்றியை நோக்கி அணியை எடுத்துச் சென்றது இக்கூட்டணி. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து.

ஜோ ரூட் | ENG vs NZ

டெஸ்ட் ஃபார்மட்டில் மொத்தமாக இங்கிலாந்தின் சாபம் முடிந்துவிட்டதா என்றால் "ஆம்" என்று அடித்துச் சொல்லிவிட முடியாது. ரூட் மற்றும் ஸ்டோக்ஸின் முதுகில் பயணிக்கும் அக்குறைபாடு இன்னமும் தொடர்கிறது. காயமடைந்த வீரர்களுக்கான லிஸ்டில் நீளும் வீரர்களும் உடல்தகுதியோடு திரும்பி வருவது, ஓப்பனர்கள் இன்னமும் சிறப்பான தொடக்கம் தருவது எனப் பலவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்தான். எனினும் லிமிடெட் ஃபார்மட்டுக்கு மட்டுமே மெக்கல்லமின் ஸ்ட்ராடஜி ஒத்து வரும் என எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இவ்வெற்றி.

ஹாட்ரிக்காக மூன்று டெஸ்ட் தொடர்களை நியூசிலாந்திடம் பறிகொடுத்துள்ள இங்கிலாந்துக்கு இந்த வெற்றி நம்பிக்கையோடு இந்தத் தொடரைத் தொடங்க வைத்துள்ளது. அது தொடருமா என்பதற்கு நடப்பு டெஸ்ட் சாம்பியன்கள்தான் அடுத்த போட்டியில் பதிலளிக்க வேண்டும்.


source https://sports.vikatan.com/cricket/england-manages-to-dominate-newzealand-in-the-first-match-of-the-series-played-at-lords

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக